Saturday, May 5, 2007

இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மனித உரிமைக்கான சர்வதேச விருது

இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மனித உரிமைக்கான சர்வதேச விருது
மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான மார்ட்டின் என்னல்ஸ் சர்வதேச விருது இலங்கையைச் சேர்ந்த இரண்டு பல்கலைக்கழக பேராசிரியர்களூக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் இந்த விருதினை புரூண்டியின் முன்னாள் பொலிஸ்காரர் ஒருவரும் பகிர்ந்துகொள்கிறார்.

இலங்கையின் இன மோதலில் இழைக்கப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டுவரும், அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், (யூ.டி.எச்.ஆர், ஜாப்னா) என்ற அமைப்பை நடத்திவரும் பேராசிரியர்கள் ராஜன் ஹுல் மற்றும் பேராசிரியர் கோபாலசிங்கம் சிறிதரன் ஆகிய இருவருக்குமே சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் இணைந்து வழங்கும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்றுள்ள பேராசிரியர் ராஜன் ஹுல்
அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட 11 மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் இந்த மனித உரிமைகள் விருதை, இந்த இலங்கை மனித உரிமையாளர்கள், புருண்டி நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு மனித உரிமை ஆர்வலர் பியர் க்ளேவர் ம்போனிம்ப்பா அவர்களுடன் இணைந்து பெறுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் அமைப்பின் நடுவர்கள் குழுத் தலைவர் ஹான்ஸ் தூலன் அவர்கள், ‘’இந்த மூவரும், ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதே ஆபத்தான ஒரு செயலாக ஆகிவிட்ட, அவர்கள் பணியாற்றும் நாடுகளில், மனித உரிமைகள் இயக்கத்தின் குறியீடாகத் திகழ்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார், இவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் சுதந்திரமாக இயங்க விடுமாறு, இலங்கை மற்றும் புருண்டி அரசுகளுக்கு இந்த விருதினை வழங்கும் 11 மனித உரிமை அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

நன்றி: பிபிசி

0 comments: