Thursday, October 11, 2007

இலங்கை வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு ரூபா 16,644 கோடி 70 இலட்சம் ஒதுக்கீடு

**உத்தேச மொத்த செலவினம் 92,505 கோடி 72 இலட்ச ரூபா

அடுத்த நிதியாண்டின் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலப் பிரேரணையை பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று புதன்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.

2008 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் உத்தேச மொத்த செலவினம் 92,505 கோடியே 72 இலட்சத்து 84 ஆயிரம் (92,505, 72, 84,000) ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது 2007 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூலம் அரசாங்கத்தின் மொத்த செலவினமாக மதிப்பிடப்பட்ட தொகையிலும் பார்க்க 11,561 கோடியே 37 இலட்சத்து 34 ஆயிரம் (11,561,37,34,000) ரூபா அதிகரிப்பை காட்டுகிறது.

2007 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமாக அவ்வாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் 80,944 கோடியே 35 இலட்சத்து 50 ஆயிரம் (80,944,35,50,000) ரூபா மதிப்பிடப்பட்டிருந்தது.

2008 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுக்கே அதிகபட்சமாக 16,644 கோடியே 70 இலட்சம் (16,644,70,00,000) ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2007 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திலும் இவ் அமைச்சுக்கே அதிகபட்சமாக 13,955 கோடியே 63 இலட்சத்து 33 ஆயிரம் (13,955,63,33,000) ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், இதனுடன் ஒப்பிடும் போது, அடுத்த ஆண்டுக்கென 2,689 கோடியே 6 இலட்சத்து 67 ஆயிரம் (2,689,06,67,000) ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதேநேரம், 2008 ஆம் ஆண்டில் பொது சேவைகளுக்காக கொடுக்கத்தக்க தொகைகளுக்காக 918 கோடியே 79 இலட்சத்து 37 ஆயிரம் (918,79,37,000) ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதில் அடக்கும் ஜனாதிபதிக்கான செலவினங்களுக்கென கடந்த முறையுடன் ஒப்பிடும்போது, இம்முறை 218 கோடியே ஒரு இலட்சத்து 28 ஆயிரம் (218,01,28,000) ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கான செலவினங்களுக்காக 357 கோடியே 77 இலட்சத்து 19 ஆயிரம் (357,77,19,000) ரூபா மதிப்பிடப்பட்டிருந்ததுடன், 2008 ஆம் ஆண்டுக்கென 575 கோடியே 78 இலட்சத்து 47 ஆயிரம் (575,78,47,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2008 ஆம் ஆண்டில் நிதி திட்டமிடல் அமைச்சுக்கான செலவினமாக 9,691 கோடியே 21 இலட்சத்து 59 ஆயிரம் (9,691,21,59,000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், தேசத்தை கட்டியெழுப்புதல், நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்கான செலவினங்களுக்காக அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் 5,428 கோடியே 21 இலட்சத்து 45 ஆயிரம் (5,428,21,45,000) ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டுக்கென சுகாதார அமைச்சின் செலவினங்களுக்காக 5,779 கோடியே 99 இலட்சத்து 98 ஆயிரம் (5,779,99,98,000) ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செலவினங்களாக 2008 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டமூலத்தில் 657 கோடியே 66 இலட்சத்து 75 ஆயிரம் (657,66,75,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சுக்கான அடுத்த வருட செலவினமாக 1,986 கோடியே 15 இலட்சத்து 92 ஆயிரம் (1,986,15,92,000) ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், போக்குவரத்து அமைச்சுக்கான 2008 ஆம் நிதியாண்டுக்கான செலவினமாக 3,818 கோடியே 41 இலட்சத்து 70 ஆயிரம் (3,818,41,70,000) ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சுக்கான செலவினங்களுக்காக 5,201 கோடியே 80 இலட்சத்து 93 ஆயிரம் (5,201,80,93,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சுக்கு 3,264 கோடியே 26 இலட்சத்து 18 ஆயிரம் (3,264, 26,18,000) ரூபாவும், மின்வலு, சக்தி அமைச்சுக்கு 3,172 கோடியே 61 இலட்சத்து 10 ஆயிரம் (3,172,61,10,000)ரூபாவும் அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் செலவினங்களாக மதிப்பிடப்பட்டுள்ளன.

இதேநேரம், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கான செலவினமாக அடுத்த ஆண்டுக்கென 7,890 கோடி (7,890,00,00,000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கென 11,476 கோடியே 95 இலட்சத்து 60 ஆயிரம் (11,476,95,60,000) ரூபா செலவினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவினங்களுக்காகவே இரண்டாவது அதிகபட்சமான தொகை ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இதன்கீழ் வரும் வடக்கு மாகாண சபைக்கான செலவினமாக 984 கோடியே 90 இலட்சம் (984,90,00,000) ரூபாவும், கிழக்கு மாகாண சபைக்கான செலவினமாக 1,051 கோடியே 10 இலட்சம் (1,051,10,00,000) ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சுக்கான செலவினங்களுக்காக 2,582 கோடியே 41 இலட்சத்து 58 ஆயிரம் (2,582,41,58,000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், உயர்கல்வி அமைச்சுக்கான அடுத்த ஆண்டு செலவினமாக 2,053 கோடியே 43 இலட்சத்து 17 ஆயிரம் (2,053,43,17,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

57 அமைச்சுகளுக்கான 2008 ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் தொடர்பான மதிப்பீடுகள் இந்த ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
2008 ஆம் நிதியாண்டுக்கான அரசின் மொத்த செலவினமாக 92,505 கோடியே 72 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ள அதேநேரம், அரசுக்காகவோ அல்லது அரசாங்கம் சார்பாகவோ இலங்கையில் அல்லது அதற்கு அப்பால் 74,090 கோடியே 35 இலட்சத்து 93 ஆயிரத்துக்கு அதிகப்படாத தொகையை மொத்த கடனாக பெற முடியுமெனவும் இந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1 comments:

Anonymous said...

அரசு,புலிகள் இருவருமே யுத்தத்தைத்தான் விரும்புகிறார்கள்.

இந்நிலை மாறும்வரை வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு அதிகமாகவே இருக்கும். இனி புலிகளின் பதுகாப்பு நிதி ஒதுக்கீடும் அதிகமாகவே செய்யும்.