Friday, October 5, 2007

வன்னிசென்ற குழுவில் பசில் இடம்பெற்றிருந்தமை தமிழ்ச்செல்வனின் அறிவிப்பின் மூலம் நிரூபணம்

விடுதலைப் புலிகளுடன் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் சார்பிலான குழு இரகசிய உடன்படிக்கை செய்து கொண்ட உண்மை வெளிவரத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சி, ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவின் மறுப்பை நிராகரிக்கும் வகையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பேட்டியளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் காலடி வைத்தவுடனேயே சபையை தவறாக வழி நடத்தும் விதத்தில் பொய் கூறியுள்ளார். அவரது கன்னி உரையே பொய்யாக அமைந்துவிட்டதாகவும் இதனையிட்டு அரசு தரப்பு வெட்கப்படவேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்ட உண்மை புலிகள் தரப்பினராலேயே அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் தன்மானமிருந்தால் அரசு உடனடியாக பதவி விலகவேண்டும். இனிமேலும் அரசு பதவியில் நீடிப்பதற்கு தார்மீகக் கடப்பாடு கிடையாதெனவும் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு தான் கிளிநொச்சிக்குப் போகவே இல்லையென ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பிரவேசித்த முதலாவது நாளிலேயே பொய்யுரையாற்றி சாதனை படைத்துவிட்டார். விடுதலைப் புலிகளுக்கோ வேறு எவருக்குமோ பணம் கைமாறப்படவில்லை எனவும் ஆளும்தரப்பு பறை சாற்றி வந்தது.

தமிழ்ச்செல்வனின் பேட்டியை மேலோட்டமாகத் தூக்கிப் பிடித்த அரசு தமக்கு சாதகமானவற்றை மட்டுமே பெரிதுபடுத்திக் காட்ட முனைகின்றது. தமிழ்ச்செல்வன் தனது பேட்டியில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷ சார்பில் ஒரு குழு வன்னி வந்ததாகவும் அவர்களில் பசில் ராஜபக்ஷவும் இருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். அக்குழு அரசியல் பிரிவினரைச் சந்திக்கவில்லையெனவும் நிருவாகப் பிரிவைச் சேர்ந்தவர்களையே சந்தித்துப் பேசியதாகவும் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் பசில் ராஜபக்ஷவினதும், ஆளும் தரப்பினரதும் குட்டு வெளிப்பட்டுவிட்டது.

அதேபோன்றே புலிகள் மகிந்த குழுவினரிடமிருந்து பணமெதனையும் பெற்றுக் கொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட தமிழ்ச்செல்வன் ஆனால் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வேறொருவர் பணம் பெற்றுக் கொண்டிருப்பதாக தான் அறிவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்???

இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும், ஷ்ரீபதி சூரியாராச்சியும் சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷவும் அக்குழுவில் சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பணப்பரிமாற்றமெதுவுமே இடம்பெறவில்லையென கூறிவந்த ஆளும் தரப்பினர் எவருடனோ பணம் கைமாறப்பட்டிருப்பதை புலிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்!

இங்கு நாம் முக்கிய யதார்த்தத்தை உணரவேண்டும். இவ்வளவு பெரியதொரு பணக்கைமாறும் இரகசிய உடன்பாடும் குறித்து எந்தத் தரப்பும் முழுமையாக உண்மையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எப்படியோ உண்மையின் ஒரு பகுதியாவது வெளிவந்துவிட்டது. தெரிவுக்குழு விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே உண்மை அம்பலமாகிவிட்டது. மங்கள, ஸ்ரீபதியின் முறைப்பாடு உண்மையென நிரூபிக்கப்பட்டுவிட்டது.

விடுதலைப் புலிகள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கழுத்தில் சுருக்குக் கையிற்றை மாட்டியுள்ளனர். அதை வைத்தே அரசாங்கத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

குமரன் பத்மநாதன் உரிய முறையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்க முடியும். புலிகளுக்கு பத்மநாதனை விடுவித்துக் கொள்ள வேண்டும். மகிந்த ராஜபக்ஷ கம்பனிக்கு சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தப்பவேண்டும். இதன் காரணமாக நாடுகளுக்கிடையிலான ஒழுங்கு விதியை மீறி பத்மநாதன் பிடிபட்டவிடயத்தை இணையத்தளத்தில் வெளியிட்டு விவகாரத்தை குழப்பியது.

தெரிவுக் குழு விசாரணை முன்னெடுக்கப்படும் போது மேலும் பல உண்மைகள் வெளிக்கொணரப்படவிருக்கின்றது. தன்மானமுள்ள அரசாக இருந்தால் உடனே பதவிவிலகி புதிய ஆட்சிக்கான மக்கள் ஆணையைக் கோர முன்வரவேண்டும்.

நன்றி: தினக்குரல்

1 comments:

Anonymous said...

புலிகள் பணம் வாங்கினாங்களா, இல்லையா?