Tuesday, October 16, 2007

ஆரவாரமின்றி ஆயுத விற்பனையை அதிகரிக்கிறது இந்தியா

திரை மறைவில் அதிக உதவியை நாடும் கொழும்பு?


இலங்கையின் இனநெருக்கடிக்கு அதிகாரப்பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா அவ்வப்போது அறிக்கைகளை விடுத்து வருகின்ற போதும் அமைதியான முறையில் இலங்கைக்கான ஆயுத உதவிகளை புதுடில்லி அதிகரித்து வருகின்றது.

இனமோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவின் தார்மிக ஆதரவே இலங்கைக்கு தேவைப்படுவதாக கடந்த சனிக் கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற இந்துஸ்தான் டைம்ஸின் தலைமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஆயினும் மோதல்களைக் கையாள்வதற்காக அதிகளவில் கனரக ஆயுதங்கள், மென்ரக உபகரணங்கள் போன்றவற்றை திரைமறைவில் புதுடில்லியிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் கொழும்பு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக `டைம்ஸ் ஒவ் இந்தியா' பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. அத்துடன் இந்தியாவும் ஏனைய தரப்புகளை பற்றி பொருட்படுத்தாமல் இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் வான்தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக் கூடிய தன்னியக்க 40 மி.மீ. எல்-70 வீச்சுடைய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை அதிகளவில் வழங்கியமை இதற்கான பிந்திய உதாரணமாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு 40 ஆயிரம் டாலர்களுக்கு எல்-70 துப்பாக்கி பரல்களை பெற்றுக்கொள்வதற்கான மற்றொரு விநியோக ஒப்பந்தத்தை இந்தியாவின் ஆயுத தொழிற்சாலை சபை தற்போது பெற்றுள்ளமை உதாரணமாகும். தாழப்பறப்பதை கண்டுபிடிக்கும் 4 `இந்திரா' ராடார்கள் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தானின் தந்திரோபாய ஊடுருவல்கள் இடம்பெற்று விடுமென்ற இந்தியாவின் அச்சத்தை பயன்படுத்தி அதிகளவு பாதுகாப்பு ஆயுதங்கள், ராடார்கள், ஆட்லறிகள், நிஷாந், யூ.ஏ.விக்கள், இராணுவக் கருவிகளை சரியாக அடையாளம் காட்டுவதற்கான லேசர் வடிமைப்புகள் என்பனவற்றை விநியோகிக்குமாறு கொழும்பு புதுடில்லியை கேட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அச்சமயம் புலிகளின் படகுகளிலிருந்து தூரயிருந்து இயக்குவிக்கும் 2 சிறிய ரக விமானங்களை கைப்பற்றியதாக கொழும்பிலிருந்து செய்திகள் வெளியாகியிருந்தனர்.
வெடிமருந்துகளை ஏற்றிய பின் இந்த விமானங்கள் ஏவுகணைகளாக பயன்படுத்தப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் தமிழ் நாட்டைப் பயன்படுத்தி வருவதாக இலங்கை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதுவரை பாதுகாப்பிற்கான உபகரணங்களையே இந்தியா இலங்கைக்கு இதுவரை அதிகளவில் வழங்குகின்ற போதிலும் `சில அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை' விநியோகிக்கின்றது என்பதையும் நிராகரிக்க முடியாது என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியா அவ்வாறு வழங்காதுவிடின் அந்த வெற்றிடத்தை சீனா அல்லது பாகிஸ்தான் நிரப்பிவிடும் என்றும் அந்த நிலைமை ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1990 களில் மியான்மாரில் இடம்பெற்றதைப் போன்றதொன்று பிராந்தியத்தில் இடம்பெறுவதை இந்தியா விரும்பவில்லை.

இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு இதுதொடர்பாக ஏற்பட்ட அசௌகரியத்தை இந்த வருட முற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்திருந்த கருத்து வெளிப்படுத்துகின்றது. சீனாவிடமிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ ஆயுதங்கள் பெற்றுக்கொள்வதை இலங்கை தவிர்த்துக் கொள்ளவேண்டுமென நாராயணன் அச்சமயம் தெரிவித்திருந்தார்.

நாராயணனின் இந்த அறிவிப்புகள் இலங்கைக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தன, அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு வழங்காது என்று கூறியிருந்தமை இலங்கை தரப்பில் ஆத்திரத்தையூட்டியது.

உண்மையிலேயே இலங்கைக்கான ஆயுத விநியோகம் தமிழ் நாட்டில் அரசியல் ரீதியான உணர்வலைகளை தட்டி விடும் என்பதையும் இந்திய அரசாங்கம் மனதில் கொண்டிருந்தது. ஆயினும் தற்போது இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரித்துள்ளதாக `டைம்ஸ் ஒவ் இந்தியா' சுட்டிக்காட்டியுள்ளது.

1 comments:

Anonymous said...

மிகவும் நல்ல செய்தி பாசிச வெள்ளாள புலிகளை அழிக்க இந்திய உதவி செய்வதை கண்டு மனம் உற்சாகம் கொள்கிறது