Wednesday, October 17, 2007

இந்தியாவின் ஆயுத உதவி தமிழினத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கே வழிவகுக்கும்!

தமிழ்க் கூட்டமைப்பு கவலையுடன் எச்சரிக்கை

இலங்கைக்கான இந்தியாவின் தார்மிக ஆதரவு தாராளமாகக் கிடைப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருப்தி தெரிவித்துள்ள நிலையிலும் புதுடில்லியுடனான கொழும்பின் உறவு மிகவும் அந்நியோன்யமாக இருப்பதாக அரசாங்கத் தரப்பு பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கின்ற வேளையிலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து ஆழ்ந்த கவலையும் எச்சரிக்கையும் வெளிவந்திருக்கிறது.

இலங்கைக்கு ஆரவாரமின்றி கனரக ஆயுதங்களின் விநியோகத்தை இந்திய அரசு அதிகரித்திருப்பதாக இந்தியப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால் அதாவது, ஆயுத விநியோகத்தை இந்தியா அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுவது உறுதியான விடயமாக இருந்தால், அது இலங்கையிலுள்ள தமிழினத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கே வழிவகுக்குமென தமிழ்க் கூட்டமைப்பு எச்சரித்திருக்கிறது.

புதுடில்லிக்கும் கொழும்புக்கும் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கமான பிணைப்புகள் குறித்து புதுடில்லிக்கு ஜனாதிபதி தலைமையிலான குழுவினருடன் விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகண கூறுகையில்;
ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் இலங்கைக்கு பெரும் பயன்பாட்டைப் பெற்றுத் தந்துள்ளது. அங்கு நாம் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இந்தியாவின் ஆதரவு எமக்கு கடந்த காலங்களில் இருந்தது. இப்போதும் அவ்வாதரவு தொடர்கிறது. இதில் சகலவகையான உதவிகளும் அடங்கும். இதன் மூலம் இந்தியா எமதருகிலேயே உள்ளது என்பது மீண்டுமொரு தடவை நிரூபணமாகியுள்ளது என்றார்.

ஆனால், இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்;
`இலங்கையில் மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அண்மைக் காலங்களில் மாத்திரம் 4 ஆயிரத்திற்கும் மேலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மீள்குடியேற்றம் உரிய முறையில் இல்லை. காணாமல் போதலும் படுகொலையும் அதிகரித்து மனித உரிமை பரவலாக மீறப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே இந்தியாவின் ஆயுத உதவி பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது உண்மையாகவிருந்தால் அவர்கள் தமிழர் பிரச்சினையில் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகிறார்கள் என்ற கேள்வி எம்மை குடைகிறது.
சீனா, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதம் வழங்கிவிடக் கூடாது. எனவேதான் ஆயுதம் வழங்குகிறோமென இந்தியத் தரப்பில் (நாராயணன்) கூறப்படுவதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆயுதங்கள் தமிழ் மக்களை இன அழிப்புக்குள்ளாக்கி அவர்களை புதைகுழிக்கு அனுப்பவே வழிவகுக்குமென்பது அம்மக்களினதும் கூட்டமைப்பினதும் எச்சரிக்கையாகும்.

இன ஒழிப்பினை தமிழருக்கு எதிராக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஏன் இந்தியா உதவி வழங்குகிறது என்பது குறித்து தமிழ் மக்களினால் ஜீரணிக்க முடியாத விடயம்' என்றும் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன் வழிகாட்டலின் பேரிலேயே அதிக அளவு ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.

1 comments:

சொக்கன்...! said...

இலங்கை அதிபரின் இந்திய பயணம் அதிகாரப்பூர்வமானது இல்லையென நினைக்கிறேன்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமம் நடத்திய ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காகவே வந்திருந்தார் என அறிகிறேன்.

இருப்பினும் இந்த பயணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையினில் இலங்கை அரசு பொய் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டிருக்கிறது என்பதுதான் உண்மையாக இருக்க முடியும்.

மற்றபடி தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளின் விருப்பத்திற்கு எதிராக ஒரு போதும் மத்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். கலைஞர் அமைதி காத்தாலும் ராமதாஸ் இதை பெரிய பிரச்சினையாக்கிவிடுவார்.