Friday, October 19, 2007

கருத்து வெளியிடும் சுதந்திரம்!

கருத்து வெளியிடும் சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவை தொடர்பில் இலங்கைத் தேசத்தின் உண்மை நிலையை சர்வதேச மதிப்பீட்டு ஆய்வு ஒன்று அம்பலப்படுத்தியிருக்கின்றது.

ஊடக சுதந்திரத்திற்காக அயராது குரல் எழுப்பிவரும் சர்வதேச அமைப்பான பாரிஸை மையமாகக் கொண்டு இயங்குகின்ற "எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு' என்ற நிறுவனம் 169 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் பெறுபேறுகள் இலங்கையின் மோசமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன.

பத்திரிகைச்சுதந்திரம் மேன்மையான முதலாவது இடத்தில் இருப்பது பற்றிய பெருமை ஐஸ்லாந்துக்குக் கிடைத்திருக்கின்றது. கடைசி 169 ஆவது இடம் எரித்திரியாவுக்கு. இலங்கை 156 ஆவது இடத்தில் பின்னிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. மோசமான பத்திரிகைச் சுதந்திரம் உள்ள நாடுகளின் வரிசையில் கடைசி இருபதுக்குள் இலங்கை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

ஈராக், பாலஸ்தீனப் பிரதேசங்கள், சோமாலியா, உஸ்பெஸ்கிஸ்தான், லாவோஸ், வியட்நாம், சீனா, பர்மா(மியன்மார்), கியூபா, ஈரான், துருக்மெனிஸ்தான், வடகொரியா, எரித்திரியா அகியவையே இவ்விடயத்தில் இலங்கைக்குப் பின்னால் நிற்பவை.இந்த வரிசையில் கடந்த நான்கு ஆண்டு காலத்துக்குள் மோசமான வீழ்ச்சி நிலையை இலங்கை காட்டி வருவதும் அவதானிக்கத்தக்கது.

2004 ஆம் ஆண்டில் 110 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் 115 ஆம் இடத்துக்கு சரிந்தது.ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அதிகாரம் ஆரம்பமானதும் நாட்டின் ஊடக சுதந்திரம் சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடுகையில் பெரு வீழ்ச்சி கண்டது. கடந்த ஆண்டு 141 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட இலங்கை இந்த ஆண்டில் மேலும் கீழிறங்கி 156 ஆவது நிலைக்கு வந்திருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு ஊடக சுதந்திரத்துக்கு அளித்துவரும் உயர் நிலையின் "சீத்துவத்தை' இந்த மதிப்பீட்டு ஆய்வுகள் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு இந்த மதிப்பீட்டு ஆய்வைப் பரந்தளவில் மேற்கொண்டது. கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டு உரிமை தொடர்பான பதினைந்து சர்வதேச அமைப்புகள் மற்றும் தனது செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், ஜூரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என சுமார் 130 பிரதிநிதிகள் ஆகிய தரப்புகள் ஊடாக இந்த ஆய்வை அது மேற்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இதேசமயம், இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஊடக சுதந்திரத்தை மதிக்குமாறு 32 சர்வதேச அமைப்புகள் ஒன்று கூடி வலியுறுத்தியிருக்கின்றன. உருகுவேயின் மொண்டிவிடியோ நகரில் "கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றிய சர்வதேச கலந்துரையாடல்' மாநாடு இடம்பெற்றது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்காகப் போராடும் 32 சர்வதேச அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்குகொண்டு பல்வேறு நாடுகளிலும் ஊடக சுதந்திர நிலைமையை ஆராய்ந்தபின்னர் பொது அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதிலேயே மேற்படி கோரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில், இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமாக நசுக்கப்பட்டு வருவதை அரசுத் தரப்பினாலும் அதிகாரிகளினாலும் உத்தியோகப்பற்றற்ற தணிக்கையும், ஊடகங்களுக்கு எதிரான அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கண்டனம் தெரிவித்து வருகின்றது இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கான காவல் அமைப்பான சுதந்திர ஊடக இயக்கம்.

கடைசியாக இரு பத்திரிகைப் புகைப்படப்பிடிப்பாளர்கள் இராணுவத்தினரால் கெடுபிடிக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் பிடித்த படங்கள் படையினரால் அழிக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்ற காரணத்தைக் காட்டிப் பல்வேறு இராணுவ அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்படும் இத்தகைய அத்துமீறல்கள், இலங்கையில் அப்படி ஒன்றும் உத்தியோகப்பற்றற்ற தணிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று திரும்பத் திரும்ப அரசுத் தரப்புக் கூறி வருவது தவறானது என்பதையே ஊர்ஜிதப்படுத்தி நிற்கின்றன.

ஊடக சுதந்திரத்தை நசுக்கும் இத்தகைய எல்லை மீறிய செயற்பாட்டுக்கு அரசு அனுமதி வழங்கி நிற்பது இந்த நாட்டில் ஜனநாயக நல்லாட்சிக்கு ஊறுவிளைவிப்பதாகவே அமையும் என்பதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டி உள்ளது.கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையை மதித்துப் பேணும் நாடுகளின் வரிசையில் இலங்கையின் தரம் மோசமடைந்து கீழிறங்கி இருப்பதை உணர்த்தும் புள்ளிவிவரங்களும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்குமாறு இவ்விவகாரம் தொடர்பான சர்வதேச மாநாடு, இலங்கையை வற்புறுத்திக் கோரியிருப்பதும் ஜனநாயக நல்லாட்சிக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் படை அதிகாரிகள் தம்பாட்டில் ஊடகங்கள் மீது அழுத்தங்களைப் போட்டு வருகிறார்கள் என்பதை சுதந்திர ஊடக இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கின்றமையும் இலங்கைத் தீவில் ஊடக சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருவதையே வெளிப்படுத்துகின்றன.

"நாட்டில் ஒரு யுத்தம் இடம்பெறுவதால் யுத்தத்துக்கு மத்தியில் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை தவிர்க்க முடியாததே.'' என்று தனது நிர்வாகத்தின் கீழ் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்ற நிலைமையை நியாயப்படுத்த முயலும் இந்த அரசு, கருத்துவெளியிடும் சுதந்திரம் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றமையையும் அதே யுத்த நிலைமையைக் காரணம்காட்டி நியாயப்படுத்த முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"இலங்கையில் இதுவரை இருந்த ஜனாதிபதிகளில் செய்தித் தணிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவராத ஒரேயொரு ஜனாதிபதி நான்தான்!'' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வப்போது தம்பட்டம் அடித்து தற்பெருமை பேசி பீற்றிக் கொண்டாலும் கூட, இவரது ஆட்சி நிர்வாகத்தில்தான் கருத்து வெளியிடும் சுதந்திரம் மோசமாக சூறையாடப்பட்டு, அச்சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பது தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் அம்பலமாகி வருகின்றது.

செய்தித் தணிக்கையை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாட்டை சட்டரீதியாகவன்றி, சட்ட முறையற்ற வகையிலும் நடைமுறைப்படுத்துவதில் கைதேர்ந்தது இந்த ஆட்சி நிர்வாகம் என்பதை அம்பலப்படுத்துவனவாகவே இந்தப் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன. மஹிந்தரின் ஆட்சிக்குக் கிடைத்த மற்றொரு "நற்சான்றிதழ்' இந்த மதிப்பீட்டு ஆய்வின் முடிவுகளாகும்.

நன்றி- சுடர் ஒளி

4 comments:

Anonymous said...

அரசாங்கத்துக்கு எதிரா மட்டுமில்ல, இங்க ஒரு வலைப்பதிவர் எழுதுறதுக்கு எதிரா கருத்து சொன்னாலே கிழிகிழின்னு கிழிச்சர்றாங்க,

அப்ப அரசாங்கம் சும்மா இருக்குமா?

Anonymous said...

தமிழச்சியோட கருத்துக்கு எதிரா எதுவும் சொன்னால் உங்களை எவ்வளவு கேவலமா வேணுமின்னாலும் திட்டி எழுதுவாங்க,

கூடவே மாசிலாவும் தமிழச்சிக்கு சப்போர்ட் பண்ண வருவாரு!!!

மாயாவி said...

இதில் ஏன் தமிழச்சியையும் மாசிலாவையும் இழுக்கிறீர்கள். அவர்கள் ஏற்கெனவே பிஸியாக இருக்கிறார்கள்!

மாசிலா said...

அய்யா, அம்மாவுங்களா! ஏங்க சும்மா கிடக்கிற எந்தலைய போட்டு உருட்டுறீங்க? வேணாம்க. விட்டுடுங்க...
;-D