Tuesday, November 13, 2007

தேசிய வருமானத்துடன் ஒப்பிடும்போது தெற்காசியாவில் மாத்திரமல்ல, உலகிலேயே இலங்கையில்தான் இராணுவ செலவினம் அதிகம்

10 இலட்சம் மக்களுக்கு 8000 இராணுவத்தினரை இலங்கை கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தானில் இது 4000 மாகவும், இந்தியாவில் இது 1300 ஆகவும், நேபாளத்தில் இது 2700 ஆகவும், பங்களாதேஷில் 1000 ஆகவும் உள்ளது.

சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் பல யுத்தங்களைப் புரிந்த இந்தியா 1 மில்லியனுக்கு 1300 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை மிக அதிக காலமாக இராணுவ ஆட்சியைக் கொண்டிருந்த பாகிஸ்தான் 1 மில்லியனுக்கு 4000 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, ஜனநாயக குடியரசாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எமது நாடு தனது நாட்டின் ஒரு பகுதி மக்களைக் கொலை செய்வதற்காக 1 மில்லியனுக்கு 8000 இராணுவத்தைக் கொண்டுள்ள கொடூரத்தைக் காண்கிறோம்.

** பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரை **

இலங்கையில் வருடாந்தம் சமர்ப்பிக்கப்படும் வரவு - செலவுத்திட்டங்கள் எந்தளவுக்கு நாட்டின் அபிவிருத்திக்கு உதவியுள்ளன என்பதை பொருளாதார ரீதியில் பகுப்பாய்வு செய்வது அவசியமானதாகும். இங்கு சிங்கப்பூர் நாட்டின் முதலாவது பிரதமரும் அந்நாட்டின் இன்றைய மதியுரை அமைச்சருமாகிய (Minister Mentor) லீ குவான் யூ அவர்கள் இலங்கையைப் பற்றி அன்றும் இன்றும் கூறிய கருத்துகள் இந்நாட்டில் பிறந்த அனைவரும் நன்றாக தமது மனங்களில் பதிய வைக்க வேண்டிய விடயங்களாகும்.

இவர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் 1965 இல் பிரிந்து சுதந்திரம் பெற்ற போது Ceylon இன் பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிப்பதே எமது இலக்கு என்று கூறினார். அது தவிர, லண்டன் செல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நேரடி விமான வசதி இல்லாமல் கொழும்பு வந்தே இலண்டனுக்கு விமானம் ஏறிச் சென்றார். ஆனால், அவர் இன்று Sri Lanka பற்றிக் கூறுவது எமக்கு சிறந்த படிப்பினையாகும்.

அவரது கூற்றில் கூறுவதானால் "எமது அதிர்ஷ்டம் என்னவெனில், நாம் காலம் பிந்தி சுதந்திரம் பெற்றமையாகும். நாம் சுதந்திரம் பெற்றபோது சிங்கப்பூர் நாட்டில் சீன இனத்தவர், மலே இனத்தவர், இந்திய உபகண்டத்தினர் என மூன்று வகையான இனக்குழுக்கள் காணப்பட்டன. நிர்வாக மொழியைத் தெரிவு செய்வதில் எமக்கு சிக்கல்கள் காணப்பட்டன. Sri Lanka வின் கசப்பான அனுபவம் எங்களுக்கு வழிகாட்டியது. ஏனெனில், Sri Lanka நிர்வாக, கல்வி மொழிக் கொள்கை தொடர்பில் ஆங்கிலத்திலிருந்து சிங்கள மொழிக்கு மாறியபோது அங்கு கலவரம் வெடித்தது. பொருளாதாரம் பாதிப்படைய ஆரம்பித்தது.

சிங்கப்பூரிலும் மூன்று வகையான இனக்குழுக்கள் காணப்பட்டமையினால் அதாவது ஒரு மொழியைத் தெரிவு செய்யும் போது ஏனைய இனத்தவரும் தமது மொழிக்கு முன்னுரிமை கொடுப்பர். இதனால், சிங்கப்பூரின் தேசியத்துவம் கட்டி வளர்க்கப்பட முடியாது போகும் என்பதால் நிர்வாக, கல்வி மொழியாக ஆங்கிலத்தைத் தெரிவு செய்தோம். இதனால், நாங்கள் பொருளாதார சுபீட்சத்தை அடைந்து கொண்டோம்.

Sri Lanka இப்போதும் பணவீக்கம், வேலையின்மை, நாணயப் பெறுமதித்தேய்வு என்பவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, நாங்கள் பூமி வெப்பமடைதலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம்" இதுவே லீ குவான் யூ அவர்கள் இன்று இலங்கை பற்றிக் கூறும் வார்த்தையாகும்.

**இந்த இடத்திலிருந்தே நான் எனது வரவு - செலவுத் திட்ட உரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். **

இலங்கை சுதந்திரம் அடையும் போது ஆசியாவில் ஜப்பான், மலேசியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது செல்வந்த நாடாகக் காணப்பட்டது. தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் தலா வருமானத்தைப் பொறுத்தவரையில் இலங்கையைவிட பின்தங்கியே காணப்பட்டன. இப்போது இந்நாடுகள் அனைத்தும் இலங்கையை விஞ்சிவிட்டன. அதுமட்டுமன்றி, சுதந்திரத்திற்கு பிந்திய கடந்த 59 வருட காலத்தில் இந்த அழகிய இந்து சமுத்திரத்தின் முத்து உலகின் கண்ணீர்த் தீவாக மாறிப்போனது.

மொத்தச் செலவில் ஐந்தில் ஒரு பகுதியை பாதுகாப்புக்காக ஒதுக்கி சொந்தநாட்டு மக்களுக்கெதிராகவே யுத்தம் புரியும் நிலையும் ஏற்பட்டது. இதற்கான காரணங்கள் என்ன? விடை இந்த நாடே இனவாத, மதவாத, மொழிவாத அரசியலுக்குள் ஆரம்பத்திலிருந்தே விழுந்து விட்டமையாகும். இதனால், இலங்கைத்துவம் அழிந்து இனவாத அரசியலே நாட்டை இன்று வரை படு குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது.

எல்லா நாடுகளும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்கையில், இலங்கை பின்னோக்கிச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் மூன்று விடயங்களில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. முதலாவது சிங்கள அரசுக்கும் தமிழ்தேசிய இனத்துக்கும் இடையில் நடைபெறும் யுத்தமும் அதன் மூலமான படுகொலைகளும். இதுவே அந்நிய முதலீடுகள் பாரிய அளவில் உள்வராமல் தடுக்கின்றது.இரண்டாவது கிரிக்கெட் கிரிக்கெட் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. மூன்றாவது சமூக நலக் குறிகாட்டிகளில் பாரிய முன்னேற்றம்.

சமூக நலக் குறிகாட்டிகளைப் பொறுத்தவரையில் உலகிலேயே அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இலங்கை மட்டுமே அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கீடாக மேம்பட்ட சமூகநலக் குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது. ஆனால், அதன் பெறுபேற்றினை தொடர்ந்தேர்ச்சியாக மந்தமான பொருளாதார செயலாற்றத்தின் மூலம் எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. முடிந்திருந்தால் எமது நாட்டுப் பெண்கள் வெறும் 15,000 ரூபா சம்பளத்திற்காக 130 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

பாதுகாப்புச் செலவீனம்: இந்த வரவு - செலவுத் திட்டமானது இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களான தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக உருவாக்கிய வரவு - செலவுத்திட்டமே தவிர வேறல்ல. 1983 ஆம் ஆண்டு 1.7 பில்லியனாக இருந்த பாதுகாப்புச் செலவீனமானது, 2007 ஆம் ஆண்டிற்கு அதாவது 25 ஆவது வருடத்திற்கு 166.4 பில்லியனாக இது அதிகரிக்கப்பட்டுள்ளது. 2005 இல் 56.3 பில்லியனாக இருந்த இதே பாதுகாப்புச் செலவினமானது 2006 இல் 69.5 பில்லியனாகவும் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் திடீரென 100 பில்லியனையும் தாண்டியது. 2007 இல் 139.6 பில்லியனை எட்டி, 2008 இற்கு இது மீண்டும் அதிகரிக்கப்பட்டு நான் மேற்சொன்ன 166.4 பில்லியனாக இன்று உயர்ந்துள்ளது.

இதில் இராணுவத்திற்கு ஏறத்தாழ ஏழாயிரத்து இருநூற்றி அறுபத்தியெட்டு கோடியே எண்பது இலட்சமும் (7268,80,00000), கடற்படைக்கு 2717 கோடியே 40 இலட்சமும், விமானப்படைக்கு 1956 கோடியும், பொலிஸாருக்கு 3722 கோடியும், ஊர்காவல் படையினருக்கு 1155 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு வருமானத்தில் 20 வீதத்திற்கு மிக அதிகமானதாகும்.
அரசாங்க அறிவித்தலின்படி இராணுவம் 31582 பேராலும், கடற்படை 10891 பேராலும், விமானப்படை 4621 பேராலும் அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், விசேட அதிரடிப்படையானது 1496 பேராலும் ஊர்காவல் படையினர் 34900 பேராலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் யுத்தத்திற்கான ஆளணியினர் 74619 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயுத தளபாட இறக்குமதியில் 3 ஆம் தரப்பினருக்கு எதுவும் போகாமல் அதுவும் முழுமையாக ராஜபக்ஷ கம்பனிக்கு கிடைக்கக்கூடிய வகையில் அரசாங்கம் Sri Lanka Logistic and technology என்ற கம்பனியையும் ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில் சகலவிதமான யுத்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் இக்கம்பனியே இறக்குமதி செய்யும். மொத்தத்தில் முழு மூச்சான ஓர் யுத்தத்தை நடத்துவதற்கான வரவு - செலவுத் திட்டமாகவே இது முன்வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு 166.4 பில்லியனை ஒதுக்கிய அரசாங்கம் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்யவும் பெரும் அழிவுகளை முகாமைத்துவம் செய்யவும் ஒதுக்கியுள்ள பணம் வெறும் 4.36 பில்லியன் மாத்திரம் தான். அதாவது, 4367 கோடியே எண்பத்தாறு இலட்சம் ரூபாய் மாத்திரமே இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கிழக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்களை இந்த அரசாங்கம் 2006, 2007 ஆம் ஆண்டுகளில் இடம்பெயர வைத்தது. இராணுவத்தின் மூர்க்கத்தனமான பல்குழல் பீரங்கித் தாக்குதலாலும், விமானக்குண்டு வீச்சினாலும், 300 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. விவசாயம் அழிக்கப்பட்டது. கால்நடைகள்,மீன்பிடி யாவும் அழிக்கப்பட்டன. இன்றுவரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழனுக்காவது நஷ்டஈடு கொடுக்கப்பட்டதாக அரசாங்கத்தால் சொல்ல முடியுமா?

இதனை விட கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது மண்ணை விட்டு விரட்டப்பட்டு இன்று பல்வேறுபட்ட அகதி முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தொண்டர் ஸ்தாபன அறிக்கையின் பிரகாரம், ஏறத்தாழ ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளூரில் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் இன்னும் அகதிகளாக்கப்படுவோருக்கும்,பெரும் அழிவுகளுக்குமென ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் 4367 கோடி மாத்திரம் தான்.

இராணுவ மயநாடு: தென்னாசியாவில் மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக ஷ்ரீலங்காவே விளங்குகின்றது. கிடைக்கும் தரவுகளின் பிரகாரம் அவதானிக்கின்ற பொழுது, 10 இலட்சம் மக்களுக்கு 8000 இராணுவத்தினரை இலங்கை கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தானில் இது 4000 மாகவும், இந்தியாவில் இது 1300 ஆகவும், நேபாளத்தில் இது 2700 ஆகவும், பங்களாதேஷில் இது 1000 ஆகவும் உள்ளது. சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் பல யுத்தங்களைப் புரிந்த இந்தியா 1 மில்லியனுக்கு 1300 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை மிக அதிக காலமாக இராணுவ ஆட்சியைக் கொண்டிருந்த பாகிஸ்தான் 1 மில்லியனுக்கு 4000 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, ஜனநாயக குடியரசாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எமது நாடு தனது நாட்டின் ஒரு பகுதி மக்களைக் கொலை செய்வதற்காக 1 மில்லியனுக்கு 8000 இராணுவத்தைக் கொண்டுள்ள கொடூரத்தையும் நாம் இலங்கையில் தான் பார்க்க முடியும்.

இந்த இலட்சணத்தில் தான் 2008 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் இங்கு அரங்கேறுகின்றது. முரண்பாடுகளால் ஆயுதப் போராட்டம் நடக்கக் கூடிய, கொலம்பியா, மியன்மார், சிரலியோன், சூடான், பிலிப்பெய்ன்ஸ், உகண்டா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, இலங்கையின் இராணுவச் செலவானது மிக அதிகமானது. இலங்கையில் இராணுவச் செலவானது உள்நாட்டுத் தேசிய வருமானத்துடன் ஒப்பிடும் பொழுது தெற்காசியாவில் மாத்திரமல்ல, உலகத்திலேயே இங்குதான் மிக அதிகம்.

பாதுகாப்புச் செலவுக்கு ஒதுக்கிய நிதியானது (20 வீதம்) கல்வி, உயர் கல்வி, சுகாதாரம், விவசாயம், அபிவிருத்தி, போக்குவரத்து, மீன்பிடி மற்றும் நீரியியல் வளம் என்பவற்றுக்குக் கூட்டாக ஒதுக்கிய தொகையை (17 வீதம்) விட அதிகமாக உள்ளது. இங்கிலாந்தை விட பெற்றோல் இங்கு மலிவு என்று அமைச்சர் கூறுகின்றார். இங்கிலாந்தின் தலாவருமானத்தை மறந்து விட்டார். இந்தியாவை விட இங்கு பெற்றோல் மலிவு என்று அமைச்சர் கூறுகின்றார். இந்தியாவில் முட்டை 2 ரூபா, உருளைக்கிழங்கு 10 ரூபா, வெங்காயம் 10 ரூபா, அரச ஊழியர்களின் சம்பளம் இலங்கையை விட இந்தியாவில் அதிகம்.

விலைகள் இரண்டு மூன்று வருடங்களுக்கு மாறாமல் அப்படியே இருக்கும். இதையெல்லாம் நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள்.

பால் மா விலை அதிகம் என்றால் மாட்டுப்பாலை குடியுங்கள் என்கின்றீர்கள். அப்படியானால், நாம் மாடுகளை வளர்க்க வேண்டும். இந்த வரவு- செலவுத் திட்டத்தில் கால்நடை அபிவிருத்திக்கு மொத்த செலவில் 0.1 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், மாட்டுப்பாலுக்கு எங்கு போவது? மக்களை கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்கின்றீர்கள். இந்தியாவுடன் இலங்கையை ஒப்பிடுகின்றீர்கள். இந்தியாவில் வெளிநாட்டுப் பால்மா பக்கற்றுக்களைக் காணமுடியாது. அந்நாடு பாலுற்பத்தியிலும் தன்னிறைவு கண்டுள்ளது. கோதுமை மா விலை அதிகம் என்றால் அரிசி மா சாப்பிடுங்கள் என்கின்றீர்கள். அரிசி கேட்டால் இந்தியாவிலிருந்து வர வேண்டும் என்கின்றீர்கள்.

வட- கிழக்கில் நெல் வயல்கள் சாம்பல் மேடுகளாகின்றன.
உங்களுக்கெல்லா நாடுகளும் பணவுதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். ஆனால், மற்ற நாடுகளின் அனுபவங்களை ஏற்க மறுக்கின்றீர்கள்.

கிழக்குத் தீமோரில் என்ன நடந்தது என்பதை எண்ணிப்பாருங்கள். ஐ.நா. சபை உதவியுடன் நடைபெற்ற சர்வஜன வாக்குரிமையோடு அது தனிநாடாக செயற்பட தனது விருப்பத்தை வெளிக்காட்டியது. அதனை உலகமும் ஏற்றுக் கொண்டது. தென்னாசியாவிலேயே இலங்கைதான் முதன் முதலாக பொருளாதாரத்தை தாராளமயப்படுத்தியது. பொருளாதார தாராளமயமாக்கத்தின் பலாபலன்களை அனுபவிக்க வேண்டுமென்றால் அரசியல் தாராளமயமாக்கமும் இடம்பெறவேண்டும். அனைத்து இன மக்களையும் அரவணைத்து குரோத மனப்பான்மையின்றி அரசியல் நடத்துவதையே இங்கு நான் அரசியல் தாராளமயமாக்கம் என்று கூறுகின்றேன்.

சிங்கப்பூரிலும் அது நடந்தது. மலேசியாவிலும் அது நடந்தது. அதனால்தான் அவர்கள் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சி கண்டார்கள். இங்கு தமிழர்களை அழித்தால் பொருளாதாரம் வளரும் என மனக்கோட்டை கட்டினீர்கள். அது ஒரு நாளும் நடக்கப்போவதில்லை.

3 comments:

Anonymous said...

மிகச் சிறந்த கட்டுரை

Anonymous said...

Boss,

It is good news indeed - when the weapons of 166 billons goes to the 'right' hand !!

Anonymous said...

Very good...please keep posting...