Monday, October 29, 2007

எரிகிற நெருப்பில் இந்தியா எண்ணையை ஊற்றுகிறது!

வான்பாதுகாப்பு ஆயுதங்கள் இலங்கைக்கு இந்தியா விநியோகம்

புதுடில்லி: இலங்கை நிலைவரம் கொந்தளிப்பானதாக இருந்ததால் இந்தியா வான்பாதுகாப்பு துப்பாக்கிகளை கொழும்புக்கு வழங்கியதாக இந்தியாவின் புதிய இராணுவத்தளபதி ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்திருக்கிறார்.

அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் தரை, வான்மார்க்க தாக்குதல் இடம்பெற்று சில தினங்கள் கடந்த நிலையில் இந்தக் கருத்தை இந்திய இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

ஆயுத விநியோகம் தொடர்பாக அதிகளவிலான கோரிக்கைகளை கொழும்பு இந்தியவாவிடம் முன்வைத்திருந்ததாகவும் அவை தொடர்பாக இந்திய அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகவும் தீபக் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் ஆயுதப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அடி வாங்கினாலும் இலங்கை அரசு திருந்தப்போவதில்லை. இந்தியாவும் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தப் போவதில்லை.

இலங்கையில் சமாதானம் மலர்வதில் இந்தியாவிற்க்கு உள்ள சிக்கல் என்னவோ தெரியவில்லை!!?

Friday, October 19, 2007

கருத்து வெளியிடும் சுதந்திரம்!

கருத்து வெளியிடும் சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவை தொடர்பில் இலங்கைத் தேசத்தின் உண்மை நிலையை சர்வதேச மதிப்பீட்டு ஆய்வு ஒன்று அம்பலப்படுத்தியிருக்கின்றது.

ஊடக சுதந்திரத்திற்காக அயராது குரல் எழுப்பிவரும் சர்வதேச அமைப்பான பாரிஸை மையமாகக் கொண்டு இயங்குகின்ற "எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு' என்ற நிறுவனம் 169 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் பெறுபேறுகள் இலங்கையின் மோசமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன.

பத்திரிகைச்சுதந்திரம் மேன்மையான முதலாவது இடத்தில் இருப்பது பற்றிய பெருமை ஐஸ்லாந்துக்குக் கிடைத்திருக்கின்றது. கடைசி 169 ஆவது இடம் எரித்திரியாவுக்கு. இலங்கை 156 ஆவது இடத்தில் பின்னிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. மோசமான பத்திரிகைச் சுதந்திரம் உள்ள நாடுகளின் வரிசையில் கடைசி இருபதுக்குள் இலங்கை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

ஈராக், பாலஸ்தீனப் பிரதேசங்கள், சோமாலியா, உஸ்பெஸ்கிஸ்தான், லாவோஸ், வியட்நாம், சீனா, பர்மா(மியன்மார்), கியூபா, ஈரான், துருக்மெனிஸ்தான், வடகொரியா, எரித்திரியா அகியவையே இவ்விடயத்தில் இலங்கைக்குப் பின்னால் நிற்பவை.இந்த வரிசையில் கடந்த நான்கு ஆண்டு காலத்துக்குள் மோசமான வீழ்ச்சி நிலையை இலங்கை காட்டி வருவதும் அவதானிக்கத்தக்கது.

2004 ஆம் ஆண்டில் 110 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் 115 ஆம் இடத்துக்கு சரிந்தது.ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அதிகாரம் ஆரம்பமானதும் நாட்டின் ஊடக சுதந்திரம் சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடுகையில் பெரு வீழ்ச்சி கண்டது. கடந்த ஆண்டு 141 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட இலங்கை இந்த ஆண்டில் மேலும் கீழிறங்கி 156 ஆவது நிலைக்கு வந்திருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு ஊடக சுதந்திரத்துக்கு அளித்துவரும் உயர் நிலையின் "சீத்துவத்தை' இந்த மதிப்பீட்டு ஆய்வுகள் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு இந்த மதிப்பீட்டு ஆய்வைப் பரந்தளவில் மேற்கொண்டது. கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டு உரிமை தொடர்பான பதினைந்து சர்வதேச அமைப்புகள் மற்றும் தனது செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், ஜூரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என சுமார் 130 பிரதிநிதிகள் ஆகிய தரப்புகள் ஊடாக இந்த ஆய்வை அது மேற்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இதேசமயம், இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஊடக சுதந்திரத்தை மதிக்குமாறு 32 சர்வதேச அமைப்புகள் ஒன்று கூடி வலியுறுத்தியிருக்கின்றன. உருகுவேயின் மொண்டிவிடியோ நகரில் "கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றிய சர்வதேச கலந்துரையாடல்' மாநாடு இடம்பெற்றது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்காகப் போராடும் 32 சர்வதேச அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்குகொண்டு பல்வேறு நாடுகளிலும் ஊடக சுதந்திர நிலைமையை ஆராய்ந்தபின்னர் பொது அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதிலேயே மேற்படி கோரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில், இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமாக நசுக்கப்பட்டு வருவதை அரசுத் தரப்பினாலும் அதிகாரிகளினாலும் உத்தியோகப்பற்றற்ற தணிக்கையும், ஊடகங்களுக்கு எதிரான அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கண்டனம் தெரிவித்து வருகின்றது இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கான காவல் அமைப்பான சுதந்திர ஊடக இயக்கம்.

கடைசியாக இரு பத்திரிகைப் புகைப்படப்பிடிப்பாளர்கள் இராணுவத்தினரால் கெடுபிடிக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் பிடித்த படங்கள் படையினரால் அழிக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்ற காரணத்தைக் காட்டிப் பல்வேறு இராணுவ அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்படும் இத்தகைய அத்துமீறல்கள், இலங்கையில் அப்படி ஒன்றும் உத்தியோகப்பற்றற்ற தணிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று திரும்பத் திரும்ப அரசுத் தரப்புக் கூறி வருவது தவறானது என்பதையே ஊர்ஜிதப்படுத்தி நிற்கின்றன.

ஊடக சுதந்திரத்தை நசுக்கும் இத்தகைய எல்லை மீறிய செயற்பாட்டுக்கு அரசு அனுமதி வழங்கி நிற்பது இந்த நாட்டில் ஜனநாயக நல்லாட்சிக்கு ஊறுவிளைவிப்பதாகவே அமையும் என்பதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டி உள்ளது.கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையை மதித்துப் பேணும் நாடுகளின் வரிசையில் இலங்கையின் தரம் மோசமடைந்து கீழிறங்கி இருப்பதை உணர்த்தும் புள்ளிவிவரங்களும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்குமாறு இவ்விவகாரம் தொடர்பான சர்வதேச மாநாடு, இலங்கையை வற்புறுத்திக் கோரியிருப்பதும் ஜனநாயக நல்லாட்சிக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் படை அதிகாரிகள் தம்பாட்டில் ஊடகங்கள் மீது அழுத்தங்களைப் போட்டு வருகிறார்கள் என்பதை சுதந்திர ஊடக இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கின்றமையும் இலங்கைத் தீவில் ஊடக சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருவதையே வெளிப்படுத்துகின்றன.

"நாட்டில் ஒரு யுத்தம் இடம்பெறுவதால் யுத்தத்துக்கு மத்தியில் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை தவிர்க்க முடியாததே.'' என்று தனது நிர்வாகத்தின் கீழ் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்ற நிலைமையை நியாயப்படுத்த முயலும் இந்த அரசு, கருத்துவெளியிடும் சுதந்திரம் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றமையையும் அதே யுத்த நிலைமையைக் காரணம்காட்டி நியாயப்படுத்த முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"இலங்கையில் இதுவரை இருந்த ஜனாதிபதிகளில் செய்தித் தணிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவராத ஒரேயொரு ஜனாதிபதி நான்தான்!'' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வப்போது தம்பட்டம் அடித்து தற்பெருமை பேசி பீற்றிக் கொண்டாலும் கூட, இவரது ஆட்சி நிர்வாகத்தில்தான் கருத்து வெளியிடும் சுதந்திரம் மோசமாக சூறையாடப்பட்டு, அச்சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பது தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் அம்பலமாகி வருகின்றது.

செய்தித் தணிக்கையை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாட்டை சட்டரீதியாகவன்றி, சட்ட முறையற்ற வகையிலும் நடைமுறைப்படுத்துவதில் கைதேர்ந்தது இந்த ஆட்சி நிர்வாகம் என்பதை அம்பலப்படுத்துவனவாகவே இந்தப் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன. மஹிந்தரின் ஆட்சிக்குக் கிடைத்த மற்றொரு "நற்சான்றிதழ்' இந்த மதிப்பீட்டு ஆய்வின் முடிவுகளாகும்.

நன்றி- சுடர் ஒளி

ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ள செய்தியானது எம்மை வேதனைக்கும் வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன - மனோ கணேசன். எம்.பி

இலங்கைக்கு ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வருகின்ற ஊடக செய்திகள் எம்மை வேதனைக்கும், வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன.

எமது மூதாதையர்களின் பூர்வீகமான இந்தியா என்ற பெரும் நாடு எப்போதுதான் இலங்கை பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது என மேலக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளின் தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவது தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளையிட்டு மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை தடுப்பதற்காகவே இந்தியா இலங்கைக்கு இராணுவ தளபாட உதவி வழங்குவதாக கூறப்படுகிறது.

இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நுழைவதை தடுப்பதும், இலங்கையில் தமிழ்த் தேசியத்தை ஒழிப்பதும் இந்தியாவின் நலன் சார்ந்தது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள். ஆனால், இது மீண்டும் இந்தியாவுக்கே பாதகமாக முடியும். இலங்கையில் தமிழ் தேசியம் வளர்ச்சி பெறுவது இந்தியாவுக்கு பிடிக்காதது என்பதை விரைவில் பாகிஸ்தான் புரிந்துகொள்ளும். அதன் மூலம் பாகிஸ்தானிய உளவுப்பிரிவு விடுதலை புலிகளுக்கு இரகசிய உதவிகளை வழங்கும் எதிர்மறை நிலை ஏற்படலாம் என்பதை இந்திய தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய தலைவர்கள் வரலாற்றை மீட்டி பார்க்க வேண்டும். இந்தியாவின் வடபுல, சீன, பாகிஸ்தானிய எல்லை 1960 வதுகளில் நெருக்கடியாக இருந்தது. அதனாலேயே தென்புல எல்லை நாடான இலங்கையை நட்பு நாடாக வைத்துக்கொள்வதற்காக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களில் பெருந் தொகையினரை மீளப்பெற்றுகொள்வதற்கு இந்தியா இணங்கியது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் அப்பாவி தொழிலாளர்களின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்காமல் செய்யப்பட்டது.

உண்மையில் அவ்வேளையில் இந்தியா இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் மீளப்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அல்லது ஒருவரையும் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது. இதனால், அன்று பல குடும்பங்கள் சிதைந்தன. இதன் மூலம் எமது மக்கள் தொகை குறைந்து விட்டதனால், எமது அரசியல் பலமும் குறைந்துவிட்டது. அத்துடன் தற்போது சிங்கள அடிப்படை வாதத்திற்கும், தமிழ் தீவிர வாதத்திற்கும் இடையில் தென்னிலங்கை இந்திய வம்சாவளி மக்கள் சிக்கியுள்ளனர். மறுபக்கத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட எமது மக்கள் அங்கே பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், இத்தனைக்குப் பிறகும் இலங்கையை உண்மையான நட்பு நாடாக இந்தியாவால் உருவாக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதேபோல, தமிழ் போராளிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சியளித்தது. 1980களில் அன்றைய ஜே.ஆரின் ஜ.தே.க. அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கை தனக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இவைகளை இந்தியா செய்தது. பிறகு என்ன நடந்தது? இந்தியா ராஜீவ் காந்தியையும், சுமார் 1500 இந்திய வீரர்களையும், இழந்தது. அதேபோல், இந்திய படையினரால் சுமார் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இவை கடந்த காலங்களிலே தவறான ஆலோசகர்களின் பேச்சுக்களை கேட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட துன்பங்களாகும். தூரப்பார்வை இல்லாத முடிவுகள் ஒரு போதும் தீர்வுகளை தராது.

இந்தியாவின் தவறான முடிவுகள் இந்தியா, இலங்கை, தமிழ் மக்கள் ஆகிய எந்த தரப்பினருக்கும் நன்மை தரவில்லை. வரலாறு முழுக்க தவறான முடிவுகள் பெரும் துன்பங்களையே தந்துள்ளன. இன்று நாங்கள் இதையிட்டு வெட்கமும், வேதனையும் அடைகின்றோம்.

எமது மூதாதையர்களின் பூர்வீகமான இந்தியா என்ற பெரும் நாடு எப்போதுதான் இலங்கைப் பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது. இலங்கையில் இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்கு குறுக்கு வழிகள் இல்லை என்பதை இந்திய தலைவர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். இலங்கையில் சமாதானம் மலர்வதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாகும்.

இலங்கையில் சமாதானத்திற்கும், யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும், ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்க வில்லையே.

இலங்கையின் ஐக்கியத்திற்கும், ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா ஆயிரம் முறை சொல்லியிருக்கின்றது. இன்னும் ஒரு ஆயிரம் முறை அதே இந்தியா சொல்லட்டும். அதுவே எங்களின் நிலைப்பாடும் ஆகும்.

Wednesday, October 17, 2007

இந்தியாவின் ஆயுத உதவி தமிழினத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கே வழிவகுக்கும்!

தமிழ்க் கூட்டமைப்பு கவலையுடன் எச்சரிக்கை

இலங்கைக்கான இந்தியாவின் தார்மிக ஆதரவு தாராளமாகக் கிடைப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருப்தி தெரிவித்துள்ள நிலையிலும் புதுடில்லியுடனான கொழும்பின் உறவு மிகவும் அந்நியோன்யமாக இருப்பதாக அரசாங்கத் தரப்பு பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கின்ற வேளையிலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து ஆழ்ந்த கவலையும் எச்சரிக்கையும் வெளிவந்திருக்கிறது.

இலங்கைக்கு ஆரவாரமின்றி கனரக ஆயுதங்களின் விநியோகத்தை இந்திய அரசு அதிகரித்திருப்பதாக இந்தியப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால் அதாவது, ஆயுத விநியோகத்தை இந்தியா அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுவது உறுதியான விடயமாக இருந்தால், அது இலங்கையிலுள்ள தமிழினத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கே வழிவகுக்குமென தமிழ்க் கூட்டமைப்பு எச்சரித்திருக்கிறது.

புதுடில்லிக்கும் கொழும்புக்கும் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கமான பிணைப்புகள் குறித்து புதுடில்லிக்கு ஜனாதிபதி தலைமையிலான குழுவினருடன் விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகண கூறுகையில்;
ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் இலங்கைக்கு பெரும் பயன்பாட்டைப் பெற்றுத் தந்துள்ளது. அங்கு நாம் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இந்தியாவின் ஆதரவு எமக்கு கடந்த காலங்களில் இருந்தது. இப்போதும் அவ்வாதரவு தொடர்கிறது. இதில் சகலவகையான உதவிகளும் அடங்கும். இதன் மூலம் இந்தியா எமதருகிலேயே உள்ளது என்பது மீண்டுமொரு தடவை நிரூபணமாகியுள்ளது என்றார்.

ஆனால், இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்;
`இலங்கையில் மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அண்மைக் காலங்களில் மாத்திரம் 4 ஆயிரத்திற்கும் மேலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மீள்குடியேற்றம் உரிய முறையில் இல்லை. காணாமல் போதலும் படுகொலையும் அதிகரித்து மனித உரிமை பரவலாக மீறப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே இந்தியாவின் ஆயுத உதவி பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது உண்மையாகவிருந்தால் அவர்கள் தமிழர் பிரச்சினையில் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகிறார்கள் என்ற கேள்வி எம்மை குடைகிறது.
சீனா, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதம் வழங்கிவிடக் கூடாது. எனவேதான் ஆயுதம் வழங்குகிறோமென இந்தியத் தரப்பில் (நாராயணன்) கூறப்படுவதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆயுதங்கள் தமிழ் மக்களை இன அழிப்புக்குள்ளாக்கி அவர்களை புதைகுழிக்கு அனுப்பவே வழிவகுக்குமென்பது அம்மக்களினதும் கூட்டமைப்பினதும் எச்சரிக்கையாகும்.

இன ஒழிப்பினை தமிழருக்கு எதிராக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஏன் இந்தியா உதவி வழங்குகிறது என்பது குறித்து தமிழ் மக்களினால் ஜீரணிக்க முடியாத விடயம்' என்றும் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன் வழிகாட்டலின் பேரிலேயே அதிக அளவு ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.

Tuesday, October 16, 2007

ஆரவாரமின்றி ஆயுத விற்பனையை அதிகரிக்கிறது இந்தியா

திரை மறைவில் அதிக உதவியை நாடும் கொழும்பு?


இலங்கையின் இனநெருக்கடிக்கு அதிகாரப்பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா அவ்வப்போது அறிக்கைகளை விடுத்து வருகின்ற போதும் அமைதியான முறையில் இலங்கைக்கான ஆயுத உதவிகளை புதுடில்லி அதிகரித்து வருகின்றது.

இனமோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவின் தார்மிக ஆதரவே இலங்கைக்கு தேவைப்படுவதாக கடந்த சனிக் கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற இந்துஸ்தான் டைம்ஸின் தலைமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஆயினும் மோதல்களைக் கையாள்வதற்காக அதிகளவில் கனரக ஆயுதங்கள், மென்ரக உபகரணங்கள் போன்றவற்றை திரைமறைவில் புதுடில்லியிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் கொழும்பு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக `டைம்ஸ் ஒவ் இந்தியா' பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. அத்துடன் இந்தியாவும் ஏனைய தரப்புகளை பற்றி பொருட்படுத்தாமல் இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் வான்தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக் கூடிய தன்னியக்க 40 மி.மீ. எல்-70 வீச்சுடைய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை அதிகளவில் வழங்கியமை இதற்கான பிந்திய உதாரணமாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு 40 ஆயிரம் டாலர்களுக்கு எல்-70 துப்பாக்கி பரல்களை பெற்றுக்கொள்வதற்கான மற்றொரு விநியோக ஒப்பந்தத்தை இந்தியாவின் ஆயுத தொழிற்சாலை சபை தற்போது பெற்றுள்ளமை உதாரணமாகும். தாழப்பறப்பதை கண்டுபிடிக்கும் 4 `இந்திரா' ராடார்கள் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தானின் தந்திரோபாய ஊடுருவல்கள் இடம்பெற்று விடுமென்ற இந்தியாவின் அச்சத்தை பயன்படுத்தி அதிகளவு பாதுகாப்பு ஆயுதங்கள், ராடார்கள், ஆட்லறிகள், நிஷாந், யூ.ஏ.விக்கள், இராணுவக் கருவிகளை சரியாக அடையாளம் காட்டுவதற்கான லேசர் வடிமைப்புகள் என்பனவற்றை விநியோகிக்குமாறு கொழும்பு புதுடில்லியை கேட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அச்சமயம் புலிகளின் படகுகளிலிருந்து தூரயிருந்து இயக்குவிக்கும் 2 சிறிய ரக விமானங்களை கைப்பற்றியதாக கொழும்பிலிருந்து செய்திகள் வெளியாகியிருந்தனர்.
வெடிமருந்துகளை ஏற்றிய பின் இந்த விமானங்கள் ஏவுகணைகளாக பயன்படுத்தப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் தமிழ் நாட்டைப் பயன்படுத்தி வருவதாக இலங்கை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதுவரை பாதுகாப்பிற்கான உபகரணங்களையே இந்தியா இலங்கைக்கு இதுவரை அதிகளவில் வழங்குகின்ற போதிலும் `சில அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை' விநியோகிக்கின்றது என்பதையும் நிராகரிக்க முடியாது என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியா அவ்வாறு வழங்காதுவிடின் அந்த வெற்றிடத்தை சீனா அல்லது பாகிஸ்தான் நிரப்பிவிடும் என்றும் அந்த நிலைமை ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1990 களில் மியான்மாரில் இடம்பெற்றதைப் போன்றதொன்று பிராந்தியத்தில் இடம்பெறுவதை இந்தியா விரும்பவில்லை.

இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு இதுதொடர்பாக ஏற்பட்ட அசௌகரியத்தை இந்த வருட முற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்திருந்த கருத்து வெளிப்படுத்துகின்றது. சீனாவிடமிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ ஆயுதங்கள் பெற்றுக்கொள்வதை இலங்கை தவிர்த்துக் கொள்ளவேண்டுமென நாராயணன் அச்சமயம் தெரிவித்திருந்தார்.

நாராயணனின் இந்த அறிவிப்புகள் இலங்கைக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தன, அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு வழங்காது என்று கூறியிருந்தமை இலங்கை தரப்பில் ஆத்திரத்தையூட்டியது.

உண்மையிலேயே இலங்கைக்கான ஆயுத விநியோகம் தமிழ் நாட்டில் அரசியல் ரீதியான உணர்வலைகளை தட்டி விடும் என்பதையும் இந்திய அரசாங்கம் மனதில் கொண்டிருந்தது. ஆயினும் தற்போது இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரித்துள்ளதாக `டைம்ஸ் ஒவ் இந்தியா' சுட்டிக்காட்டியுள்ளது.

Thursday, October 11, 2007

இலங்கை வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு ரூபா 16,644 கோடி 70 இலட்சம் ஒதுக்கீடு

**உத்தேச மொத்த செலவினம் 92,505 கோடி 72 இலட்ச ரூபா

அடுத்த நிதியாண்டின் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலப் பிரேரணையை பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று புதன்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.

2008 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் உத்தேச மொத்த செலவினம் 92,505 கோடியே 72 இலட்சத்து 84 ஆயிரம் (92,505, 72, 84,000) ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது 2007 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூலம் அரசாங்கத்தின் மொத்த செலவினமாக மதிப்பிடப்பட்ட தொகையிலும் பார்க்க 11,561 கோடியே 37 இலட்சத்து 34 ஆயிரம் (11,561,37,34,000) ரூபா அதிகரிப்பை காட்டுகிறது.

2007 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமாக அவ்வாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் 80,944 கோடியே 35 இலட்சத்து 50 ஆயிரம் (80,944,35,50,000) ரூபா மதிப்பிடப்பட்டிருந்தது.

2008 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுக்கே அதிகபட்சமாக 16,644 கோடியே 70 இலட்சம் (16,644,70,00,000) ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2007 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திலும் இவ் அமைச்சுக்கே அதிகபட்சமாக 13,955 கோடியே 63 இலட்சத்து 33 ஆயிரம் (13,955,63,33,000) ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், இதனுடன் ஒப்பிடும் போது, அடுத்த ஆண்டுக்கென 2,689 கோடியே 6 இலட்சத்து 67 ஆயிரம் (2,689,06,67,000) ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதேநேரம், 2008 ஆம் ஆண்டில் பொது சேவைகளுக்காக கொடுக்கத்தக்க தொகைகளுக்காக 918 கோடியே 79 இலட்சத்து 37 ஆயிரம் (918,79,37,000) ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதில் அடக்கும் ஜனாதிபதிக்கான செலவினங்களுக்கென கடந்த முறையுடன் ஒப்பிடும்போது, இம்முறை 218 கோடியே ஒரு இலட்சத்து 28 ஆயிரம் (218,01,28,000) ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கான செலவினங்களுக்காக 357 கோடியே 77 இலட்சத்து 19 ஆயிரம் (357,77,19,000) ரூபா மதிப்பிடப்பட்டிருந்ததுடன், 2008 ஆம் ஆண்டுக்கென 575 கோடியே 78 இலட்சத்து 47 ஆயிரம் (575,78,47,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2008 ஆம் ஆண்டில் நிதி திட்டமிடல் அமைச்சுக்கான செலவினமாக 9,691 கோடியே 21 இலட்சத்து 59 ஆயிரம் (9,691,21,59,000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், தேசத்தை கட்டியெழுப்புதல், நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்கான செலவினங்களுக்காக அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் 5,428 கோடியே 21 இலட்சத்து 45 ஆயிரம் (5,428,21,45,000) ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டுக்கென சுகாதார அமைச்சின் செலவினங்களுக்காக 5,779 கோடியே 99 இலட்சத்து 98 ஆயிரம் (5,779,99,98,000) ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செலவினங்களாக 2008 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டமூலத்தில் 657 கோடியே 66 இலட்சத்து 75 ஆயிரம் (657,66,75,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சுக்கான அடுத்த வருட செலவினமாக 1,986 கோடியே 15 இலட்சத்து 92 ஆயிரம் (1,986,15,92,000) ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், போக்குவரத்து அமைச்சுக்கான 2008 ஆம் நிதியாண்டுக்கான செலவினமாக 3,818 கோடியே 41 இலட்சத்து 70 ஆயிரம் (3,818,41,70,000) ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சுக்கான செலவினங்களுக்காக 5,201 கோடியே 80 இலட்சத்து 93 ஆயிரம் (5,201,80,93,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சுக்கு 3,264 கோடியே 26 இலட்சத்து 18 ஆயிரம் (3,264, 26,18,000) ரூபாவும், மின்வலு, சக்தி அமைச்சுக்கு 3,172 கோடியே 61 இலட்சத்து 10 ஆயிரம் (3,172,61,10,000)ரூபாவும் அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் செலவினங்களாக மதிப்பிடப்பட்டுள்ளன.

இதேநேரம், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கான செலவினமாக அடுத்த ஆண்டுக்கென 7,890 கோடி (7,890,00,00,000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கென 11,476 கோடியே 95 இலட்சத்து 60 ஆயிரம் (11,476,95,60,000) ரூபா செலவினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவினங்களுக்காகவே இரண்டாவது அதிகபட்சமான தொகை ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இதன்கீழ் வரும் வடக்கு மாகாண சபைக்கான செலவினமாக 984 கோடியே 90 இலட்சம் (984,90,00,000) ரூபாவும், கிழக்கு மாகாண சபைக்கான செலவினமாக 1,051 கோடியே 10 இலட்சம் (1,051,10,00,000) ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சுக்கான செலவினங்களுக்காக 2,582 கோடியே 41 இலட்சத்து 58 ஆயிரம் (2,582,41,58,000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், உயர்கல்வி அமைச்சுக்கான அடுத்த ஆண்டு செலவினமாக 2,053 கோடியே 43 இலட்சத்து 17 ஆயிரம் (2,053,43,17,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

57 அமைச்சுகளுக்கான 2008 ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் தொடர்பான மதிப்பீடுகள் இந்த ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
2008 ஆம் நிதியாண்டுக்கான அரசின் மொத்த செலவினமாக 92,505 கோடியே 72 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ள அதேநேரம், அரசுக்காகவோ அல்லது அரசாங்கம் சார்பாகவோ இலங்கையில் அல்லது அதற்கு அப்பால் 74,090 கோடியே 35 இலட்சத்து 93 ஆயிரத்துக்கு அதிகப்படாத தொகையை மொத்த கடனாக பெற முடியுமெனவும் இந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Friday, October 5, 2007

வன்னிசென்ற குழுவில் பசில் இடம்பெற்றிருந்தமை தமிழ்ச்செல்வனின் அறிவிப்பின் மூலம் நிரூபணம்

விடுதலைப் புலிகளுடன் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் சார்பிலான குழு இரகசிய உடன்படிக்கை செய்து கொண்ட உண்மை வெளிவரத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சி, ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவின் மறுப்பை நிராகரிக்கும் வகையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பேட்டியளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் காலடி வைத்தவுடனேயே சபையை தவறாக வழி நடத்தும் விதத்தில் பொய் கூறியுள்ளார். அவரது கன்னி உரையே பொய்யாக அமைந்துவிட்டதாகவும் இதனையிட்டு அரசு தரப்பு வெட்கப்படவேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்ட உண்மை புலிகள் தரப்பினராலேயே அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் தன்மானமிருந்தால் அரசு உடனடியாக பதவி விலகவேண்டும். இனிமேலும் அரசு பதவியில் நீடிப்பதற்கு தார்மீகக் கடப்பாடு கிடையாதெனவும் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு தான் கிளிநொச்சிக்குப் போகவே இல்லையென ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பிரவேசித்த முதலாவது நாளிலேயே பொய்யுரையாற்றி சாதனை படைத்துவிட்டார். விடுதலைப் புலிகளுக்கோ வேறு எவருக்குமோ பணம் கைமாறப்படவில்லை எனவும் ஆளும்தரப்பு பறை சாற்றி வந்தது.

தமிழ்ச்செல்வனின் பேட்டியை மேலோட்டமாகத் தூக்கிப் பிடித்த அரசு தமக்கு சாதகமானவற்றை மட்டுமே பெரிதுபடுத்திக் காட்ட முனைகின்றது. தமிழ்ச்செல்வன் தனது பேட்டியில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷ சார்பில் ஒரு குழு வன்னி வந்ததாகவும் அவர்களில் பசில் ராஜபக்ஷவும் இருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். அக்குழு அரசியல் பிரிவினரைச் சந்திக்கவில்லையெனவும் நிருவாகப் பிரிவைச் சேர்ந்தவர்களையே சந்தித்துப் பேசியதாகவும் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் பசில் ராஜபக்ஷவினதும், ஆளும் தரப்பினரதும் குட்டு வெளிப்பட்டுவிட்டது.

அதேபோன்றே புலிகள் மகிந்த குழுவினரிடமிருந்து பணமெதனையும் பெற்றுக் கொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட தமிழ்ச்செல்வன் ஆனால் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வேறொருவர் பணம் பெற்றுக் கொண்டிருப்பதாக தான் அறிவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்???

இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும், ஷ்ரீபதி சூரியாராச்சியும் சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷவும் அக்குழுவில் சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பணப்பரிமாற்றமெதுவுமே இடம்பெறவில்லையென கூறிவந்த ஆளும் தரப்பினர் எவருடனோ பணம் கைமாறப்பட்டிருப்பதை புலிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்!

இங்கு நாம் முக்கிய யதார்த்தத்தை உணரவேண்டும். இவ்வளவு பெரியதொரு பணக்கைமாறும் இரகசிய உடன்பாடும் குறித்து எந்தத் தரப்பும் முழுமையாக உண்மையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எப்படியோ உண்மையின் ஒரு பகுதியாவது வெளிவந்துவிட்டது. தெரிவுக்குழு விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே உண்மை அம்பலமாகிவிட்டது. மங்கள, ஸ்ரீபதியின் முறைப்பாடு உண்மையென நிரூபிக்கப்பட்டுவிட்டது.

விடுதலைப் புலிகள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கழுத்தில் சுருக்குக் கையிற்றை மாட்டியுள்ளனர். அதை வைத்தே அரசாங்கத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

குமரன் பத்மநாதன் உரிய முறையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்க முடியும். புலிகளுக்கு பத்மநாதனை விடுவித்துக் கொள்ள வேண்டும். மகிந்த ராஜபக்ஷ கம்பனிக்கு சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தப்பவேண்டும். இதன் காரணமாக நாடுகளுக்கிடையிலான ஒழுங்கு விதியை மீறி பத்மநாதன் பிடிபட்டவிடயத்தை இணையத்தளத்தில் வெளியிட்டு விவகாரத்தை குழப்பியது.

தெரிவுக் குழு விசாரணை முன்னெடுக்கப்படும் போது மேலும் பல உண்மைகள் வெளிக்கொணரப்படவிருக்கின்றது. தன்மானமுள்ள அரசாக இருந்தால் உடனே பதவிவிலகி புதிய ஆட்சிக்கான மக்கள் ஆணையைக் கோர முன்வரவேண்டும்.

நன்றி: தினக்குரல்