Friday, December 21, 2007

அமெரிக்கா மறுப்பு!! இந்தியா அழைப்பு!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்கு இடமளிப்பது மற்றும் அமைப்புகளும் ஊடகங்களும் நாட்டின் எந்தவொரு இடத்துக்கும் பிரவேசிக்கும் வசதிகளை வழங்குவது உட்பட மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றும்வரை இலங்கைக்கு யுத்த உபகரணங்கள் வழங்குவதை இடைநிறுத்த அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு இலங்கை அரசு ஒருபோதும் இணங்கிவராது என்று அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

""புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புப் படையினர் யுத்தம் செய்கையில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணிவதற்கு ஒருபோதும் முடியாது'' என அரசின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

வளைகுடா யுத்தத்தின்போது குவைத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அமெரிக்க ஊடகங்கள் எந்தவொரு இடங்களுக்கும் செல்வதற்கு அமெரிக்க இராணுவம் இடமளிக்கவில்லை. அந்த நிலையில் அமெரிக்கா இந்நாட்டில் பயங்கரவாதிகள் இருக்கும் பிரதேசங்களுக்குப் போவதற்கு இடமளிக்குமாறு கோருவது கேலிக்குரியது'' என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா இந்நாட்டுக்கு யுத்த உபகரணங்களை விற்பனை செய்வதை நிறுத்துவதால் இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாதெனவும் அவர் கூறினார்.

""அண்மையில் அமெரிக்கா இந்நாட்டுக் கடற்படைக்குத் தாக்குதல் ஆயுதமற்ற 10 படகுகளை வழங்கியது. அது குதிரையைக் கொடுத்து கடிவாளத்தை வழங்காத நடவடிக்கையாகும்".

"அமெரிக்காவின் யுத்த உபகரணங்களுக்குப் பதிலாக ஐந்து நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன'' என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விமானப்படையை இந்திய விமானப்படையுடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்திகை பார்க்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அமைதி நிலவக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்து வருவதாகவே தெரிகிறது.

அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் அயல்நாடுகளில் யுத்தத்தை ஊக்குவிக்கிறது. காலச்சுழற்சியில் அதன் பலனை இந்தியாவிலேயே அறுவடை செய்யும்.

வாழ்க இந்தியா!

Sunday, December 16, 2007

இந்த வரைபடம் இலங்கை மக்களின் மனநிலையை தெளிவாக காட்டுகிறது


இலங்கை ஜனாதிபதியின் செயல்பாடுகளை பற்றிய ஒரு சர்வே.

இது இலங்கை மக்களின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது.

சிங்கள மக்கள் எந்த அளவு யுத்தத்தை விரும்புகிறார்கள் என்பது புரிகிறது.


யுத்தத்திற்கான 2008ம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில் சமாதானம் எப்படி வருமென்றுதான் புரியவில்லை.

வரைபடத்தில் UPCOUNTRY TAMIL எனக் குறிப்பிடப்பட்டிருப்பது இந்திய வம்சாவழித்தமிழரையே!

மக்களின் விருப்பத்திற்க்கு எதிராக இந்திய வம்சாவழி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தத்திற்க்கான வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, December 2, 2007

இந்தியாவின் இரட்டை வேடம்!!

ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் இணைந்து தில்லியில் நடத்திய மாநாட்டில்:

ராணுவ ரீதியாக இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணமுடியாது எனவும் இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் ரீதியான ஒரு தீர்வின் மூலமே இப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகளை பாதுகாக்கவும், சர்வதேச சட்டங்களை மதித்து பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படியும் கேட்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 திகதி இந்த மாநாட்டை இந்திய பிரதமரும் போர்த்துக்கல் நாட்டின் பிரதமரும் இணந்து நடத்தியுள்ளனர்.

அப்படியானால் ஏன் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களையும் பண உதவிகளையும் வழங்குகிறது?

எதற்க்காக/யாரை ஏமாற்ற இப்படி ஒரு போலி அறிக்கை?

ஏன் இந்த இரட்டை வேடம்!?

ஆயுத உதவிகளை அள்ளிக் கொடுக்கும் அயல்நாடுகள் மனிதாபிமானம் பற்றி பேசுகின்றன.

வடக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மௌனம் சாதித்த இந்தியாவும், ஐ.நா.வும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தெற்கில் ஒரு தாக்குதல் நடைபெற்ற பின்பே தங்கள் மௌனத்தை கலைத்துள்ளன.

வடக்கிலும் கிழக்கிலும் அழிவுகள் ஏற்படும் போதெல்லாம் மௌனம் சாதிப்பவர்கள் தெற்கில் ஏதாவது நடந்ததும் துடித்து விடுகின்றனர்.

வடக்கே மோசமான தாக்குதல் இடம்பெறும் போது தெற்கில் அதன் பிரதிபலிப்பு இருக்குமென்பது இன்று நேற்றுத் தெரிந்ததல்ல, இனப்பிரச்சினை தொடங்கிய காலம் முதலே என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இது இவ்வாறிருக்க இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்‌ஷ டில்லி வந்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ஜனாதிபதி பீரதிபா பட்டீல் ஆகியோரை சந்தித்துள்ளார். யுனெஸ்கோவின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் டில்லி வந்ததாக கூறப்பட்டாலும் அதனைத் தாண்டிய சில விடயங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் டில்லி விஜயம், அவரின் பாரியாரின் டில்லி விஜயம், இலங்கை அமைச்சர்களின் டில்லி படையெடுப்பென டில்லியுடனான உறவை நெருக்கமாக்க இலங்கை கடுமையாக முயன்று வருகின்றது. இதற்கான ஏதுவான நிலையை டில்லியும் இடையிடையே வெளிப்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்படவுள்ள 60 ஆவது சுதந்திர தினத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் சமாதானம் ஏற்படக்கூடாதென்ற விதத்திலேயே இந்தியா கவனமாக காய் நகர்த்துகிறது.

இந்திய- இலங்கை உறவுகள் இவ்வாறு நெருக்கமடைந்துவரும் நிலையில் ஈழப் போராட்டமும் தீவிர கட்டத்தை நெருங்குவதால் இந்தியா இலங்கை விவகாரத்தில் முக்கிய பங்கொன்றை வகிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நிச்சயமாக இது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கப்போவதில்லையென்பது மட்டும் உறுதியானது.

தன்னுடைய 13 மாநிலங்களில் நக்ஸலைட் பிரச்சினையை எதிர்நோக்கும் இந்தியா அண்டைநாடான இலங்கையின் எரியும் இனப்பிரச்சினைக்கு எண்ணை ஊற்றி வளர்க்கிறது.

வாழ்க இந்தியா!!

Monday, November 26, 2007

ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் டாலர்கள் வழங்கியது இந்தியா!!

ஆயுதக் கொள்வனவுக்காக சிறிலங்காவுக்கு குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் டாலர்கள் வழங்கியது இந்தியா: த நேசன்

சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் த நேசனில் வெளியாகியுள்ள செய்தி:
வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களுக்குள் படையினர் ஊடுருவி அதனைக் கைப்பற்றுவதற்கு ஒரு டசினுக்கு மேற்பட்ட முறை பல்வேறு திசைகளில் முயற்சித்த போதும் எல்லாம் தோல்வி கண்டுள்ளன.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் 57 ஆவது படையணியை உருவாக்கிய பின்னர் இராணுவம் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.கடந்த வாரம் மணலாற்றுப் பகுதியில் புதிதாக 59 ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளது. இது அங்கு புதிய களமுனை விரைவில் திறக்கப்படலாம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் ஆனையிறவுத் தளத்தை தாக்கி அழித்து தற்போதைய முன்னணி நிலைகள் வரை கடந்த 2000 ஆம் ஆண்டு முன்நகர்ந்திருந்தனர். எனினும் அப்போது காஷ்மீர் முன்னரங்கில் பாகிஸ்தான் இராணுவத்தினால் பயன்படுத்தப்படும் பல்குழல் உந்துகணை செலுத்திகளை (மல்டிபேர்ரல் ரொக்கெட் லோஞ்சர்கள்) பாகிஸ்தான் வழங்கியது. சிறிலங்காப் படையினருக்கு பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. எனவே சிறிலங்காவின் அரசாங்கங்கள் பாகிஸ்தானுக்கு நன்றியுடையனவாக இருக்கின்றன.

தற்போதைய மகிந்த அரசாங்கம் பாகிஸ்தானுக்கான தனது மேலதிகமான ஆதரவை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பொதுநலவாய குழுவில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றுவது என்ற முடிவை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம ஆதரித்த போதும் முசாரப்புக்கு மகிந்த தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.அதேபோல் முன்னைய அரசாங்கங்களுக்கு அளித்த உதவிகளை விட அமெரிக்கா தற்போதைய அரசாங்கத்துக்கு அதிக படைத்துறை உதவிகளை வழங்கி வருகின்றது.

விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக அமெரிக்கா நேரடியான படைத்துறை உதவிகளையும், நேரடியற்ற படைத்துறை உதவிகளையும் வழங்கி வருகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகளை தடுப்பதற்காக அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகெங்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது.

கடந்த வாரம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களையும் அமெரிக்கா முடக்கியிருந்தது. இது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்ல முழு தமிழ்ச் சமூகத்திற்கும் விடுக்கப்பட்ட செய்தியாகும்.

இந்திய கடற்படையும், விடுதலைப் புலிகளின் கடற் செயற்பாடுகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை சிறிலங்கா கடற்படையினருக்கு வழங்கி வருகின்றது. இந்திய மத்திய அரசு சிறிலங்கா அரசாங்கத்தின் படைத்துறை கொள்வனவுகளுக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை குறைந்த வட்டியில் வழங்கியுள்ளது. தற்போது தாக்குதல் ஆயுதங்களை வழங்கவும் அது சம்மதித்துள்ளது.

The Indian Navy has been sharing intelligence with its counterparts here, helping destroy several Tiger arms ships. The Central government, which has granted Sri Lanka a US$ 100 million credit line at very low interest, for military purchases, finally agreed to provide certain offensive weapons.

ஆனால் 18 மாதகால போர் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பகுதி மக்களை அது விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்பியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியும் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். பல கட்சிகள் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றன.போர் தீவிரமடைந்து 25 வருடங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய போகின்றது. இந்த காலப்பகுதியில் போரும், சமாதானமும் மாறி மாறி நடைபெற்று விட்டன. இந்த 25 ஆவது வருட நிறைவில் போரானது அதிகளவில் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை ஆதரிக்கும் முடிவால் இலங்கை - இந்திய உறவில் விரிசல்!!!

பாகிஸ்தானை ஆதரிக்கும் முடிவால் இலங்கை - இந்திய உறவில் விரிசல்!

பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கும் விடயத்தில் இலங்கை எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டால் இந்தியா அதிருப்தியடைந் திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து உகண்டாவிலுள்ள இலங்கை வெளியு றவு அமைச்சக அதிகாரிகள் குழுவுடன் இந்திய வெளி யுறவு அமைச்சக அதிகாரிகள் குழுவினர் கலந்துரையா டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானை ஆதரிக்கும் நிலைப்பாட்டால் இலங் கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரி சல் நிலை ஏற்படும் சாத்தியங்கள் தோன்றியிருப்பதாக இராஜதந்திரிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை அரச உயர்மட்டத்துடன் இந்தியா விரைவில் உத்தியோகபூர்வமாக பேச்சு நடத்த விருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கும் விடயத்தில் மலேஷியா மட்டுமே முதலில் எதிர்த்து வாக்களித்தது. பின்னர் இலங்கையும் எதிர்த்து வாக்களிப்பதாக அறிவித்தது. இலங்கையுடன் மிக நெருக்மான உறவுகளை இந்தியா கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானை ஆதரிக்க இலங்கை எடுத்த முடிவானது இந்தியாவை சினம்கொள்ள வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளாராக இந்தியாவின் கமலேஷ் சர்மா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதுவரை காலமும் லண்டனிலுள்ள இந்திய தூதவராக பணியாற்றி வந்த இவர் எதிர்வரும் மார்ச் மாதம் பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்று தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அப்பதவியில் நீடிப்பார்.

Tuesday, November 13, 2007

தேசிய வருமானத்துடன் ஒப்பிடும்போது தெற்காசியாவில் மாத்திரமல்ல, உலகிலேயே இலங்கையில்தான் இராணுவ செலவினம் அதிகம்

10 இலட்சம் மக்களுக்கு 8000 இராணுவத்தினரை இலங்கை கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தானில் இது 4000 மாகவும், இந்தியாவில் இது 1300 ஆகவும், நேபாளத்தில் இது 2700 ஆகவும், பங்களாதேஷில் 1000 ஆகவும் உள்ளது.

சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் பல யுத்தங்களைப் புரிந்த இந்தியா 1 மில்லியனுக்கு 1300 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை மிக அதிக காலமாக இராணுவ ஆட்சியைக் கொண்டிருந்த பாகிஸ்தான் 1 மில்லியனுக்கு 4000 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, ஜனநாயக குடியரசாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எமது நாடு தனது நாட்டின் ஒரு பகுதி மக்களைக் கொலை செய்வதற்காக 1 மில்லியனுக்கு 8000 இராணுவத்தைக் கொண்டுள்ள கொடூரத்தைக் காண்கிறோம்.

** பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரை **

இலங்கையில் வருடாந்தம் சமர்ப்பிக்கப்படும் வரவு - செலவுத்திட்டங்கள் எந்தளவுக்கு நாட்டின் அபிவிருத்திக்கு உதவியுள்ளன என்பதை பொருளாதார ரீதியில் பகுப்பாய்வு செய்வது அவசியமானதாகும். இங்கு சிங்கப்பூர் நாட்டின் முதலாவது பிரதமரும் அந்நாட்டின் இன்றைய மதியுரை அமைச்சருமாகிய (Minister Mentor) லீ குவான் யூ அவர்கள் இலங்கையைப் பற்றி அன்றும் இன்றும் கூறிய கருத்துகள் இந்நாட்டில் பிறந்த அனைவரும் நன்றாக தமது மனங்களில் பதிய வைக்க வேண்டிய விடயங்களாகும்.

இவர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் 1965 இல் பிரிந்து சுதந்திரம் பெற்ற போது Ceylon இன் பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிப்பதே எமது இலக்கு என்று கூறினார். அது தவிர, லண்டன் செல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நேரடி விமான வசதி இல்லாமல் கொழும்பு வந்தே இலண்டனுக்கு விமானம் ஏறிச் சென்றார். ஆனால், அவர் இன்று Sri Lanka பற்றிக் கூறுவது எமக்கு சிறந்த படிப்பினையாகும்.

அவரது கூற்றில் கூறுவதானால் "எமது அதிர்ஷ்டம் என்னவெனில், நாம் காலம் பிந்தி சுதந்திரம் பெற்றமையாகும். நாம் சுதந்திரம் பெற்றபோது சிங்கப்பூர் நாட்டில் சீன இனத்தவர், மலே இனத்தவர், இந்திய உபகண்டத்தினர் என மூன்று வகையான இனக்குழுக்கள் காணப்பட்டன. நிர்வாக மொழியைத் தெரிவு செய்வதில் எமக்கு சிக்கல்கள் காணப்பட்டன. Sri Lanka வின் கசப்பான அனுபவம் எங்களுக்கு வழிகாட்டியது. ஏனெனில், Sri Lanka நிர்வாக, கல்வி மொழிக் கொள்கை தொடர்பில் ஆங்கிலத்திலிருந்து சிங்கள மொழிக்கு மாறியபோது அங்கு கலவரம் வெடித்தது. பொருளாதாரம் பாதிப்படைய ஆரம்பித்தது.

சிங்கப்பூரிலும் மூன்று வகையான இனக்குழுக்கள் காணப்பட்டமையினால் அதாவது ஒரு மொழியைத் தெரிவு செய்யும் போது ஏனைய இனத்தவரும் தமது மொழிக்கு முன்னுரிமை கொடுப்பர். இதனால், சிங்கப்பூரின் தேசியத்துவம் கட்டி வளர்க்கப்பட முடியாது போகும் என்பதால் நிர்வாக, கல்வி மொழியாக ஆங்கிலத்தைத் தெரிவு செய்தோம். இதனால், நாங்கள் பொருளாதார சுபீட்சத்தை அடைந்து கொண்டோம்.

Sri Lanka இப்போதும் பணவீக்கம், வேலையின்மை, நாணயப் பெறுமதித்தேய்வு என்பவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, நாங்கள் பூமி வெப்பமடைதலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம்" இதுவே லீ குவான் யூ அவர்கள் இன்று இலங்கை பற்றிக் கூறும் வார்த்தையாகும்.

**இந்த இடத்திலிருந்தே நான் எனது வரவு - செலவுத் திட்ட உரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். **

இலங்கை சுதந்திரம் அடையும் போது ஆசியாவில் ஜப்பான், மலேசியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது செல்வந்த நாடாகக் காணப்பட்டது. தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் தலா வருமானத்தைப் பொறுத்தவரையில் இலங்கையைவிட பின்தங்கியே காணப்பட்டன. இப்போது இந்நாடுகள் அனைத்தும் இலங்கையை விஞ்சிவிட்டன. அதுமட்டுமன்றி, சுதந்திரத்திற்கு பிந்திய கடந்த 59 வருட காலத்தில் இந்த அழகிய இந்து சமுத்திரத்தின் முத்து உலகின் கண்ணீர்த் தீவாக மாறிப்போனது.

மொத்தச் செலவில் ஐந்தில் ஒரு பகுதியை பாதுகாப்புக்காக ஒதுக்கி சொந்தநாட்டு மக்களுக்கெதிராகவே யுத்தம் புரியும் நிலையும் ஏற்பட்டது. இதற்கான காரணங்கள் என்ன? விடை இந்த நாடே இனவாத, மதவாத, மொழிவாத அரசியலுக்குள் ஆரம்பத்திலிருந்தே விழுந்து விட்டமையாகும். இதனால், இலங்கைத்துவம் அழிந்து இனவாத அரசியலே நாட்டை இன்று வரை படு குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது.

எல்லா நாடுகளும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்கையில், இலங்கை பின்னோக்கிச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் மூன்று விடயங்களில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. முதலாவது சிங்கள அரசுக்கும் தமிழ்தேசிய இனத்துக்கும் இடையில் நடைபெறும் யுத்தமும் அதன் மூலமான படுகொலைகளும். இதுவே அந்நிய முதலீடுகள் பாரிய அளவில் உள்வராமல் தடுக்கின்றது.இரண்டாவது கிரிக்கெட் கிரிக்கெட் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. மூன்றாவது சமூக நலக் குறிகாட்டிகளில் பாரிய முன்னேற்றம்.

சமூக நலக் குறிகாட்டிகளைப் பொறுத்தவரையில் உலகிலேயே அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இலங்கை மட்டுமே அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கீடாக மேம்பட்ட சமூகநலக் குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது. ஆனால், அதன் பெறுபேற்றினை தொடர்ந்தேர்ச்சியாக மந்தமான பொருளாதார செயலாற்றத்தின் மூலம் எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. முடிந்திருந்தால் எமது நாட்டுப் பெண்கள் வெறும் 15,000 ரூபா சம்பளத்திற்காக 130 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

பாதுகாப்புச் செலவீனம்: இந்த வரவு - செலவுத் திட்டமானது இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களான தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக உருவாக்கிய வரவு - செலவுத்திட்டமே தவிர வேறல்ல. 1983 ஆம் ஆண்டு 1.7 பில்லியனாக இருந்த பாதுகாப்புச் செலவீனமானது, 2007 ஆம் ஆண்டிற்கு அதாவது 25 ஆவது வருடத்திற்கு 166.4 பில்லியனாக இது அதிகரிக்கப்பட்டுள்ளது. 2005 இல் 56.3 பில்லியனாக இருந்த இதே பாதுகாப்புச் செலவினமானது 2006 இல் 69.5 பில்லியனாகவும் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் திடீரென 100 பில்லியனையும் தாண்டியது. 2007 இல் 139.6 பில்லியனை எட்டி, 2008 இற்கு இது மீண்டும் அதிகரிக்கப்பட்டு நான் மேற்சொன்ன 166.4 பில்லியனாக இன்று உயர்ந்துள்ளது.

இதில் இராணுவத்திற்கு ஏறத்தாழ ஏழாயிரத்து இருநூற்றி அறுபத்தியெட்டு கோடியே எண்பது இலட்சமும் (7268,80,00000), கடற்படைக்கு 2717 கோடியே 40 இலட்சமும், விமானப்படைக்கு 1956 கோடியும், பொலிஸாருக்கு 3722 கோடியும், ஊர்காவல் படையினருக்கு 1155 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு வருமானத்தில் 20 வீதத்திற்கு மிக அதிகமானதாகும்.
அரசாங்க அறிவித்தலின்படி இராணுவம் 31582 பேராலும், கடற்படை 10891 பேராலும், விமானப்படை 4621 பேராலும் அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், விசேட அதிரடிப்படையானது 1496 பேராலும் ஊர்காவல் படையினர் 34900 பேராலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் யுத்தத்திற்கான ஆளணியினர் 74619 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயுத தளபாட இறக்குமதியில் 3 ஆம் தரப்பினருக்கு எதுவும் போகாமல் அதுவும் முழுமையாக ராஜபக்ஷ கம்பனிக்கு கிடைக்கக்கூடிய வகையில் அரசாங்கம் Sri Lanka Logistic and technology என்ற கம்பனியையும் ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில் சகலவிதமான யுத்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் இக்கம்பனியே இறக்குமதி செய்யும். மொத்தத்தில் முழு மூச்சான ஓர் யுத்தத்தை நடத்துவதற்கான வரவு - செலவுத் திட்டமாகவே இது முன்வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு 166.4 பில்லியனை ஒதுக்கிய அரசாங்கம் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்யவும் பெரும் அழிவுகளை முகாமைத்துவம் செய்யவும் ஒதுக்கியுள்ள பணம் வெறும் 4.36 பில்லியன் மாத்திரம் தான். அதாவது, 4367 கோடியே எண்பத்தாறு இலட்சம் ரூபாய் மாத்திரமே இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கிழக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்களை இந்த அரசாங்கம் 2006, 2007 ஆம் ஆண்டுகளில் இடம்பெயர வைத்தது. இராணுவத்தின் மூர்க்கத்தனமான பல்குழல் பீரங்கித் தாக்குதலாலும், விமானக்குண்டு வீச்சினாலும், 300 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. விவசாயம் அழிக்கப்பட்டது. கால்நடைகள்,மீன்பிடி யாவும் அழிக்கப்பட்டன. இன்றுவரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழனுக்காவது நஷ்டஈடு கொடுக்கப்பட்டதாக அரசாங்கத்தால் சொல்ல முடியுமா?

இதனை விட கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது மண்ணை விட்டு விரட்டப்பட்டு இன்று பல்வேறுபட்ட அகதி முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தொண்டர் ஸ்தாபன அறிக்கையின் பிரகாரம், ஏறத்தாழ ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளூரில் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் இன்னும் அகதிகளாக்கப்படுவோருக்கும்,பெரும் அழிவுகளுக்குமென ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் 4367 கோடி மாத்திரம் தான்.

இராணுவ மயநாடு: தென்னாசியாவில் மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக ஷ்ரீலங்காவே விளங்குகின்றது. கிடைக்கும் தரவுகளின் பிரகாரம் அவதானிக்கின்ற பொழுது, 10 இலட்சம் மக்களுக்கு 8000 இராணுவத்தினரை இலங்கை கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தானில் இது 4000 மாகவும், இந்தியாவில் இது 1300 ஆகவும், நேபாளத்தில் இது 2700 ஆகவும், பங்களாதேஷில் இது 1000 ஆகவும் உள்ளது. சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் பல யுத்தங்களைப் புரிந்த இந்தியா 1 மில்லியனுக்கு 1300 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை மிக அதிக காலமாக இராணுவ ஆட்சியைக் கொண்டிருந்த பாகிஸ்தான் 1 மில்லியனுக்கு 4000 இராணுவத்தினரைக் கொண்டிருக்க, ஜனநாயக குடியரசாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எமது நாடு தனது நாட்டின் ஒரு பகுதி மக்களைக் கொலை செய்வதற்காக 1 மில்லியனுக்கு 8000 இராணுவத்தைக் கொண்டுள்ள கொடூரத்தையும் நாம் இலங்கையில் தான் பார்க்க முடியும்.

இந்த இலட்சணத்தில் தான் 2008 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் இங்கு அரங்கேறுகின்றது. முரண்பாடுகளால் ஆயுதப் போராட்டம் நடக்கக் கூடிய, கொலம்பியா, மியன்மார், சிரலியோன், சூடான், பிலிப்பெய்ன்ஸ், உகண்டா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, இலங்கையின் இராணுவச் செலவானது மிக அதிகமானது. இலங்கையில் இராணுவச் செலவானது உள்நாட்டுத் தேசிய வருமானத்துடன் ஒப்பிடும் பொழுது தெற்காசியாவில் மாத்திரமல்ல, உலகத்திலேயே இங்குதான் மிக அதிகம்.

பாதுகாப்புச் செலவுக்கு ஒதுக்கிய நிதியானது (20 வீதம்) கல்வி, உயர் கல்வி, சுகாதாரம், விவசாயம், அபிவிருத்தி, போக்குவரத்து, மீன்பிடி மற்றும் நீரியியல் வளம் என்பவற்றுக்குக் கூட்டாக ஒதுக்கிய தொகையை (17 வீதம்) விட அதிகமாக உள்ளது. இங்கிலாந்தை விட பெற்றோல் இங்கு மலிவு என்று அமைச்சர் கூறுகின்றார். இங்கிலாந்தின் தலாவருமானத்தை மறந்து விட்டார். இந்தியாவை விட இங்கு பெற்றோல் மலிவு என்று அமைச்சர் கூறுகின்றார். இந்தியாவில் முட்டை 2 ரூபா, உருளைக்கிழங்கு 10 ரூபா, வெங்காயம் 10 ரூபா, அரச ஊழியர்களின் சம்பளம் இலங்கையை விட இந்தியாவில் அதிகம்.

விலைகள் இரண்டு மூன்று வருடங்களுக்கு மாறாமல் அப்படியே இருக்கும். இதையெல்லாம் நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள்.

பால் மா விலை அதிகம் என்றால் மாட்டுப்பாலை குடியுங்கள் என்கின்றீர்கள். அப்படியானால், நாம் மாடுகளை வளர்க்க வேண்டும். இந்த வரவு- செலவுத் திட்டத்தில் கால்நடை அபிவிருத்திக்கு மொத்த செலவில் 0.1 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், மாட்டுப்பாலுக்கு எங்கு போவது? மக்களை கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்கின்றீர்கள். இந்தியாவுடன் இலங்கையை ஒப்பிடுகின்றீர்கள். இந்தியாவில் வெளிநாட்டுப் பால்மா பக்கற்றுக்களைக் காணமுடியாது. அந்நாடு பாலுற்பத்தியிலும் தன்னிறைவு கண்டுள்ளது. கோதுமை மா விலை அதிகம் என்றால் அரிசி மா சாப்பிடுங்கள் என்கின்றீர்கள். அரிசி கேட்டால் இந்தியாவிலிருந்து வர வேண்டும் என்கின்றீர்கள்.

வட- கிழக்கில் நெல் வயல்கள் சாம்பல் மேடுகளாகின்றன.
உங்களுக்கெல்லா நாடுகளும் பணவுதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். ஆனால், மற்ற நாடுகளின் அனுபவங்களை ஏற்க மறுக்கின்றீர்கள்.

கிழக்குத் தீமோரில் என்ன நடந்தது என்பதை எண்ணிப்பாருங்கள். ஐ.நா. சபை உதவியுடன் நடைபெற்ற சர்வஜன வாக்குரிமையோடு அது தனிநாடாக செயற்பட தனது விருப்பத்தை வெளிக்காட்டியது. அதனை உலகமும் ஏற்றுக் கொண்டது. தென்னாசியாவிலேயே இலங்கைதான் முதன் முதலாக பொருளாதாரத்தை தாராளமயப்படுத்தியது. பொருளாதார தாராளமயமாக்கத்தின் பலாபலன்களை அனுபவிக்க வேண்டுமென்றால் அரசியல் தாராளமயமாக்கமும் இடம்பெறவேண்டும். அனைத்து இன மக்களையும் அரவணைத்து குரோத மனப்பான்மையின்றி அரசியல் நடத்துவதையே இங்கு நான் அரசியல் தாராளமயமாக்கம் என்று கூறுகின்றேன்.

சிங்கப்பூரிலும் அது நடந்தது. மலேசியாவிலும் அது நடந்தது. அதனால்தான் அவர்கள் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சி கண்டார்கள். இங்கு தமிழர்களை அழித்தால் பொருளாதாரம் வளரும் என மனக்கோட்டை கட்டினீர்கள். அது ஒரு நாளும் நடக்கப்போவதில்லை.

Saturday, November 3, 2007

கரீபியன் நாடான ஹெயிட்டில் ஷ்ரீலங்கா படையினர் பாலியல் துஷ்பிரயோகம்!

ஐநா சபை சமாதானப் படையின் ஒரு அங்கமாக கரீபியன் நாடான ஹெயிட்டிக்கு சென்ற ஷ்ரீலங்கா படையினர் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்ப பட்டனர்.

வயது குறைந்த சிறுமிகளுடன் உடலுறவு கொண்டது, விபச்சாரிகளிடம் உறவு கொண்டது, பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற பலகாரணங்களுக்காக நூற்றுக்கும் அதிகமான ஷ்ரீலங்கா படையினர் நாட்டிற்க்குத் திருப்பி அனுப்ப பட்டனர்.

ஐநா பேச்சாளரான மிச்சேல் மொன்டாஸ் கருத்துத் தெரிவிக்கையில்" ஷ்ரீலங்கா வீரர்கள் இது மாதிரியான செயல்களை செய்தது அதிர்ச்சியான கவலைக்குரிய சம்பவம், ஐநா சபையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்" எனவும் தெரிவித்தார்.

"இவ்வாறான செயல்களை ஐநா சபை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ளாது, ஆனால் படையினரை அனுப்பும் நாடே படையினரின் நடத்தைகளுக்குப் பொறுப்பு" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐநா சபையின் சட்டதிட்டங்களுக்கு அமையவே இவர்கள் தண்டிக்கப் படவேண்டுமென ஐநா கூறிய பொழுது இப்படையினரை ஷ்ரீலங்கா அரசு தாங்கள் தண்டிப்பதாக கூறியுள்ளது.

இதில் பாதிக்கப் பட்ட சிறுமிகளுக்கு ஐநா உதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

மேன்fராட் நோவாக் என்பவர் "ஐநா சபையின் சமாதானப் படைக்கு தெரிவு செய்யும் வீரர்களின் தரம் குறைந்திருப்பதாலேயே இவ்வாறான செயல்கள் நடப்பதாக" குறிப்பிட்டார்.

Monday, October 29, 2007

எரிகிற நெருப்பில் இந்தியா எண்ணையை ஊற்றுகிறது!

வான்பாதுகாப்பு ஆயுதங்கள் இலங்கைக்கு இந்தியா விநியோகம்

புதுடில்லி: இலங்கை நிலைவரம் கொந்தளிப்பானதாக இருந்ததால் இந்தியா வான்பாதுகாப்பு துப்பாக்கிகளை கொழும்புக்கு வழங்கியதாக இந்தியாவின் புதிய இராணுவத்தளபதி ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்திருக்கிறார்.

அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் தரை, வான்மார்க்க தாக்குதல் இடம்பெற்று சில தினங்கள் கடந்த நிலையில் இந்தக் கருத்தை இந்திய இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

ஆயுத விநியோகம் தொடர்பாக அதிகளவிலான கோரிக்கைகளை கொழும்பு இந்தியவாவிடம் முன்வைத்திருந்ததாகவும் அவை தொடர்பாக இந்திய அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகவும் தீபக் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் ஆயுதப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அடி வாங்கினாலும் இலங்கை அரசு திருந்தப்போவதில்லை. இந்தியாவும் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தப் போவதில்லை.

இலங்கையில் சமாதானம் மலர்வதில் இந்தியாவிற்க்கு உள்ள சிக்கல் என்னவோ தெரியவில்லை!!?

Friday, October 19, 2007

கருத்து வெளியிடும் சுதந்திரம்!

கருத்து வெளியிடும் சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவை தொடர்பில் இலங்கைத் தேசத்தின் உண்மை நிலையை சர்வதேச மதிப்பீட்டு ஆய்வு ஒன்று அம்பலப்படுத்தியிருக்கின்றது.

ஊடக சுதந்திரத்திற்காக அயராது குரல் எழுப்பிவரும் சர்வதேச அமைப்பான பாரிஸை மையமாகக் கொண்டு இயங்குகின்ற "எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு' என்ற நிறுவனம் 169 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் பெறுபேறுகள் இலங்கையின் மோசமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன.

பத்திரிகைச்சுதந்திரம் மேன்மையான முதலாவது இடத்தில் இருப்பது பற்றிய பெருமை ஐஸ்லாந்துக்குக் கிடைத்திருக்கின்றது. கடைசி 169 ஆவது இடம் எரித்திரியாவுக்கு. இலங்கை 156 ஆவது இடத்தில் பின்னிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. மோசமான பத்திரிகைச் சுதந்திரம் உள்ள நாடுகளின் வரிசையில் கடைசி இருபதுக்குள் இலங்கை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

ஈராக், பாலஸ்தீனப் பிரதேசங்கள், சோமாலியா, உஸ்பெஸ்கிஸ்தான், லாவோஸ், வியட்நாம், சீனா, பர்மா(மியன்மார்), கியூபா, ஈரான், துருக்மெனிஸ்தான், வடகொரியா, எரித்திரியா அகியவையே இவ்விடயத்தில் இலங்கைக்குப் பின்னால் நிற்பவை.இந்த வரிசையில் கடந்த நான்கு ஆண்டு காலத்துக்குள் மோசமான வீழ்ச்சி நிலையை இலங்கை காட்டி வருவதும் அவதானிக்கத்தக்கது.

2004 ஆம் ஆண்டில் 110 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் 115 ஆம் இடத்துக்கு சரிந்தது.ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அதிகாரம் ஆரம்பமானதும் நாட்டின் ஊடக சுதந்திரம் சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடுகையில் பெரு வீழ்ச்சி கண்டது. கடந்த ஆண்டு 141 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட இலங்கை இந்த ஆண்டில் மேலும் கீழிறங்கி 156 ஆவது நிலைக்கு வந்திருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு ஊடக சுதந்திரத்துக்கு அளித்துவரும் உயர் நிலையின் "சீத்துவத்தை' இந்த மதிப்பீட்டு ஆய்வுகள் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு இந்த மதிப்பீட்டு ஆய்வைப் பரந்தளவில் மேற்கொண்டது. கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டு உரிமை தொடர்பான பதினைந்து சர்வதேச அமைப்புகள் மற்றும் தனது செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், ஜூரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என சுமார் 130 பிரதிநிதிகள் ஆகிய தரப்புகள் ஊடாக இந்த ஆய்வை அது மேற்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இதேசமயம், இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஊடக சுதந்திரத்தை மதிக்குமாறு 32 சர்வதேச அமைப்புகள் ஒன்று கூடி வலியுறுத்தியிருக்கின்றன. உருகுவேயின் மொண்டிவிடியோ நகரில் "கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றிய சர்வதேச கலந்துரையாடல்' மாநாடு இடம்பெற்றது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்காகப் போராடும் 32 சர்வதேச அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்குகொண்டு பல்வேறு நாடுகளிலும் ஊடக சுதந்திர நிலைமையை ஆராய்ந்தபின்னர் பொது அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதிலேயே மேற்படி கோரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில், இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமாக நசுக்கப்பட்டு வருவதை அரசுத் தரப்பினாலும் அதிகாரிகளினாலும் உத்தியோகப்பற்றற்ற தணிக்கையும், ஊடகங்களுக்கு எதிரான அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கண்டனம் தெரிவித்து வருகின்றது இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கான காவல் அமைப்பான சுதந்திர ஊடக இயக்கம்.

கடைசியாக இரு பத்திரிகைப் புகைப்படப்பிடிப்பாளர்கள் இராணுவத்தினரால் கெடுபிடிக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் பிடித்த படங்கள் படையினரால் அழிக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்ற காரணத்தைக் காட்டிப் பல்வேறு இராணுவ அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்படும் இத்தகைய அத்துமீறல்கள், இலங்கையில் அப்படி ஒன்றும் உத்தியோகப்பற்றற்ற தணிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று திரும்பத் திரும்ப அரசுத் தரப்புக் கூறி வருவது தவறானது என்பதையே ஊர்ஜிதப்படுத்தி நிற்கின்றன.

ஊடக சுதந்திரத்தை நசுக்கும் இத்தகைய எல்லை மீறிய செயற்பாட்டுக்கு அரசு அனுமதி வழங்கி நிற்பது இந்த நாட்டில் ஜனநாயக நல்லாட்சிக்கு ஊறுவிளைவிப்பதாகவே அமையும் என்பதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டி உள்ளது.கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையை மதித்துப் பேணும் நாடுகளின் வரிசையில் இலங்கையின் தரம் மோசமடைந்து கீழிறங்கி இருப்பதை உணர்த்தும் புள்ளிவிவரங்களும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்குமாறு இவ்விவகாரம் தொடர்பான சர்வதேச மாநாடு, இலங்கையை வற்புறுத்திக் கோரியிருப்பதும் ஜனநாயக நல்லாட்சிக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் படை அதிகாரிகள் தம்பாட்டில் ஊடகங்கள் மீது அழுத்தங்களைப் போட்டு வருகிறார்கள் என்பதை சுதந்திர ஊடக இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கின்றமையும் இலங்கைத் தீவில் ஊடக சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருவதையே வெளிப்படுத்துகின்றன.

"நாட்டில் ஒரு யுத்தம் இடம்பெறுவதால் யுத்தத்துக்கு மத்தியில் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை தவிர்க்க முடியாததே.'' என்று தனது நிர்வாகத்தின் கீழ் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்ற நிலைமையை நியாயப்படுத்த முயலும் இந்த அரசு, கருத்துவெளியிடும் சுதந்திரம் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றமையையும் அதே யுத்த நிலைமையைக் காரணம்காட்டி நியாயப்படுத்த முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"இலங்கையில் இதுவரை இருந்த ஜனாதிபதிகளில் செய்தித் தணிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவராத ஒரேயொரு ஜனாதிபதி நான்தான்!'' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வப்போது தம்பட்டம் அடித்து தற்பெருமை பேசி பீற்றிக் கொண்டாலும் கூட, இவரது ஆட்சி நிர்வாகத்தில்தான் கருத்து வெளியிடும் சுதந்திரம் மோசமாக சூறையாடப்பட்டு, அச்சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பது தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் அம்பலமாகி வருகின்றது.

செய்தித் தணிக்கையை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாட்டை சட்டரீதியாகவன்றி, சட்ட முறையற்ற வகையிலும் நடைமுறைப்படுத்துவதில் கைதேர்ந்தது இந்த ஆட்சி நிர்வாகம் என்பதை அம்பலப்படுத்துவனவாகவே இந்தப் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன. மஹிந்தரின் ஆட்சிக்குக் கிடைத்த மற்றொரு "நற்சான்றிதழ்' இந்த மதிப்பீட்டு ஆய்வின் முடிவுகளாகும்.

நன்றி- சுடர் ஒளி

ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ள செய்தியானது எம்மை வேதனைக்கும் வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன - மனோ கணேசன். எம்.பி

இலங்கைக்கு ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வருகின்ற ஊடக செய்திகள் எம்மை வேதனைக்கும், வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன.

எமது மூதாதையர்களின் பூர்வீகமான இந்தியா என்ற பெரும் நாடு எப்போதுதான் இலங்கை பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது என மேலக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளின் தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவது தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளையிட்டு மனோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை தடுப்பதற்காகவே இந்தியா இலங்கைக்கு இராணுவ தளபாட உதவி வழங்குவதாக கூறப்படுகிறது.

இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நுழைவதை தடுப்பதும், இலங்கையில் தமிழ்த் தேசியத்தை ஒழிப்பதும் இந்தியாவின் நலன் சார்ந்தது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள். ஆனால், இது மீண்டும் இந்தியாவுக்கே பாதகமாக முடியும். இலங்கையில் தமிழ் தேசியம் வளர்ச்சி பெறுவது இந்தியாவுக்கு பிடிக்காதது என்பதை விரைவில் பாகிஸ்தான் புரிந்துகொள்ளும். அதன் மூலம் பாகிஸ்தானிய உளவுப்பிரிவு விடுதலை புலிகளுக்கு இரகசிய உதவிகளை வழங்கும் எதிர்மறை நிலை ஏற்படலாம் என்பதை இந்திய தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய தலைவர்கள் வரலாற்றை மீட்டி பார்க்க வேண்டும். இந்தியாவின் வடபுல, சீன, பாகிஸ்தானிய எல்லை 1960 வதுகளில் நெருக்கடியாக இருந்தது. அதனாலேயே தென்புல எல்லை நாடான இலங்கையை நட்பு நாடாக வைத்துக்கொள்வதற்காக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களில் பெருந் தொகையினரை மீளப்பெற்றுகொள்வதற்கு இந்தியா இணங்கியது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் அப்பாவி தொழிலாளர்களின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்காமல் செய்யப்பட்டது.

உண்மையில் அவ்வேளையில் இந்தியா இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் மீளப்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அல்லது ஒருவரையும் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது. இதனால், அன்று பல குடும்பங்கள் சிதைந்தன. இதன் மூலம் எமது மக்கள் தொகை குறைந்து விட்டதனால், எமது அரசியல் பலமும் குறைந்துவிட்டது. அத்துடன் தற்போது சிங்கள அடிப்படை வாதத்திற்கும், தமிழ் தீவிர வாதத்திற்கும் இடையில் தென்னிலங்கை இந்திய வம்சாவளி மக்கள் சிக்கியுள்ளனர். மறுபக்கத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட எமது மக்கள் அங்கே பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், இத்தனைக்குப் பிறகும் இலங்கையை உண்மையான நட்பு நாடாக இந்தியாவால் உருவாக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதேபோல, தமிழ் போராளிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சியளித்தது. 1980களில் அன்றைய ஜே.ஆரின் ஜ.தே.க. அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கை தனக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இவைகளை இந்தியா செய்தது. பிறகு என்ன நடந்தது? இந்தியா ராஜீவ் காந்தியையும், சுமார் 1500 இந்திய வீரர்களையும், இழந்தது. அதேபோல், இந்திய படையினரால் சுமார் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இவை கடந்த காலங்களிலே தவறான ஆலோசகர்களின் பேச்சுக்களை கேட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட துன்பங்களாகும். தூரப்பார்வை இல்லாத முடிவுகள் ஒரு போதும் தீர்வுகளை தராது.

இந்தியாவின் தவறான முடிவுகள் இந்தியா, இலங்கை, தமிழ் மக்கள் ஆகிய எந்த தரப்பினருக்கும் நன்மை தரவில்லை. வரலாறு முழுக்க தவறான முடிவுகள் பெரும் துன்பங்களையே தந்துள்ளன. இன்று நாங்கள் இதையிட்டு வெட்கமும், வேதனையும் அடைகின்றோம்.

எமது மூதாதையர்களின் பூர்வீகமான இந்தியா என்ற பெரும் நாடு எப்போதுதான் இலங்கைப் பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது. இலங்கையில் இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்கு குறுக்கு வழிகள் இல்லை என்பதை இந்திய தலைவர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். இலங்கையில் சமாதானம் மலர்வதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாகும்.

இலங்கையில் சமாதானத்திற்கும், யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும், ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்க வில்லையே.

இலங்கையின் ஐக்கியத்திற்கும், ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா ஆயிரம் முறை சொல்லியிருக்கின்றது. இன்னும் ஒரு ஆயிரம் முறை அதே இந்தியா சொல்லட்டும். அதுவே எங்களின் நிலைப்பாடும் ஆகும்.

Wednesday, October 17, 2007

இந்தியாவின் ஆயுத உதவி தமிழினத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கே வழிவகுக்கும்!

தமிழ்க் கூட்டமைப்பு கவலையுடன் எச்சரிக்கை

இலங்கைக்கான இந்தியாவின் தார்மிக ஆதரவு தாராளமாகக் கிடைப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருப்தி தெரிவித்துள்ள நிலையிலும் புதுடில்லியுடனான கொழும்பின் உறவு மிகவும் அந்நியோன்யமாக இருப்பதாக அரசாங்கத் தரப்பு பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கின்ற வேளையிலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து ஆழ்ந்த கவலையும் எச்சரிக்கையும் வெளிவந்திருக்கிறது.

இலங்கைக்கு ஆரவாரமின்றி கனரக ஆயுதங்களின் விநியோகத்தை இந்திய அரசு அதிகரித்திருப்பதாக இந்தியப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால் அதாவது, ஆயுத விநியோகத்தை இந்தியா அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுவது உறுதியான விடயமாக இருந்தால், அது இலங்கையிலுள்ள தமிழினத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கே வழிவகுக்குமென தமிழ்க் கூட்டமைப்பு எச்சரித்திருக்கிறது.

புதுடில்லிக்கும் கொழும்புக்கும் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கமான பிணைப்புகள் குறித்து புதுடில்லிக்கு ஜனாதிபதி தலைமையிலான குழுவினருடன் விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகண கூறுகையில்;
ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் இலங்கைக்கு பெரும் பயன்பாட்டைப் பெற்றுத் தந்துள்ளது. அங்கு நாம் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இந்தியாவின் ஆதரவு எமக்கு கடந்த காலங்களில் இருந்தது. இப்போதும் அவ்வாதரவு தொடர்கிறது. இதில் சகலவகையான உதவிகளும் அடங்கும். இதன் மூலம் இந்தியா எமதருகிலேயே உள்ளது என்பது மீண்டுமொரு தடவை நிரூபணமாகியுள்ளது என்றார்.

ஆனால், இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்;
`இலங்கையில் மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அண்மைக் காலங்களில் மாத்திரம் 4 ஆயிரத்திற்கும் மேலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மீள்குடியேற்றம் உரிய முறையில் இல்லை. காணாமல் போதலும் படுகொலையும் அதிகரித்து மனித உரிமை பரவலாக மீறப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே இந்தியாவின் ஆயுத உதவி பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது உண்மையாகவிருந்தால் அவர்கள் தமிழர் பிரச்சினையில் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகிறார்கள் என்ற கேள்வி எம்மை குடைகிறது.
சீனா, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதம் வழங்கிவிடக் கூடாது. எனவேதான் ஆயுதம் வழங்குகிறோமென இந்தியத் தரப்பில் (நாராயணன்) கூறப்படுவதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆயுதங்கள் தமிழ் மக்களை இன அழிப்புக்குள்ளாக்கி அவர்களை புதைகுழிக்கு அனுப்பவே வழிவகுக்குமென்பது அம்மக்களினதும் கூட்டமைப்பினதும் எச்சரிக்கையாகும்.

இன ஒழிப்பினை தமிழருக்கு எதிராக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஏன் இந்தியா உதவி வழங்குகிறது என்பது குறித்து தமிழ் மக்களினால் ஜீரணிக்க முடியாத விடயம்' என்றும் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன் வழிகாட்டலின் பேரிலேயே அதிக அளவு ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.

Tuesday, October 16, 2007

ஆரவாரமின்றி ஆயுத விற்பனையை அதிகரிக்கிறது இந்தியா

திரை மறைவில் அதிக உதவியை நாடும் கொழும்பு?


இலங்கையின் இனநெருக்கடிக்கு அதிகாரப்பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா அவ்வப்போது அறிக்கைகளை விடுத்து வருகின்ற போதும் அமைதியான முறையில் இலங்கைக்கான ஆயுத உதவிகளை புதுடில்லி அதிகரித்து வருகின்றது.

இனமோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவின் தார்மிக ஆதரவே இலங்கைக்கு தேவைப்படுவதாக கடந்த சனிக் கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற இந்துஸ்தான் டைம்ஸின் தலைமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஆயினும் மோதல்களைக் கையாள்வதற்காக அதிகளவில் கனரக ஆயுதங்கள், மென்ரக உபகரணங்கள் போன்றவற்றை திரைமறைவில் புதுடில்லியிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் கொழும்பு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக `டைம்ஸ் ஒவ் இந்தியா' பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. அத்துடன் இந்தியாவும் ஏனைய தரப்புகளை பற்றி பொருட்படுத்தாமல் இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் வான்தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக் கூடிய தன்னியக்க 40 மி.மீ. எல்-70 வீச்சுடைய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை அதிகளவில் வழங்கியமை இதற்கான பிந்திய உதாரணமாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு 40 ஆயிரம் டாலர்களுக்கு எல்-70 துப்பாக்கி பரல்களை பெற்றுக்கொள்வதற்கான மற்றொரு விநியோக ஒப்பந்தத்தை இந்தியாவின் ஆயுத தொழிற்சாலை சபை தற்போது பெற்றுள்ளமை உதாரணமாகும். தாழப்பறப்பதை கண்டுபிடிக்கும் 4 `இந்திரா' ராடார்கள் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தானின் தந்திரோபாய ஊடுருவல்கள் இடம்பெற்று விடுமென்ற இந்தியாவின் அச்சத்தை பயன்படுத்தி அதிகளவு பாதுகாப்பு ஆயுதங்கள், ராடார்கள், ஆட்லறிகள், நிஷாந், யூ.ஏ.விக்கள், இராணுவக் கருவிகளை சரியாக அடையாளம் காட்டுவதற்கான லேசர் வடிமைப்புகள் என்பனவற்றை விநியோகிக்குமாறு கொழும்பு புதுடில்லியை கேட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அச்சமயம் புலிகளின் படகுகளிலிருந்து தூரயிருந்து இயக்குவிக்கும் 2 சிறிய ரக விமானங்களை கைப்பற்றியதாக கொழும்பிலிருந்து செய்திகள் வெளியாகியிருந்தனர்.
வெடிமருந்துகளை ஏற்றிய பின் இந்த விமானங்கள் ஏவுகணைகளாக பயன்படுத்தப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் தமிழ் நாட்டைப் பயன்படுத்தி வருவதாக இலங்கை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதுவரை பாதுகாப்பிற்கான உபகரணங்களையே இந்தியா இலங்கைக்கு இதுவரை அதிகளவில் வழங்குகின்ற போதிலும் `சில அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை' விநியோகிக்கின்றது என்பதையும் நிராகரிக்க முடியாது என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியா அவ்வாறு வழங்காதுவிடின் அந்த வெற்றிடத்தை சீனா அல்லது பாகிஸ்தான் நிரப்பிவிடும் என்றும் அந்த நிலைமை ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1990 களில் மியான்மாரில் இடம்பெற்றதைப் போன்றதொன்று பிராந்தியத்தில் இடம்பெறுவதை இந்தியா விரும்பவில்லை.

இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு இதுதொடர்பாக ஏற்பட்ட அசௌகரியத்தை இந்த வருட முற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்திருந்த கருத்து வெளிப்படுத்துகின்றது. சீனாவிடமிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ ஆயுதங்கள் பெற்றுக்கொள்வதை இலங்கை தவிர்த்துக் கொள்ளவேண்டுமென நாராயணன் அச்சமயம் தெரிவித்திருந்தார்.

நாராயணனின் இந்த அறிவிப்புகள் இலங்கைக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தன, அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு வழங்காது என்று கூறியிருந்தமை இலங்கை தரப்பில் ஆத்திரத்தையூட்டியது.

உண்மையிலேயே இலங்கைக்கான ஆயுத விநியோகம் தமிழ் நாட்டில் அரசியல் ரீதியான உணர்வலைகளை தட்டி விடும் என்பதையும் இந்திய அரசாங்கம் மனதில் கொண்டிருந்தது. ஆயினும் தற்போது இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரித்துள்ளதாக `டைம்ஸ் ஒவ் இந்தியா' சுட்டிக்காட்டியுள்ளது.

Thursday, October 11, 2007

இலங்கை வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு ரூபா 16,644 கோடி 70 இலட்சம் ஒதுக்கீடு

**உத்தேச மொத்த செலவினம் 92,505 கோடி 72 இலட்ச ரூபா

அடுத்த நிதியாண்டின் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலப் பிரேரணையை பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று புதன்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.

2008 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் உத்தேச மொத்த செலவினம் 92,505 கோடியே 72 இலட்சத்து 84 ஆயிரம் (92,505, 72, 84,000) ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது 2007 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூலம் அரசாங்கத்தின் மொத்த செலவினமாக மதிப்பிடப்பட்ட தொகையிலும் பார்க்க 11,561 கோடியே 37 இலட்சத்து 34 ஆயிரம் (11,561,37,34,000) ரூபா அதிகரிப்பை காட்டுகிறது.

2007 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமாக அவ்வாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் 80,944 கோடியே 35 இலட்சத்து 50 ஆயிரம் (80,944,35,50,000) ரூபா மதிப்பிடப்பட்டிருந்தது.

2008 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுக்கே அதிகபட்சமாக 16,644 கோடியே 70 இலட்சம் (16,644,70,00,000) ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2007 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திலும் இவ் அமைச்சுக்கே அதிகபட்சமாக 13,955 கோடியே 63 இலட்சத்து 33 ஆயிரம் (13,955,63,33,000) ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், இதனுடன் ஒப்பிடும் போது, அடுத்த ஆண்டுக்கென 2,689 கோடியே 6 இலட்சத்து 67 ஆயிரம் (2,689,06,67,000) ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதேநேரம், 2008 ஆம் ஆண்டில் பொது சேவைகளுக்காக கொடுக்கத்தக்க தொகைகளுக்காக 918 கோடியே 79 இலட்சத்து 37 ஆயிரம் (918,79,37,000) ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதில் அடக்கும் ஜனாதிபதிக்கான செலவினங்களுக்கென கடந்த முறையுடன் ஒப்பிடும்போது, இம்முறை 218 கோடியே ஒரு இலட்சத்து 28 ஆயிரம் (218,01,28,000) ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கான செலவினங்களுக்காக 357 கோடியே 77 இலட்சத்து 19 ஆயிரம் (357,77,19,000) ரூபா மதிப்பிடப்பட்டிருந்ததுடன், 2008 ஆம் ஆண்டுக்கென 575 கோடியே 78 இலட்சத்து 47 ஆயிரம் (575,78,47,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2008 ஆம் ஆண்டில் நிதி திட்டமிடல் அமைச்சுக்கான செலவினமாக 9,691 கோடியே 21 இலட்சத்து 59 ஆயிரம் (9,691,21,59,000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், தேசத்தை கட்டியெழுப்புதல், நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்கான செலவினங்களுக்காக அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் 5,428 கோடியே 21 இலட்சத்து 45 ஆயிரம் (5,428,21,45,000) ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டுக்கென சுகாதார அமைச்சின் செலவினங்களுக்காக 5,779 கோடியே 99 இலட்சத்து 98 ஆயிரம் (5,779,99,98,000) ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செலவினங்களாக 2008 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டமூலத்தில் 657 கோடியே 66 இலட்சத்து 75 ஆயிரம் (657,66,75,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சுக்கான அடுத்த வருட செலவினமாக 1,986 கோடியே 15 இலட்சத்து 92 ஆயிரம் (1,986,15,92,000) ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், போக்குவரத்து அமைச்சுக்கான 2008 ஆம் நிதியாண்டுக்கான செலவினமாக 3,818 கோடியே 41 இலட்சத்து 70 ஆயிரம் (3,818,41,70,000) ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சுக்கான செலவினங்களுக்காக 5,201 கோடியே 80 இலட்சத்து 93 ஆயிரம் (5,201,80,93,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சுக்கு 3,264 கோடியே 26 இலட்சத்து 18 ஆயிரம் (3,264, 26,18,000) ரூபாவும், மின்வலு, சக்தி அமைச்சுக்கு 3,172 கோடியே 61 இலட்சத்து 10 ஆயிரம் (3,172,61,10,000)ரூபாவும் அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் செலவினங்களாக மதிப்பிடப்பட்டுள்ளன.

இதேநேரம், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கான செலவினமாக அடுத்த ஆண்டுக்கென 7,890 கோடி (7,890,00,00,000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கென 11,476 கோடியே 95 இலட்சத்து 60 ஆயிரம் (11,476,95,60,000) ரூபா செலவினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவினங்களுக்காகவே இரண்டாவது அதிகபட்சமான தொகை ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இதன்கீழ் வரும் வடக்கு மாகாண சபைக்கான செலவினமாக 984 கோடியே 90 இலட்சம் (984,90,00,000) ரூபாவும், கிழக்கு மாகாண சபைக்கான செலவினமாக 1,051 கோடியே 10 இலட்சம் (1,051,10,00,000) ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சுக்கான செலவினங்களுக்காக 2,582 கோடியே 41 இலட்சத்து 58 ஆயிரம் (2,582,41,58,000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன், உயர்கல்வி அமைச்சுக்கான அடுத்த ஆண்டு செலவினமாக 2,053 கோடியே 43 இலட்சத்து 17 ஆயிரம் (2,053,43,17,000) ரூபா மதிப்பிடப்பட்டிருக்கிறது.

57 அமைச்சுகளுக்கான 2008 ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் தொடர்பான மதிப்பீடுகள் இந்த ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
2008 ஆம் நிதியாண்டுக்கான அரசின் மொத்த செலவினமாக 92,505 கோடியே 72 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ள அதேநேரம், அரசுக்காகவோ அல்லது அரசாங்கம் சார்பாகவோ இலங்கையில் அல்லது அதற்கு அப்பால் 74,090 கோடியே 35 இலட்சத்து 93 ஆயிரத்துக்கு அதிகப்படாத தொகையை மொத்த கடனாக பெற முடியுமெனவும் இந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Friday, October 5, 2007

வன்னிசென்ற குழுவில் பசில் இடம்பெற்றிருந்தமை தமிழ்ச்செல்வனின் அறிவிப்பின் மூலம் நிரூபணம்

விடுதலைப் புலிகளுடன் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் சார்பிலான குழு இரகசிய உடன்படிக்கை செய்து கொண்ட உண்மை வெளிவரத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சி, ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவின் மறுப்பை நிராகரிக்கும் வகையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பேட்டியளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் காலடி வைத்தவுடனேயே சபையை தவறாக வழி நடத்தும் விதத்தில் பொய் கூறியுள்ளார். அவரது கன்னி உரையே பொய்யாக அமைந்துவிட்டதாகவும் இதனையிட்டு அரசு தரப்பு வெட்கப்படவேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்ட உண்மை புலிகள் தரப்பினராலேயே அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் தன்மானமிருந்தால் அரசு உடனடியாக பதவி விலகவேண்டும். இனிமேலும் அரசு பதவியில் நீடிப்பதற்கு தார்மீகக் கடப்பாடு கிடையாதெனவும் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு தான் கிளிநொச்சிக்குப் போகவே இல்லையென ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பிரவேசித்த முதலாவது நாளிலேயே பொய்யுரையாற்றி சாதனை படைத்துவிட்டார். விடுதலைப் புலிகளுக்கோ வேறு எவருக்குமோ பணம் கைமாறப்படவில்லை எனவும் ஆளும்தரப்பு பறை சாற்றி வந்தது.

தமிழ்ச்செல்வனின் பேட்டியை மேலோட்டமாகத் தூக்கிப் பிடித்த அரசு தமக்கு சாதகமானவற்றை மட்டுமே பெரிதுபடுத்திக் காட்ட முனைகின்றது. தமிழ்ச்செல்வன் தனது பேட்டியில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷ சார்பில் ஒரு குழு வன்னி வந்ததாகவும் அவர்களில் பசில் ராஜபக்ஷவும் இருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். அக்குழு அரசியல் பிரிவினரைச் சந்திக்கவில்லையெனவும் நிருவாகப் பிரிவைச் சேர்ந்தவர்களையே சந்தித்துப் பேசியதாகவும் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் பசில் ராஜபக்ஷவினதும், ஆளும் தரப்பினரதும் குட்டு வெளிப்பட்டுவிட்டது.

அதேபோன்றே புலிகள் மகிந்த குழுவினரிடமிருந்து பணமெதனையும் பெற்றுக் கொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட தமிழ்ச்செல்வன் ஆனால் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வேறொருவர் பணம் பெற்றுக் கொண்டிருப்பதாக தான் அறிவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்???

இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும், ஷ்ரீபதி சூரியாராச்சியும் சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷவும் அக்குழுவில் சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பணப்பரிமாற்றமெதுவுமே இடம்பெறவில்லையென கூறிவந்த ஆளும் தரப்பினர் எவருடனோ பணம் கைமாறப்பட்டிருப்பதை புலிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்!

இங்கு நாம் முக்கிய யதார்த்தத்தை உணரவேண்டும். இவ்வளவு பெரியதொரு பணக்கைமாறும் இரகசிய உடன்பாடும் குறித்து எந்தத் தரப்பும் முழுமையாக உண்மையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எப்படியோ உண்மையின் ஒரு பகுதியாவது வெளிவந்துவிட்டது. தெரிவுக்குழு விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே உண்மை அம்பலமாகிவிட்டது. மங்கள, ஸ்ரீபதியின் முறைப்பாடு உண்மையென நிரூபிக்கப்பட்டுவிட்டது.

விடுதலைப் புலிகள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கழுத்தில் சுருக்குக் கையிற்றை மாட்டியுள்ளனர். அதை வைத்தே அரசாங்கத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

குமரன் பத்மநாதன் உரிய முறையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்க முடியும். புலிகளுக்கு பத்மநாதனை விடுவித்துக் கொள்ள வேண்டும். மகிந்த ராஜபக்ஷ கம்பனிக்கு சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தப்பவேண்டும். இதன் காரணமாக நாடுகளுக்கிடையிலான ஒழுங்கு விதியை மீறி பத்மநாதன் பிடிபட்டவிடயத்தை இணையத்தளத்தில் வெளியிட்டு விவகாரத்தை குழப்பியது.

தெரிவுக் குழு விசாரணை முன்னெடுக்கப்படும் போது மேலும் பல உண்மைகள் வெளிக்கொணரப்படவிருக்கின்றது. தன்மானமுள்ள அரசாக இருந்தால் உடனே பதவிவிலகி புதிய ஆட்சிக்கான மக்கள் ஆணையைக் கோர முன்வரவேண்டும்.

நன்றி: தினக்குரல்

Thursday, August 2, 2007

மிகப்பெரிய அமைச்சரவையை சமாளிக்கவே கப்பம் அறவிடப்படுகிறது - ஜனாதிபதி

அரசாங்கத்தின் மிகப் பெரும் அமைச்சரவையை சமாளிப்பதற்காகவே தமிழ் மற்றும் முஸ்லீம் வர்தகர்களிடம் இருந்து கப்பம் அறவிடப்படுவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் பிரபல முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய முஸ்லீம் அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைத்து உங்கள் பயணத்திற்கு முச்சக்கர வண்டி ஒன்றை ஒழுங்கு செய்து தந்தால் தொடர்ந்தும் அமைச்சு பதவி வகிக் முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தின் மூலம் பெறக் கூடிய அதி உச்ச பயன்களை அமைச்சர்கள் அனுபவித்து வருவதாகவும் 107 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை சரிவர நிர்வகிப்பதற்கு மாற்று வழிகள் மூலம் பணத்தை பெற வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி அந்த அமைச்சரிடம் கூறியள்ளார். ஜனாதிபதியின் பதிலை அடுத்து முஸ்லீம் அமைச்சர் மௌனமாக அங்கிருந்து வெளியேறி தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து நெருக்கமானவர்களிடம் கவலையுடன் விபரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையகத்தை சேர்ந்த தமிழ் அமைச்சர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மிகப்பெரிய அமைச்சரவை காரணமாக அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடி நிலைக்குள்ள தள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் துணை ஆயுதக் குழுக்களின் பராமரிப்பிற்கான நிதியினை வழங்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லீம் வர்த்தகர்களிடம் இருந்து கப்பமாக பணத்தை அறிவிட்டு தமது தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரசாங்கம் துணை ஆயுதுக் குழுக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை இலங்கையின் பொருளாதாரத்தில் தமிழ் மற்றும் முஸ்லீம் வாத்தகர்கள் கொண்டுள்ள ஆதிக்கத்தை குறைத்து வர்த்தக செயல்பாடுகளை சிங்களவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் இனச் சுத்தீகரிப்பும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக்கால கடத்தல் மற்றும் கப்பம் பெறும் நடவடிக்கைகளால் தமிழ் மற்றும் முஸ்லீம் வர்தகர்கள் பலர் தமது வியாபார நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தொடர்ந்தும் பலர் வெளியேறுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறியதை அடுத்து அனைத்துலக நாடுகளை சமாதானப்படுத்தும் நோக்கில் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு பிரிவினரை கைது செய்து அனைத்திற்கும் அவர்களே காரணம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தமது சதி முயற்ச்சியை அரசாங்கம் மூடி மறைக்க முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 21, 2007

இலங்கை இராணுவத்திற்க்கான நிதி ஒதுக்கீடு.












2005 ஆம் ஆண்டுக்கான கல்விக்கான செலவீனமானது வெறுமனே 26 பில்லியன்களே ஆகும். அதே ஆண்டு சுகாதாரத்திற்கான செலவீனம் 30 பில்லியன் ரூபாவே ஆகும். ஆயுதக் கொள்வனவுக்கான பணத்தை இவ்விரு துறைகளுக்கும் பயன்படுத்தியிருந்தால் எந்தளவு தூரம் அபிவிருத்தி கண்டிருக்க முடியும் என்பதை உணரலாம்.


இலங்கையில் எழுத்தறிவு 90 சதவீதம் என்று கூறிக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை பாடப்புத்தக பற்றாக்குறை, நல்ல பாடசாலைகளுக்கான வசதி இன்மை போன்ற ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதே மாதிரியான பிரச்சினைகள் சுகாதாரத் துறையிலும் இருக்கிறது. அரசாங்க வைத்திய சாலைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதுடன், சிறந்த மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதிலும் சிரமங்கள் எதிர் நோக்கப்படுகிறது. இவ்வாறு சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற அதே மக்கள் தான் இராணுவ செலவீனத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டிய துரதிர்ஷ்டமான நிலைமை இருக்கிறது.


இத்தகைய செலவீனங்களின் பின்னணியில் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்குமானால், இறுதியில் சிங்கள மற்றும் தமிழ் மக்களே இழப்பாளிகளாக இருப்பர். சிறுவர்கள், கல்வி ரீதியாக பாதிக்கப்படுவதுடன், சுகாதாரம், போக்குவரத்து உட்பட சகல துறைகளிலும் நாடு பெரும் பின்னடைவை சந்திக்கும். இந்த நாடு, இராணுவ செலவீனத்திற்குள் சிக்குப்பட்டு, அதல பாதாளத்திற்குள் வீழ்வதை தடுப்பதற்கு, இந்த நாட்டு மக்கள் காத்திரமான ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டும். அவர்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்கக் கூடாது.

Friday, June 15, 2007

இலங்கையில் தமிழ்மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்-ரொய்ட்டர்ஸ்

இலங்கையில் தமிழ்மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்-ரொய்ட்டர்ஸ்

சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

இச்சம்பவங்களுக்கு அரச படையினர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அங்கு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர், உதவி நிறுவனங்கள் போன்றவை தமது பணிகளை மேற்கொள்ள முடியாது தடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. சிறிலங்காவிற்கு அனைத்துலகத்தின் உதவிகள் தேவை. ஆனால் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் அதனை தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளியள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவும், அமெரிக்காவும் மனித உரிமை மீறல்களை காரணம் கூறி இந்த ஆண்டு சிறிலங்காவிற்கான சில உதவிகளை நிறுத்தியுள்ளன. இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மீளக்குடியமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக உணவு உதவிகளை உலக உணவுத்திட்டம் நிபந்தனையாக போட்டுள்ளது. இருந்த போதும் பல தாக்குதல் சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டியது மிக மிக அவசியமானது என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹாவெல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் இந்த வாரம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தனிமைப்படுத்தப்படக் கூடாது என்பதனையே நாம் எல்லோரும் விரும்புகின்றோம். எனினும் நாம் அதனை நோக்கி தள்ளப்படுகின்றோம். இதனை தடுப்பதற்கோ இல்லது மாற்றுவதற்கோ எந்த வழியும் இல்லை.கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன நிறுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களை கொழும்பில் இருந்து அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்திகள் மீண்டும் பின்பற்றப்படக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்குவதற்கு தகுந்த காரணங்களை கொண்டிருக்கவில்லை என குற்றம் சுமத்தி கடந்த வாரம் கொழும்பில் உள்ள 400 தமிழ் மக்களை அரசு வேறு பகுதிக்கு பலவந்தமாக அனுப்பியிருந்தது. எனினும் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு அதிகாரிகளை தமது முடிவுகளை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளியிருந்தது.

நூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.இந்த அறிக்கைகள் போலியாவை எனவும் அது அரசுக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன் அதனுடன் படையினருக்கு உள்ள தொடர்பையும் அவர் மறுத்துள்ளார்.

பயங்கரவாதத்தை கையாள்வது தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களில் இருந்து அரசு அதன் எல்லையை முற்று முழுதாக தாண்டியுள்ளதாக தேசிய சமாதான சபையைச் சேர்ந்த ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.அனைத்துலக சமூகத்தில் இருந்தும், உள்நாட்டிலும் அரசு சுயமாகவே தனிமைப்பட்டுள்ளது. எனினும் அனைத்துலக சமூகம் தம்மை வற்புறுத்துவதாக அரசு அதிருப்தி அடைந்துள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்பில் மேற்குலக நாடுகள் இரட்டைப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கு தமிழ் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியது சிறந்த நடவடிக்கை எனவும் அரச தலைவரின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச, பிபிசி மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களுக்கு மிகவும் பலப்படுத்தப்பட்ட தனது அலுவலகத்தில் இருந்தவாறு நேர்காணல் வழங்கும் போது தெரிவித்துள்ளார்.

இது அனைத்துலக சமூகத்தின் பாரபட்சமானதும், வன்புறுத்தலுமான நடவடிக்கையாகும். பிரச்சனையை விளங்கிக்கொள்ளாது அவர்கள் எங்களை வற்புறுத்த முயற்சிக்கின்றனர். நாம் தனிமைப்பட மாட்டோம். எமக்கு ஆதரவாக சார்க் அமைப்பில் உள்ள ஆசிய நாடுகள் உள்ளன. பிரித்தானியா, மேற்குலக நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை தாம் விரும்பியதனை செய்யட்டும் நாம் அவர்களில் தங்கியிருக்கவில்லை. தூதரக அதிகாரிகள் தமது அரசுகளை தவறாக வழி நடத்துகின்றனர். அனைத்துலக ஊடகங்களும் பிரச்சினைக்கு ஒரு காரணம். அவர்கள் அரசுக்கு எதிரான செய்திகளை கொடுக்கிறார்கள். நாம் எங்களை தற்காத்துக் கொள்வோம். நீங்கள் நாட்டை ஆபத்தில் தள்ள முடியாது. ஹிம் ஹாவெல் முற்றிலும் தவறான தகவல்களை கொண்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இந்த வாரம் அரசுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தரும் விடயம் நிகழந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான அரசின் விசாரணைகள் அனைத்துலக தரத்தில் நடைபெறவில்லை என அரச தலைவரினால் நியமிக்கப்பட்ட அனைத்துலக நிபுணர் குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வருடத்தில் மட்டும் நடைபெற்ற வன்முறைகளில் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர். சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

இதில் கடும் போக்கான அரசியல் கட்சிகள், பௌத்த மதகுருமார் போன்றவர்களும் அடக்கம் என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் சிறிலங்காவை கைவிட வேண்டிய நிலையும் ஏற்படலாம் என தனது பெயரைக்குறிப்பிடாத கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தெரிவிக்கப்படும் பல முரணான கருத்துக்களினால் நாட்டின் வெளிவிவகார கொள்கையில் முற்றிலும் தெளிவற்ற தன்மையை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ச்சியாக ஒருவருக்கு ஒருவர் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். உள்ளுரில் ஒரு செய்தியும் அனைத்துலகத்திற்கு பிறிதொரு செய்தியும் தெரிவித்து வருவது ஆபத்தானது. அதுவே அவர்களை தனிமைப்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 10, 2007

இந்து நாளிதழின் எல்லையில்லா சிங்கள விசுவாசம்!!


தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான "இந்து"வின் சிங்கள விசுவாசம் எல்லையற்றதாக விரிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இந்தியக் குடிமகனால்தான் "இந்து" நடத்தப்பட்டாலும் அறிவிக்கப்படாத "தமிழ்நாட்டின் சிறிலங்கா தூதரகமாகத்தான்" அது செயற்பட்டு வருகிறது.

தமிழருக்கு எதிராக சிங்களவர்களைப் பாதுகாக்க தனது "ஊடக தர்மத்தை" முழுவீச்சில் பயன்படுத்தும் "இந்து" ஏடுதான் யோக்கிய சிகாமணியான "நடுநிலை"யாளர் என்று மார்தட்டிக் கொள்கிறது.

கொழும்பில் அரை மணித்தியால அவகாசம் கூட அளிக்காமல் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றி பேரூந்துகளில் அனுப்பியது.இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை பின்பற்றி மகிந்த மேற்கொண்ட இந்த கொடுஞ்செயலை அனைத்துலகமும் கண்டனம் தெரிவித்தன.சிறிலங்காவுக்கு ஆயுதங்களையும் தரும் அமெரிக்கா கூட- சிறிலங்கா அரசாங்கம்தான் குற்றவாளியாக பல்வேறு நிகழ்வுகளில் இருந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்தே குற்றம்சாட்டி சிறிலங்காவை பாதுகாத்து வரும் அந்த அமெரிக்காவும் கூட கொழும்பு கொடுஞ்செயலுக்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

"நடுநிலை" அனுசரணையாளர் நோர்வேக்காரர்களும் இப்போதுதான் "கண்டனம்" என்ற சொல்லை உதிர்த்திருக்கிறார்கள். ஆனால் "இந்து" நாளேட்டின் "நடுநிலை" கண்களுக்கு "கண்டனம்" என்ற சொல் தெரியவில்லை போலும்.கொழும்பு சம்பவம் என்பது மகிந்தவுக்குத் தெரியாமல் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தன்னிச்சையாக செய்துவிட்டார் என்பதுபோல் செய்தி வெளியிட்டுள்ள இந்து- (நாள்: 09.06.07)அதன் உள்ளே "Norway reaction" என்ற தலைப்பில் நோர்வேயின் அறிக்கை பற்றி எழுதுகிறது.ஆனால் நோர்வே வெளியிட்ட அறிக்கையின் முதல் வரியாக உள்ள "Norway condemns yesterday’s sudden and enforced removal of civilian Tamils from their dwellings in Colombo" என்பதை மட்டும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு சிங்களவர்களைப் பாதுகாக்கிறதாம்."இந்து".

அதேபோல்அமெரிக்காவின் அறிக்கையிலும் சிறிலங்காவுக்கு அமெரிக்கா ஆதரவாகத்தான் இருப்பது போல தோற்றமளிக்கும் வகையில் செய்தி வெளியிட்டிருக்கிறது.அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் முதல் வரியே"The United States condemns the forced removal of Tamils from Colombo" என்பதுதான்.ஆனால் "சிங்கள ரத்னா" விருது பெற்ற சிங்கள விசுவாச "இந்து"வுக்கு இதனை பிரசுரிக்க மனம் வருமா என்ன?

இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கொழும்பில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரித்தானியா போல் சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதி உதவியை நிறுத்தாது என்று பதிலளித்துள்ளார்.ஆனால் சிங்கள அடிவருடி "இந்து"வோ பிரித்தானியா போன்ற நாடுகள் நிதி உதவியை நிறுத்துவதற்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது என்பது போல் தலைப்பிட்டு சிங்களவர்களுக்கு ஆதரவைத் தேடித் தருகிறதாம்! "சிங்கள இரத்னா" இந்துவே- தொடரட்டும் உன் விசுவாசம்!


நன்றி: தினக்குரல்

Thursday, June 7, 2007

தொடரும் மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் ஆட்கடத்தல்கள் இன்று படுமோசமாக அதிகரித்துக் கொண்டே போகின்றன. அடுத்த நிமிடம் யார் கடத்தப்படுவாரோ என்ற அச்சத்தில் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வாழ்கின்றனர். படுகொலைச் சம்பவங்களோடு ஆட்கடத்தல்கள் சர்வசாதாரணமாகியுள்ளன.

மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் குடிகொண்டுள்ளது. மக்கள் நிம்மதியிழந்தவர்களாக விரக்தி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்து வெளியே போகும் ஒருவர் மீண்டும் வீடு திரும்பும் வரை நிச்சயமில்லாத நிலைமையே தொடர்கிறது. ஆட்கடத்தல்கள் குறித்து எத்தகைய குரல் எழுப்பப்பட்ட போதிலும் அரசு அது குறித்து அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை.

ஆரம்பத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காரணம் கற்பிக்கப்பட்டது. இன்று அந்த நிலைமாறி வெள்ளை வான் கடத்தல் என்ற பெயரில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அரசு மீது சுட்டு விரல் நீட்டும் அளவுக்கு விவகாரம் முற்றிப் போயுள்ளது. உண்மையும் அதுதான்.

சமீபத்தில், சர்வதேச செஞ்சிலுவை நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருவரை கடத்திக் கொலை செய்தது கருணா குழுவினர்தான் என்று இலங்கை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. கருணா குழு என்பது ராணுவத்தோடு சேர்ந்தியங்கும் ஒரு ஒட்டுப்படை.

இன்று தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் இன்றி ஆட்கள் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் வசதிபடைத்தவர்கள் இலட்சம், கோடி என்று பணத்தை அள்ளி வீசி விட்டு தப்புகின்றனர். வசதியில்லாத அப்பாவிகளுக்கு அதோ கதிதான். கடத்தப்பட்டவர் இரண்டொரு தினங்களில் எங்காவது ஓரிடத்தில் பிணமாகக்கிடப்பார். நாட்டின் பாதுகாப்புக்கு இன்று எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. பாதுகாப்பு விடயத்தில் மக்கள் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்து விட்டனர்.

இலங்கையில் தொடரும் இவ்வாறான படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் மனித உரிமை மீறல்களும் சர்வதேச மட்டத்தில் நாட்டை தலைகுனிய வைத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலாமிடத்துக்கு வரும் காலம் தொலைவிலில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. மக்களை நிம்மதியாக அச்சமின்றி வாழ வைக்கும் பிரதான பொறுப்பு அரசாங்கத்தையே சார்ந்திருக்கின்றது. ஆனால், நாட்டில் தொடரும் மோசமான சம்பவங்கள் குறித்து அரசு மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு பொறுப்பற்ற விதத்தில் தட்டிக்கழித்துச் செயற்படுவது பெரும் அதிர்ச்சியையே தருகிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச சமூகம் கண்டனக் குரல் எழுப்பியுள்ளது. இது குறித்துக் கூட அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மனிதனை மனிதன் மனிதாபிமான அடிப்படையில் நேசிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் அச்சமின்றியுமே வாழ விரும்புகின்றோம். ஒரு மனிதனின் வாழும் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமை கிடையாது. இந்த மனிதாபிமான உரிமையை பாதுகாத்து அச்சம், பீதியற்ற ரீதியில் நிம்மதியாக ஒவ்வொரு பிரஜையும் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அரசு உணரவேண்டும்.

ஏட்டிக்குப் போட்டியாக சவால்களையும் மறுப்புகளையும், சொல்வதால் அறிக்கை விடுவதால் பலனெதுவும் கிட்டப்போவதில்லை. மனித உரிமைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

Sunday, June 3, 2007

இலங்கையின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்து விட்டதா?

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் அவசர டில்லி விஜயமும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் திடீர் தமிழ் நாட்டுப் பயணமும் அரசியல் இராணுவ ரீதியில் இலங்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன.

ஆயுதங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் `ரோ' வின் உயரதிகாரியுமான எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தியா வந்திருந்த இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தியா உடனடியாக இலங்கைக்கு ஆயுத தளபாட உதவிகளை வழங்கவேண்டுமெனக் கோரியதுடன் மறுத்தால் சீனா பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து தமக்குத் தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்வோமெனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் மிரட்டியுள்ளார்.

கோத்தபாயவின் மிரட்டலையடுத்தே இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு தயாரென அவசரமாக அறிவித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து சம்மதிக்க வைப்பதற்காக கடந்த வியாழக்கிழமை அவசர விஜயமொன்றை மேற்கொண்டு தமிழகத்திற்கு வந்தார். இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை கருணாநிதியை டில்லியில் சந்தித்த நாராயணன் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் கருணாநிதி உடனடியாகவே அதனை மறுத்து விட்டார்.

28 ஆம் திகதி தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி வருவதாக இருந்த நிலையிலேயே திடீரென அதற்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை டில்லிக்கு வந்திறங்கிய இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் இந்திய உயர் மட்டங்களுடன் அதிரடிச் சந்திப்புகளை மேற்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே.நாராயணன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் சேகர்தத், இராணுவத் தளபதி ஜே.ஜே.சிங், கடற்படைத் தளபதி சுரேஷ்மேத்தா, விமானப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் பாலி ஹோமி ஆகியோருடன் சந்திப்புகளை நடத்திய கோத்தபாய தமது கோரிக்கைளை முன்வைத்தார்.

இச் சந்திப்புகளின்போது வான்புலிகளால் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் தாழ்வாகப் பறக்கும் விமானங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய இடத்துக்கு இடம் கொண்டுசெல்லக்கூடிய நவீன ராடர்களையும் கோரிய கோதாபய, கடற்புலிகளை ஒடுக்க இந்தியப் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்பையும் இலங்கை இந்திய கடற்படையின் கூட்டு ரோந்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களின் பட்டியலை இச் சந்திப்புகளின்போது கையளித்த கோத்தபாய உடனடியாக குறிப்பிட்ட ஆயுத உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்க வேண்டுமெனவும் மறுத்தால் சீனா, பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து இலங்கை தமக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யுமெனவும் இலங்கைக்கு உதவி செய்வதற்காக மேற்குறித்த நாடுகள் காத்துக்கொண்டிருப்பதாகவும் மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

கோத்தபாயவின் மிரட்டலையடுத்தே டில்லி வந்த கருணாநிதியை சந்தித்த பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு இந்தியா தயாரென கூறி கருணாநிதியை நாடி பிடித்துப் பார்த்தார். ஆனால், நாராயணனின் கூற்றுத் தொடர்பில் கருத்துக்கூறிய கருணாநிதி இலங்கை - இந்திய கடற்படைக் கூட்டு ரோந்து தொடர்பான தி.மு.க.வின் கருத்தில் மாற்றம் எதுவுமில்லையென அறிவித்தார்.

இதையடுத்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய்வதற்கென்ற போர்வையில் வியாழக்கிழமை தமிழகத்திற்கு வந்த நாராயணன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை இந்திய கடற்படையின் கூட்டு ரோந்து தொடர்பில் மத்திய அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தியதுடன் புலிகளால் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்தும் ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க இதுவே சிறந்த வழியென்றும் கூறியபோதும் கருணாநிதி இதற்கு உடன்படவில்லை. இதேவேளை, இலங்கையரசுக்கு ஆயுத உதவிகளை வழங்குவதெனத் தீர்மானித்த பின்னரே நாராயணன் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டு கருணாநிதியை `தாஜா' பண்ண முயற்சித்தார்.

இலங்கைக்கு தற்பாதுகாப்பு சாதனங்களை மட்டுமே தாம் வழங்குவதாகவும், அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் எதையும் வழங்கவில்லை எனவும் கூறி இலங்கை இந்தியாவின் கையை விட்டுப்போனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கருணாநிதிக்கு விளக்கினார்.

கருணாநிதியை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த நாராயணன் இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு சாத்தியமில்லையெனத் தெரிவித்ததுடன், ஆயுதங்களை வாங்குவதற்காக சீனா- பாகிஸ்தான் நாடுகளிடம் இலங்கை செல்வதை இந்தியா ஒருபோதும் விரும்பாதெனவும் கூறியுள்ளார்.

இதன் மூலம் இலங்கைக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளை நியாயப்படுத்த நாராயணன் முயற்சித்தார். அத்துடன் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாதென இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் தாம் கடுமையாக கூறியிருப்பதாக தெரிவித்த நாராயணன் 5 தமிழக மீனவர்களை புலிகளே சுட்டுக் கொன்றதாகவும் குற்றம் சாட்டினார்.
புலிகளிடம் விமானங்கள் இருப்பதை இந்தியா விரும்பவில்லையெனச் சுட்டிக் காட்டிய நாராயணன் இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ராமதாஸ், வைகோ போன்றோர் தொடர்பாக கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு தமிழக அரசை இணங்க வைப்பதற்காகவே தமிழக மீனவர்களின் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன், விடுதலைப் புலிகள் தொடர்பாக தமிழகத்தில் விஷமப் பிரசாரங்களும் முடுக்கிவிடப்பட்டன. இரும்புக் குண்டு கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், மீனவர்கள் கடத்தலென திட்டமிடப்பட்டே பல சம்பவங்கள் தமிழகத்திலும் தமிழக கடற்பரப்புகளிலும் நடத்தப்பட்டன. இலங்கைக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளை வழங்கி வந்த இந்தியா அதனை பகிரங்கமாகச் செய்வதற்காகவே அதற்குரிய களநிலையை தமிழகத்தில் ஏற்படுத்தி மக்களின் `விடுதலைப் புலி ஆதரவு' மனநிலையைச் சிதைக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும், அது சரிவராது போகவே இலங்கை இந்தியாவின் கைகளை விட்டுப் போவதை ஏற்கமுடியாதெனக்கூறி, ஆயுத உதவிகள் வழங்கப் போகின்றோமென்பதை தமிழகத்தில் வைத்தே மத்திய அரசு அறிவித்துவிட்டது.

தமிழகத்திலுள்ள பல கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இரகசியமான முறையில் இலங்கை அரசுக்குத் தேவையானளவு ஆயுத உதவிகளை இந்தியா வழங்கிவந்துள்ள நிலையில் சீனா, பாகிஸ்தானிடம் ஆயுதம் கேட்டுச் செல்ல இலங்கையை விடமாட்டோமென தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவித்திருப்பதன் மூலம் இலங்கைக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் முதல் பேரழிவு ஆயுதங்களை வழங்க இந்தியா தயாராகி விட்டமை புலனாகின்றது.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தபாய ராஜபக்ஷ டில்லிக்கு விஜயம் செய்ய முன்னரே பலதடவைகள் இரகசியமாக ஆயுத உதவிகளை வழங்கிய மத்திய அரசு கோத்தபாய டில்லி வருவதற்கு சில தினங்களுக்கு முன்னரும் விமானமொன்றின் மூலம் ஆயுத உதவிகளை அனுப்பி வைத்திருந்தது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக அன்ரனோவ் விமானமொன்றே இலங்கைக்குத் தேவையான ஆயுத தளபாடங்களுடன் இரகசியமாக கொழும்புக்குச் சென்றிருந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவை பகிரங்கமாக களத்தில் இறக்க வேண்டுமென செயற்பட்ட இலங்கை அரசின் இறுதிக் கட்ட காய் நகர்த்தலாகவே கோத்தபாயவின் இந்த மிரட்டல் கருதப்படுகிறது.

வழக்கமாக இந்தியாவிடம் உதவி கேட்டு அடிபணியும் இலங்கையரசு இம்முறை சீனா, பாகிஸ்தானை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைத்துள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கியிருப்பதும் தற்போதும் வழங்கி வருவதும் இந்தியாவுக்கு தெரியாத விடயமல்ல. ஏதோ முதல் தடவையாக உதவி கேட்டு சீனா, பாகிஸ்தானிடம் செல்லப் போவது போன்று கோதாபய கதைவிட, சீனா, பாகிஸ்தானிடம் இலங்கை உதவிகேட்டுச் செல்ல அனுமதிக்க முடியாதென்பதால் தாமே உதவி செய்வோமென கூறி தமிழர்களின் காதில் நாராயணன் பூ சுற்றுகிறார்.

ஈழத்தமிழர்கள் தமது விடுதலைப் போராட்டத்தில் வெற்றியை எட்டிப்பிடிக்கும் நேரத்திலெல்லாம் ஏதோவொரு வகையில் குறுக்கிட்டு அதனைத் தடுத்து நிறுத்துவது இந்திய அரசின் எழுதப்படாத சட்டம். அதற்கேற்றவாறானவர்களே எப்போதும் பிரதமருக்கு அருகில் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது ஈழத்தமிழ் இனத்துக்கும், அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் துரோகம் செய்துகொண்டிருப்பவர்தான் நாராயணன்.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் குட்டையை குழப்பிவந்த ரொமேஸ் பண்டாரி, ஜே.என்.டிக்ஸிட் வரிசையில் தற்போது அந்தப் பணியை எம்.கே.நாராயணனும் சிறப்பாக செய்து வருகின்றார்.
இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முதல் தடவை சென்றபோது பிரதமரை சந்திக்க முடியாமல் போனதற்கும் இந்த நாராயணனே காரண கர்த்தா.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுத்தளம் பெருகிவருவதால் அதனை உடைப்பதற்காக தமிழக மீனவர்களைப் பகடைக்காய்களாக்கிய பெருமையில் பெரும் பங்கு இவரையே சேரும். இலங்கைக்கு உதவ வேண்டுமென்பதில் விடாப்பிடியாக நின்று செயற்பட்ட நாராயணன் தற்போது அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். இனி ஒளிவு மறைவின்றி இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகளை தாராளமாக செய்யும்.

தமிழ்நாட்டில் தமிழர்களையே இனக் குரோதத்துடன் பார்க்கும் மலையாளி கூட்டமே தற்போது இந்தியப் பிரதமரின் கால்களைச் சுற்றிப் படர்ந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலர் என அத்தனைபேரும் தமிழின விரோதப் போக்கைக் கொண்டவர்கள். தமது நாட்டு தமிழ் மக்களையே விரோதிகளாகப் பார்க்கும் இவர்கள் அயல்நாட்டு தமிழர்கள் மீதா அக்கறை காட்டப்போகிறார்கள்?

புராணக்கதைகளில் வரும் நாரதரின் கலகம் சுபத்திலேயே முடியும். ஆனால், தற்போது இந்திய நாராயணன் செய்யும் கலகம் இலங்கையில் பெரும் அழிவுகளையே ஏற்படுத்தப்போகிறது.

நன்றி: தினக்குரல்

Sunday, May 27, 2007

அரசை விமர்சனம் செய்வோரை கண்காணிக்க விஷேட பொலிஸ் குழு

லங்கை அரசு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது.

உங்களால் அரசின் சரி பிழைகளைக்கூட சுட்டிக்காட்ட முடியாது. அரசாங்கத்தை நீங்கள் விமர்சித்தால், தேசிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி தடுத்து வைக்கப் படுவீர்கள்.

இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமல்ல, எதற்க்காகவும் விமர்சிக்கமுடியாது.

அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழுவொன்று அமர்த்தப்பட்டுள்ளது.

இந்தப் பொலிஸ் குழு கடந்த வாரம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அரசையும் அதன் அபிவிருத்தித் திட்டங்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும், சட்ட நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்யும் அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், ஊடகங்கள், அரச ஊழியர்கள், தொழிற் சங்கங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இப் பொலிஸ் குழுவின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இப்பொலிஸ் குழு சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் தொடர்பு வைத்திருப்போர், அவர்கள் செல்லும் இடங்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தகவல் திரட்டி பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் தந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

Thursday, May 24, 2007

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளன: அனைத்துலக மன்னிப்புச் சபை

மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.


நேற்று புதன்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கை வெளியீட்டின் போது அதன் பொதுச் செயலாளர் இரீனி ஹான் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

மிகவும் சக்தி வாய்ந்த அரசும், ஆயுதக்குழுக்களும் திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதுடன் அச்ச நிலையையும், ஆபத்தான உலகத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

பிரிவினைகள், அவநம்பிக்கைகளால் அச்சநிலை தோன்றியுள்ளது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மறக்கப்பட்ட மோதல்களான செச்சென்யா, கொலம்பியா, இலங்கை, மத்திய கிழக்கு போன்ற மோதல்களில் இடம்பெற்ற பெரும் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டதில் அனைத்துலக சமூகம் செயற்திறன் அற்றுள்ளது.

சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களின் போது பொதுமக்கள் இரு தரப்பாலும் தாக்கப்பட்ட போதும், நீதிக்கு புறம்பான படுகொலைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், ஏனைய மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் என்பன இலங்கையில் அதிகரித்துள்ளன.

மீண்டும் ஆரம்பித்த மோதல்களால் வடக்கு - கிழக்கில் 215,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 10,000 மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு சில வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களே கிடைக்கின்றன. அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் முகாம்களுக்கு நிதி வசதிகள் தாராளமாக கிடைப்பதுடன், ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையிலும் உள்ளது. ஆனால் போரினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் முகாம்களில் மின்சாரம், போக்குவரத்து, வடிகால் அமைப்பு வசதிகள் போன்றன போதியளவில் இல்லை.

வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றனர். குறுகிய நோக்கங்களுக்காக அரசுகள் சட்ட ஒழுங்குகளை மீறுவதுடன், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுகின்றன. இதன் மூலம் இனவாதம், மதப்பாகுபாடு, இனப்பாகுபாடு, சமூகப்பாகுபாடு என்பன தோற்றுவிக்கப்படுவதுடன் மோதல்களுக்கும் வழிவகுக்கின்றன.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஈராகில் நடைபெறும் போர், மனித உரிமை மீறல்கள் என்பன அனைத்துலக சமூகத்தில் பிரிவினையை தோற்றுவித்துள்ளது. இது மோதல்களை தவிர்த்து பொதுமக்களை பாதுகாப்பதை மேலும் சிக்கலாக்கி உள்ளது என்றார் அவர்.

Tuesday, May 22, 2007

ஐ.சி.சி. குழுவுக்கு மஹேல ஜயவர்தன தெரிவு

கிரிக்கெட் போட்டிகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கும் ஐ.சி.சி. குழுவில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன புதிய உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்.

13 பேரை உள்ளடக்கிய இக்குழுவில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான டுலிப் மென்டிஸ், ரஞ்சன் மடுகல்ல, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மாக்டெயிலர், மே. இந்தியத்தீவு அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு வீரர் மைக்கல் ஹோல்டிங் ஆகியோரும் இக்குழுவில் அங்கம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் போட்டியில், தற்போது நிலவும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவது, எதிர்காலத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை மேம்படுத்துவதுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவதுமே இக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

இக்குழுவில் இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான குமார் சங்கக்காரவும் அங்கம் வகித்திருந்தார். ஆனால், அவர் தற்போது, இங்கிலாந்தில் பிராந்திய அணிகளிடையே நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதினாலேயே, மஹேல ஜெயவர்தனவுக்கு இச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, May 8, 2007

அமெரிக்காவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் சிறிலங்கா

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லா பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம். அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பன நிதி உதவிகளை பெறுவதற்குரிய தகமைகளை இல்லாது செய்து விடும்."


மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறும் பொருட்டாவது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான சண்டே லீடர் தனது அரசியல் பத்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அந்த அரசியல் பத்தியின் முக்கிய பகுதிகள்:

"மனித உரிமை மீறல்கள், அனைத்துலகத்தின் அழுத்தங்கள், உலகத்தில் ஏற்பட்டு வரும் தவறான நிலைப்பாடுகள், பொருளாதார பேரழிவு போன்றவற்றில் மகிந்த ராஜபக்ச மெல்ல மெல்ல மூழ்கி வருகின்றார். இது அவரது கொடுமையான போர், இராணுவத் தீர்வு மனநிலை, தான்தோன்றித்தனமான கொள்கைகள் போன்றவற்றின் அறுவடையாகும்.

மனித உரிமை விதிகளை கடைப்பிடிக்கும் படி அனைத்துலக சமூகம் மகிந்தவை கேட்டுள்ள போது, மகிந்த தமது நாட்டின் மீதான நல்லெண்ணத்தை சிதைத்து வரும் அதேசமயம் சிறிலங்காவிற்கான நிதிகளை நிறுத்த வேண்டாம் என மன்றாடியும் வருகிறார்.

மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசு நிறுத்த முடியாத பட்சத்தில் அதன் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் படி அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க அரச தலைவர் ஜேர்ச் புஷ்சை கேட்டிருந்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த மகிந்த, அரச தலைவர் விசாரணைக்குழுவை அமைப்பதுடன், அதனை கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழுவையும் வரவழைப்பதாக புஷ்சுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (08.05.07) அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான துணைச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் சிறிலங்காவிற்கு ஒரு கடுமையான செய்தியுடன் வருகின்றார். பௌச்சர் சிறிலங்காவில் நடைபெற்று வந்த அமைதி முயற்சிகளில் பங்கு பற்றியிருந்தவர், அவர் இணைத்தலைமை நாடுகளுடனும் பல சுற்று பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

பௌச்சர் எதிர்வரும் புதன்கிழமை யாழ். குடாநாட்டுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவார். சிறிலங்காவினால் கூறப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போருக்கு ஆதரவளித்த அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை மணி சிறிலங்காவின் கவலையை அதிகரித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகள் மற்றும் நிதி சேகரிப்புக்களை அமெரிக்கா தடுத்து நிறுத்திய போதும் அது விடுதலைப் புலிகளை உலகத்தின் பயங்கரவாதிகளாக உடனடியாக நோக்கவில்லை. மகிந்த ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உலக பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போர் என்பது முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எதிரான போராகும். அமெரிக்க அதிகாரிகளின் வரைவிலக்கணத்தில் விடுதலைப் புலிகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

எனவே விடுதலைப் புலிகளின் மீதான அனைத்துலகத்தின் நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம், உலக சமூகத்தினால் மதிக்கப்பட வேண்டும். ஆனால் மகிந்த அரசாங்கம், அதில் பெரும் தவறுகளை இழைத்து வருகின்றது. ஆனால் விடுதலைப் புலிகள் இதில் மிகவும் கவனமாக திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களை ஒரு ஒழுக்கமுள்ள படையினராக நிலைநிறுத்தி வருகின்றனர். அது சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நீதிக்கு புறம்பான கடத்தல்கள், காணாமல் போதல் போன்றன உட்பட அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கொடூரமான போருக்கு எதிராக போராடும் ஒரு அமைப்பாக விடுதலைப் புலிகள் தம்மை நிலைப்படுத்த உதவியுள்ளது.

இதனால் உலகத்தின் ராடார் திரைகளில் இருந்து சிறிலங்கா மறைந்து வருவதுடன் அது புறக்கணிக்கப்பட்ட தேசமாகவும் மாறி வருகின்றது. கடந்த வருடத்தில் இருந்து அமெரிக்காவின் கண்களில் இருந்து சிறிலங்கா மறைந்து வருகின்றது என வொசிங்டனை தளமாக கொண்ட புறூக்கிங் நிறுவனத்தை சேர்ந்த கலாநிதி ரீபன் பிலிப் கோகின் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான வான் தாக்குதல்கள் அனைத்துலக மற்றும் பிராந்திய நலன்களுக்கு ஆபத்தானது என அரசாங்கம் கூறிய போதும், அது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கோட்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என வெளிவிவகார கொள்கைகளை ஆராய்ந்து வரும் 500 உயர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் பிலிப் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான தடைகள் குறித்து அமெரிக்காவில் மட்டுமல்லாது பிரித்தானியாவிலும் சவால்கள் தோன்றியுள்ளன. பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் 4 மணிநேரம் நடைபெற்ற விவாதத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமற்றதானாலும் அது சிறிலங்காவிற்கான நிதி உதவிகளை நிறுத்தியுள்ளது. இதற்கு சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களே இதற்கு காரணமாகும்.

சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெரும் பிரிவினையான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக சிறிலங்கா அரசாங்கம், மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த முற்படாது விட்டால் அது மிலேனியம் சவால்களுக்கான நிதியினை இழப்பது உட்பட பல எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என குறிப்பிட்ட எண்ணிக்கையான செனட் உறுப்பினர்கள் மகிந்தவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

உணவு, எரிபொருள் போன்றவற்றை யாழ். குடாநாட்டிற்கு அனுப்புவதற்கான பாதையை அரசாங்கம் திறக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள சிறிலங்காவின் தூதரகத்தினை அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் ஜோன் எஃப் கென்னடியின் இளைய சகோதரரான எட்வேட் கென்னடியும் மற்றும் செனட்டரான றொப் கென்னடி, முன்னாள் ஜனநாயகக் கட்சி அரச தலைவர் வேட்பாளர் ஜோன் ஹெரி ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பரில் கேட்டிருந்தனர்.

சிறிலங்காவின் அரசாங்கப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள், நீதிக்கு புறம்பாக தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுதல் துன்புறுத்தப்படுதல் தொடர்பாக கென்னடி, ஹெரி ஆகியோருடன் மற்றுமொரு உயர் ஜனநாயக கட்சியின் செனட்டரான கிறிஸ்த்தோபர் ஜே டொட்டும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

இதனிடையே சிறிலங்கா மிலேனியம் சவால்களுக்கான நிதியினை பெறும் தகுதியை இழக்கலாம் என ஆளும் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினரும், வெளிவிவகார உறவுகளுக்கான தலைவருமான செனட்டர் றிச்சார்ட் லுகர் அண்மையில் மகிந்தவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். லுகர் வெளிவிவகார கொள்கைகளின் குரு என அமெரிக்காவில் போற்றப்படுபவர், 1976 ஆம் ஆண்டு தொடக்கம் செனட்டர் பதவியை வகித்து வருகின்றார்.

எனினும் மகிந்தவினால் அமைக்கப்பட்டுள்ள அரச தலைவர் விசாரணைக்குழு மற்றும் அனைத்துலக நிபுணர் குழுவிரை அழைத்தது என்பன ஒரு அனுகூலமான அறிகுறி என லுகர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்க செனட்டர்களின் கருத்துக்கள் அண்மையில் சுதந்திர இல்லத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் எதிரொலித்துள்ளது. அந்த அமைப்பின் மே மாத அறிக்கையில் சிறிலங்காவுக்கு 5 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு 1980 களில் உருவாக்கப்பட்டு ஊடகங்களில் அச்சு ஊடகங்கள், ஒலி, ஒளிபரப்பு ஊடகங்கள், இணையத்தள ஊடகங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் 0 தொடக்கம் 100 புள்ளிகள் வழங்கப்படுவதுண்டு. இது சுதந்திரமான நாடு, பகுதியான சுதந்திர நாடு, சுதந்திரமற்ற நாடு என்ற தரப்படுத்தல்களுக்கு உட்படுவதுண்டு. சிறிலங்கா பகுதியான சுதந்திர நாடு என்ற தரப்படுத்தலுக்கு தற்போது உட்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தீவிரமடைந்துள்ள மோதல்கள் அங்கு ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்துள்ளது.

மோசமான மனித உரிமை மீறல்களை அரசாங்கம் நிறுத்தாது விட்டால் மிலேனியம் சவாலுக்கான நிதியினை நிறுத்துமாறு கடந்த ஏப்பிரல் 6 ஆம் நாள் சுதந்திர இல்லம் கேட்டுக்கொண்டுள்ளது. இது விடுதலைப் புலிகளின் மீதான அனுதாபத்தினால் அல்ல அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஏற்பட்டது.

சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும், மனித உரிமை மீறல்களை பாதுகாக்க வேண்டும் எனவும் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ஜனநாயக கட்சியின் செனட்டரான டிக் டேர்பின் கடந்த ஆண்டு டிசம்பரில் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

சிறுவர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான கருத்துக்களில், சில நாடுகள் தமது சொந்த படைகளுக்கு சிறுவர்களை சேர்ப்பதாகவும் சில நாடுகள் தமது படையினரின் துணை இராணுவக் குழுக்களின் மூலம் சிறுவர்களை படையில் சேர்ப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. கருணா குழு அரச படையினரின் ஆதரவுடன் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக முன்னர் அலன் றொக் தெரிவித்திருந்தார்.

ஆனால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் சிறுவர் படைச்சேர்ப்புக்கு உதவக்கூடாது எனவும், அமெரிக்காவின் ஆயுதங்கள் சிறார்களின் கைகளில் சேரக்கூடாது எனவும் சில அமைப்புக்கள் தெரிவித்திருந்தன. அமெரிக்கா இத்தகைய நாடுகளுக்கான தனது இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என டார்பினின் தெரிவித்துள்ளார்.

இவை மட்டுமல்லாது சிறிலங்காவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது கவலையை அமெரிக்காவின் செனட்டின் நீதியாளர் சபையின் தலைவரான நீதிபதி லெஹியும் மகிந்தவுக்கு தெரிவித்திருந்தார்.

செனட்டரின் கடிதத்திற்கு மகிந்த பதில் அனுப்பியதை அவர்கள் உறுதி செய்த போதும் அதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கங்களை விட விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களே அதிகமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

எனினும் சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லாப் பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். அமெரிக்க கண்ணை மூடிக்கொண்டு சிறிலங்காவிற்கான தனது நிதி உதவியினை நிறுத்தப்போவதில்லை.

எனினும் லுகரின் கூற்றின் பிரகாரம் உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம்.

அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் நிதி உதவிகளை பெறுவதற்குரிய சிறிலங்கா அரசாங்கத்தின் தகமைகளை இல்லாது செய்து விடும். மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறுவதற்கான உறுதிமொழிகள் 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட போதும், இன்று வரை அந்த நிதி வழங்கப்படவில்லை.

ஆனால் இந்த நிதியானது புஷ்சின் நிர்வாகத்தினால் வழங்கப்படுவது என்பதை மகிந்த கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் புஷ்சின் கட்சி 2008 ஆம் ஆண்டு வீழ்ச்சி காண்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. எனவே புதிய அரச தலைவர் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவதுடன் முன்னைய திட்டங்களை மாற்றவும் முயற்சிக்கலாம்.

எனவே சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் நிபந்தனைகளை விரைவாக பூர்த்தி செய்து இந்த நிதியினை பெறவேண்டிய நிலையில் தற்போது உள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, May 5, 2007

இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மனித உரிமைக்கான சர்வதேச விருது

இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மனித உரிமைக்கான சர்வதேச விருது
மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான மார்ட்டின் என்னல்ஸ் சர்வதேச விருது இலங்கையைச் சேர்ந்த இரண்டு பல்கலைக்கழக பேராசிரியர்களூக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் இந்த விருதினை புரூண்டியின் முன்னாள் பொலிஸ்காரர் ஒருவரும் பகிர்ந்துகொள்கிறார்.

இலங்கையின் இன மோதலில் இழைக்கப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டுவரும், அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், (யூ.டி.எச்.ஆர், ஜாப்னா) என்ற அமைப்பை நடத்திவரும் பேராசிரியர்கள் ராஜன் ஹுல் மற்றும் பேராசிரியர் கோபாலசிங்கம் சிறிதரன் ஆகிய இருவருக்குமே சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் இணைந்து வழங்கும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்றுள்ள பேராசிரியர் ராஜன் ஹுல்
அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட 11 மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் இந்த மனித உரிமைகள் விருதை, இந்த இலங்கை மனித உரிமையாளர்கள், புருண்டி நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு மனித உரிமை ஆர்வலர் பியர் க்ளேவர் ம்போனிம்ப்பா அவர்களுடன் இணைந்து பெறுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் அமைப்பின் நடுவர்கள் குழுத் தலைவர் ஹான்ஸ் தூலன் அவர்கள், ‘’இந்த மூவரும், ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதே ஆபத்தான ஒரு செயலாக ஆகிவிட்ட, அவர்கள் பணியாற்றும் நாடுகளில், மனித உரிமைகள் இயக்கத்தின் குறியீடாகத் திகழ்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார், இவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் சுதந்திரமாக இயங்க விடுமாறு, இலங்கை மற்றும் புருண்டி அரசுகளுக்கு இந்த விருதினை வழங்கும் 11 மனித உரிமை அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

நன்றி: பிபிசி

Friday, April 13, 2007

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்-2007

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிறக்கும் இவ்வருடம் நம் எல்லோருக்கும் அமைதியையும், சுபீட்சத்தையும், சந்தோஷத்தையும் தரும் ஒரு நல்ல வருடமாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

Wednesday, January 17, 2007

சோதனைப் பதிவு!

இது ஒரு சோதனைப்பதிவு. ஆனால் எனக்கு சோதனையான பதிவு. பார்க்கலாம்...........!!