மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று புதன்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கை வெளியீட்டின் போது அதன் பொதுச் செயலாளர் இரீனி ஹான் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மிகவும் சக்தி வாய்ந்த அரசும், ஆயுதக்குழுக்களும் திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதுடன் அச்ச நிலையையும், ஆபத்தான உலகத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
பிரிவினைகள், அவநம்பிக்கைகளால் அச்சநிலை தோன்றியுள்ளது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மறக்கப்பட்ட மோதல்களான செச்சென்யா, கொலம்பியா, இலங்கை, மத்திய கிழக்கு போன்ற மோதல்களில் இடம்பெற்ற பெரும் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டதில் அனைத்துலக சமூகம் செயற்திறன் அற்றுள்ளது.
சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களின் போது பொதுமக்கள் இரு தரப்பாலும் தாக்கப்பட்ட போதும், நீதிக்கு புறம்பான படுகொலைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், ஏனைய மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் என்பன இலங்கையில் அதிகரித்துள்ளன.
மீண்டும் ஆரம்பித்த மோதல்களால் வடக்கு - கிழக்கில் 215,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 10,000 மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு சில வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களே கிடைக்கின்றன. அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் முகாம்களுக்கு நிதி வசதிகள் தாராளமாக கிடைப்பதுடன், ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையிலும் உள்ளது. ஆனால் போரினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் முகாம்களில் மின்சாரம், போக்குவரத்து, வடிகால் அமைப்பு வசதிகள் போன்றன போதியளவில் இல்லை.
வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றனர். குறுகிய நோக்கங்களுக்காக அரசுகள் சட்ட ஒழுங்குகளை மீறுவதுடன், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுகின்றன. இதன் மூலம் இனவாதம், மதப்பாகுபாடு, இனப்பாகுபாடு, சமூகப்பாகுபாடு என்பன தோற்றுவிக்கப்படுவதுடன் மோதல்களுக்கும் வழிவகுக்கின்றன.
அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஈராகில் நடைபெறும் போர், மனித உரிமை மீறல்கள் என்பன அனைத்துலக சமூகத்தில் பிரிவினையை தோற்றுவித்துள்ளது. இது மோதல்களை தவிர்த்து பொதுமக்களை பாதுகாப்பதை மேலும் சிக்கலாக்கி உள்ளது என்றார் அவர்.
Thursday, May 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment