Thursday, June 21, 2007

இலங்கை இராணுவத்திற்க்கான நிதி ஒதுக்கீடு.












2005 ஆம் ஆண்டுக்கான கல்விக்கான செலவீனமானது வெறுமனே 26 பில்லியன்களே ஆகும். அதே ஆண்டு சுகாதாரத்திற்கான செலவீனம் 30 பில்லியன் ரூபாவே ஆகும். ஆயுதக் கொள்வனவுக்கான பணத்தை இவ்விரு துறைகளுக்கும் பயன்படுத்தியிருந்தால் எந்தளவு தூரம் அபிவிருத்தி கண்டிருக்க முடியும் என்பதை உணரலாம்.


இலங்கையில் எழுத்தறிவு 90 சதவீதம் என்று கூறிக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை பாடப்புத்தக பற்றாக்குறை, நல்ல பாடசாலைகளுக்கான வசதி இன்மை போன்ற ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதே மாதிரியான பிரச்சினைகள் சுகாதாரத் துறையிலும் இருக்கிறது. அரசாங்க வைத்திய சாலைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதுடன், சிறந்த மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதிலும் சிரமங்கள் எதிர் நோக்கப்படுகிறது. இவ்வாறு சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற அதே மக்கள் தான் இராணுவ செலவீனத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டிய துரதிர்ஷ்டமான நிலைமை இருக்கிறது.


இத்தகைய செலவீனங்களின் பின்னணியில் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்குமானால், இறுதியில் சிங்கள மற்றும் தமிழ் மக்களே இழப்பாளிகளாக இருப்பர். சிறுவர்கள், கல்வி ரீதியாக பாதிக்கப்படுவதுடன், சுகாதாரம், போக்குவரத்து உட்பட சகல துறைகளிலும் நாடு பெரும் பின்னடைவை சந்திக்கும். இந்த நாடு, இராணுவ செலவீனத்திற்குள் சிக்குப்பட்டு, அதல பாதாளத்திற்குள் வீழ்வதை தடுப்பதற்கு, இந்த நாட்டு மக்கள் காத்திரமான ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டும். அவர்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்கக் கூடாது.

Friday, June 15, 2007

இலங்கையில் தமிழ்மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்-ரொய்ட்டர்ஸ்

இலங்கையில் தமிழ்மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்-ரொய்ட்டர்ஸ்

சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

இச்சம்பவங்களுக்கு அரச படையினர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அங்கு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர், உதவி நிறுவனங்கள் போன்றவை தமது பணிகளை மேற்கொள்ள முடியாது தடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. சிறிலங்காவிற்கு அனைத்துலகத்தின் உதவிகள் தேவை. ஆனால் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் அதனை தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளியள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவும், அமெரிக்காவும் மனித உரிமை மீறல்களை காரணம் கூறி இந்த ஆண்டு சிறிலங்காவிற்கான சில உதவிகளை நிறுத்தியுள்ளன. இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மீளக்குடியமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக உணவு உதவிகளை உலக உணவுத்திட்டம் நிபந்தனையாக போட்டுள்ளது. இருந்த போதும் பல தாக்குதல் சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டியது மிக மிக அவசியமானது என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹாவெல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் இந்த வாரம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தனிமைப்படுத்தப்படக் கூடாது என்பதனையே நாம் எல்லோரும் விரும்புகின்றோம். எனினும் நாம் அதனை நோக்கி தள்ளப்படுகின்றோம். இதனை தடுப்பதற்கோ இல்லது மாற்றுவதற்கோ எந்த வழியும் இல்லை.கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன நிறுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களை கொழும்பில் இருந்து அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்திகள் மீண்டும் பின்பற்றப்படக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்குவதற்கு தகுந்த காரணங்களை கொண்டிருக்கவில்லை என குற்றம் சுமத்தி கடந்த வாரம் கொழும்பில் உள்ள 400 தமிழ் மக்களை அரசு வேறு பகுதிக்கு பலவந்தமாக அனுப்பியிருந்தது. எனினும் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு அதிகாரிகளை தமது முடிவுகளை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளியிருந்தது.

நூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.இந்த அறிக்கைகள் போலியாவை எனவும் அது அரசுக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன் அதனுடன் படையினருக்கு உள்ள தொடர்பையும் அவர் மறுத்துள்ளார்.

பயங்கரவாதத்தை கையாள்வது தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களில் இருந்து அரசு அதன் எல்லையை முற்று முழுதாக தாண்டியுள்ளதாக தேசிய சமாதான சபையைச் சேர்ந்த ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.அனைத்துலக சமூகத்தில் இருந்தும், உள்நாட்டிலும் அரசு சுயமாகவே தனிமைப்பட்டுள்ளது. எனினும் அனைத்துலக சமூகம் தம்மை வற்புறுத்துவதாக அரசு அதிருப்தி அடைந்துள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்பில் மேற்குலக நாடுகள் இரட்டைப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கு தமிழ் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியது சிறந்த நடவடிக்கை எனவும் அரச தலைவரின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச, பிபிசி மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களுக்கு மிகவும் பலப்படுத்தப்பட்ட தனது அலுவலகத்தில் இருந்தவாறு நேர்காணல் வழங்கும் போது தெரிவித்துள்ளார்.

இது அனைத்துலக சமூகத்தின் பாரபட்சமானதும், வன்புறுத்தலுமான நடவடிக்கையாகும். பிரச்சனையை விளங்கிக்கொள்ளாது அவர்கள் எங்களை வற்புறுத்த முயற்சிக்கின்றனர். நாம் தனிமைப்பட மாட்டோம். எமக்கு ஆதரவாக சார்க் அமைப்பில் உள்ள ஆசிய நாடுகள் உள்ளன. பிரித்தானியா, மேற்குலக நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை தாம் விரும்பியதனை செய்யட்டும் நாம் அவர்களில் தங்கியிருக்கவில்லை. தூதரக அதிகாரிகள் தமது அரசுகளை தவறாக வழி நடத்துகின்றனர். அனைத்துலக ஊடகங்களும் பிரச்சினைக்கு ஒரு காரணம். அவர்கள் அரசுக்கு எதிரான செய்திகளை கொடுக்கிறார்கள். நாம் எங்களை தற்காத்துக் கொள்வோம். நீங்கள் நாட்டை ஆபத்தில் தள்ள முடியாது. ஹிம் ஹாவெல் முற்றிலும் தவறான தகவல்களை கொண்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இந்த வாரம் அரசுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தரும் விடயம் நிகழந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான அரசின் விசாரணைகள் அனைத்துலக தரத்தில் நடைபெறவில்லை என அரச தலைவரினால் நியமிக்கப்பட்ட அனைத்துலக நிபுணர் குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வருடத்தில் மட்டும் நடைபெற்ற வன்முறைகளில் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர். சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

இதில் கடும் போக்கான அரசியல் கட்சிகள், பௌத்த மதகுருமார் போன்றவர்களும் அடக்கம் என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் சிறிலங்காவை கைவிட வேண்டிய நிலையும் ஏற்படலாம் என தனது பெயரைக்குறிப்பிடாத கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தெரிவிக்கப்படும் பல முரணான கருத்துக்களினால் நாட்டின் வெளிவிவகார கொள்கையில் முற்றிலும் தெளிவற்ற தன்மையை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ச்சியாக ஒருவருக்கு ஒருவர் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். உள்ளுரில் ஒரு செய்தியும் அனைத்துலகத்திற்கு பிறிதொரு செய்தியும் தெரிவித்து வருவது ஆபத்தானது. அதுவே அவர்களை தனிமைப்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 10, 2007

இந்து நாளிதழின் எல்லையில்லா சிங்கள விசுவாசம்!!


தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான "இந்து"வின் சிங்கள விசுவாசம் எல்லையற்றதாக விரிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இந்தியக் குடிமகனால்தான் "இந்து" நடத்தப்பட்டாலும் அறிவிக்கப்படாத "தமிழ்நாட்டின் சிறிலங்கா தூதரகமாகத்தான்" அது செயற்பட்டு வருகிறது.

தமிழருக்கு எதிராக சிங்களவர்களைப் பாதுகாக்க தனது "ஊடக தர்மத்தை" முழுவீச்சில் பயன்படுத்தும் "இந்து" ஏடுதான் யோக்கிய சிகாமணியான "நடுநிலை"யாளர் என்று மார்தட்டிக் கொள்கிறது.

கொழும்பில் அரை மணித்தியால அவகாசம் கூட அளிக்காமல் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றி பேரூந்துகளில் அனுப்பியது.இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை பின்பற்றி மகிந்த மேற்கொண்ட இந்த கொடுஞ்செயலை அனைத்துலகமும் கண்டனம் தெரிவித்தன.சிறிலங்காவுக்கு ஆயுதங்களையும் தரும் அமெரிக்கா கூட- சிறிலங்கா அரசாங்கம்தான் குற்றவாளியாக பல்வேறு நிகழ்வுகளில் இருந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்தே குற்றம்சாட்டி சிறிலங்காவை பாதுகாத்து வரும் அந்த அமெரிக்காவும் கூட கொழும்பு கொடுஞ்செயலுக்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

"நடுநிலை" அனுசரணையாளர் நோர்வேக்காரர்களும் இப்போதுதான் "கண்டனம்" என்ற சொல்லை உதிர்த்திருக்கிறார்கள். ஆனால் "இந்து" நாளேட்டின் "நடுநிலை" கண்களுக்கு "கண்டனம்" என்ற சொல் தெரியவில்லை போலும்.கொழும்பு சம்பவம் என்பது மகிந்தவுக்குத் தெரியாமல் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தன்னிச்சையாக செய்துவிட்டார் என்பதுபோல் செய்தி வெளியிட்டுள்ள இந்து- (நாள்: 09.06.07)அதன் உள்ளே "Norway reaction" என்ற தலைப்பில் நோர்வேயின் அறிக்கை பற்றி எழுதுகிறது.ஆனால் நோர்வே வெளியிட்ட அறிக்கையின் முதல் வரியாக உள்ள "Norway condemns yesterday’s sudden and enforced removal of civilian Tamils from their dwellings in Colombo" என்பதை மட்டும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு சிங்களவர்களைப் பாதுகாக்கிறதாம்."இந்து".

அதேபோல்அமெரிக்காவின் அறிக்கையிலும் சிறிலங்காவுக்கு அமெரிக்கா ஆதரவாகத்தான் இருப்பது போல தோற்றமளிக்கும் வகையில் செய்தி வெளியிட்டிருக்கிறது.அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் முதல் வரியே"The United States condemns the forced removal of Tamils from Colombo" என்பதுதான்.ஆனால் "சிங்கள ரத்னா" விருது பெற்ற சிங்கள விசுவாச "இந்து"வுக்கு இதனை பிரசுரிக்க மனம் வருமா என்ன?

இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கொழும்பில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரித்தானியா போல் சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதி உதவியை நிறுத்தாது என்று பதிலளித்துள்ளார்.ஆனால் சிங்கள அடிவருடி "இந்து"வோ பிரித்தானியா போன்ற நாடுகள் நிதி உதவியை நிறுத்துவதற்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது என்பது போல் தலைப்பிட்டு சிங்களவர்களுக்கு ஆதரவைத் தேடித் தருகிறதாம்! "சிங்கள இரத்னா" இந்துவே- தொடரட்டும் உன் விசுவாசம்!


நன்றி: தினக்குரல்

Thursday, June 7, 2007

தொடரும் மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் ஆட்கடத்தல்கள் இன்று படுமோசமாக அதிகரித்துக் கொண்டே போகின்றன. அடுத்த நிமிடம் யார் கடத்தப்படுவாரோ என்ற அச்சத்தில் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வாழ்கின்றனர். படுகொலைச் சம்பவங்களோடு ஆட்கடத்தல்கள் சர்வசாதாரணமாகியுள்ளன.

மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் குடிகொண்டுள்ளது. மக்கள் நிம்மதியிழந்தவர்களாக விரக்தி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்து வெளியே போகும் ஒருவர் மீண்டும் வீடு திரும்பும் வரை நிச்சயமில்லாத நிலைமையே தொடர்கிறது. ஆட்கடத்தல்கள் குறித்து எத்தகைய குரல் எழுப்பப்பட்ட போதிலும் அரசு அது குறித்து அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை.

ஆரம்பத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காரணம் கற்பிக்கப்பட்டது. இன்று அந்த நிலைமாறி வெள்ளை வான் கடத்தல் என்ற பெயரில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அரசு மீது சுட்டு விரல் நீட்டும் அளவுக்கு விவகாரம் முற்றிப் போயுள்ளது. உண்மையும் அதுதான்.

சமீபத்தில், சர்வதேச செஞ்சிலுவை நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருவரை கடத்திக் கொலை செய்தது கருணா குழுவினர்தான் என்று இலங்கை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. கருணா குழு என்பது ராணுவத்தோடு சேர்ந்தியங்கும் ஒரு ஒட்டுப்படை.

இன்று தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் இன்றி ஆட்கள் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் வசதிபடைத்தவர்கள் இலட்சம், கோடி என்று பணத்தை அள்ளி வீசி விட்டு தப்புகின்றனர். வசதியில்லாத அப்பாவிகளுக்கு அதோ கதிதான். கடத்தப்பட்டவர் இரண்டொரு தினங்களில் எங்காவது ஓரிடத்தில் பிணமாகக்கிடப்பார். நாட்டின் பாதுகாப்புக்கு இன்று எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. பாதுகாப்பு விடயத்தில் மக்கள் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்து விட்டனர்.

இலங்கையில் தொடரும் இவ்வாறான படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் மனித உரிமை மீறல்களும் சர்வதேச மட்டத்தில் நாட்டை தலைகுனிய வைத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலாமிடத்துக்கு வரும் காலம் தொலைவிலில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. மக்களை நிம்மதியாக அச்சமின்றி வாழ வைக்கும் பிரதான பொறுப்பு அரசாங்கத்தையே சார்ந்திருக்கின்றது. ஆனால், நாட்டில் தொடரும் மோசமான சம்பவங்கள் குறித்து அரசு மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு பொறுப்பற்ற விதத்தில் தட்டிக்கழித்துச் செயற்படுவது பெரும் அதிர்ச்சியையே தருகிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச சமூகம் கண்டனக் குரல் எழுப்பியுள்ளது. இது குறித்துக் கூட அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மனிதனை மனிதன் மனிதாபிமான அடிப்படையில் நேசிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் அச்சமின்றியுமே வாழ விரும்புகின்றோம். ஒரு மனிதனின் வாழும் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமை கிடையாது. இந்த மனிதாபிமான உரிமையை பாதுகாத்து அச்சம், பீதியற்ற ரீதியில் நிம்மதியாக ஒவ்வொரு பிரஜையும் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அரசு உணரவேண்டும்.

ஏட்டிக்குப் போட்டியாக சவால்களையும் மறுப்புகளையும், சொல்வதால் அறிக்கை விடுவதால் பலனெதுவும் கிட்டப்போவதில்லை. மனித உரிமைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

Sunday, June 3, 2007

இலங்கையின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்து விட்டதா?

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் அவசர டில்லி விஜயமும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் திடீர் தமிழ் நாட்டுப் பயணமும் அரசியல் இராணுவ ரீதியில் இலங்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன.

ஆயுதங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் `ரோ' வின் உயரதிகாரியுமான எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தியா வந்திருந்த இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தியா உடனடியாக இலங்கைக்கு ஆயுத தளபாட உதவிகளை வழங்கவேண்டுமெனக் கோரியதுடன் மறுத்தால் சீனா பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து தமக்குத் தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்வோமெனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் மிரட்டியுள்ளார்.

கோத்தபாயவின் மிரட்டலையடுத்தே இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு தயாரென அவசரமாக அறிவித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து சம்மதிக்க வைப்பதற்காக கடந்த வியாழக்கிழமை அவசர விஜயமொன்றை மேற்கொண்டு தமிழகத்திற்கு வந்தார். இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை கருணாநிதியை டில்லியில் சந்தித்த நாராயணன் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் கருணாநிதி உடனடியாகவே அதனை மறுத்து விட்டார்.

28 ஆம் திகதி தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி வருவதாக இருந்த நிலையிலேயே திடீரென அதற்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை டில்லிக்கு வந்திறங்கிய இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் இந்திய உயர் மட்டங்களுடன் அதிரடிச் சந்திப்புகளை மேற்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே.நாராயணன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் சேகர்தத், இராணுவத் தளபதி ஜே.ஜே.சிங், கடற்படைத் தளபதி சுரேஷ்மேத்தா, விமானப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் பாலி ஹோமி ஆகியோருடன் சந்திப்புகளை நடத்திய கோத்தபாய தமது கோரிக்கைளை முன்வைத்தார்.

இச் சந்திப்புகளின்போது வான்புலிகளால் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் தாழ்வாகப் பறக்கும் விமானங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய இடத்துக்கு இடம் கொண்டுசெல்லக்கூடிய நவீன ராடர்களையும் கோரிய கோதாபய, கடற்புலிகளை ஒடுக்க இந்தியப் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்பையும் இலங்கை இந்திய கடற்படையின் கூட்டு ரோந்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களின் பட்டியலை இச் சந்திப்புகளின்போது கையளித்த கோத்தபாய உடனடியாக குறிப்பிட்ட ஆயுத உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்க வேண்டுமெனவும் மறுத்தால் சீனா, பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து இலங்கை தமக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யுமெனவும் இலங்கைக்கு உதவி செய்வதற்காக மேற்குறித்த நாடுகள் காத்துக்கொண்டிருப்பதாகவும் மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

கோத்தபாயவின் மிரட்டலையடுத்தே டில்லி வந்த கருணாநிதியை சந்தித்த பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு இந்தியா தயாரென கூறி கருணாநிதியை நாடி பிடித்துப் பார்த்தார். ஆனால், நாராயணனின் கூற்றுத் தொடர்பில் கருத்துக்கூறிய கருணாநிதி இலங்கை - இந்திய கடற்படைக் கூட்டு ரோந்து தொடர்பான தி.மு.க.வின் கருத்தில் மாற்றம் எதுவுமில்லையென அறிவித்தார்.

இதையடுத்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய்வதற்கென்ற போர்வையில் வியாழக்கிழமை தமிழகத்திற்கு வந்த நாராயணன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை இந்திய கடற்படையின் கூட்டு ரோந்து தொடர்பில் மத்திய அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தியதுடன் புலிகளால் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்தும் ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க இதுவே சிறந்த வழியென்றும் கூறியபோதும் கருணாநிதி இதற்கு உடன்படவில்லை. இதேவேளை, இலங்கையரசுக்கு ஆயுத உதவிகளை வழங்குவதெனத் தீர்மானித்த பின்னரே நாராயணன் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டு கருணாநிதியை `தாஜா' பண்ண முயற்சித்தார்.

இலங்கைக்கு தற்பாதுகாப்பு சாதனங்களை மட்டுமே தாம் வழங்குவதாகவும், அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் எதையும் வழங்கவில்லை எனவும் கூறி இலங்கை இந்தியாவின் கையை விட்டுப்போனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கருணாநிதிக்கு விளக்கினார்.

கருணாநிதியை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த நாராயணன் இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு சாத்தியமில்லையெனத் தெரிவித்ததுடன், ஆயுதங்களை வாங்குவதற்காக சீனா- பாகிஸ்தான் நாடுகளிடம் இலங்கை செல்வதை இந்தியா ஒருபோதும் விரும்பாதெனவும் கூறியுள்ளார்.

இதன் மூலம் இலங்கைக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளை நியாயப்படுத்த நாராயணன் முயற்சித்தார். அத்துடன் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாதென இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் தாம் கடுமையாக கூறியிருப்பதாக தெரிவித்த நாராயணன் 5 தமிழக மீனவர்களை புலிகளே சுட்டுக் கொன்றதாகவும் குற்றம் சாட்டினார்.
புலிகளிடம் விமானங்கள் இருப்பதை இந்தியா விரும்பவில்லையெனச் சுட்டிக் காட்டிய நாராயணன் இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ராமதாஸ், வைகோ போன்றோர் தொடர்பாக கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு தமிழக அரசை இணங்க வைப்பதற்காகவே தமிழக மீனவர்களின் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன், விடுதலைப் புலிகள் தொடர்பாக தமிழகத்தில் விஷமப் பிரசாரங்களும் முடுக்கிவிடப்பட்டன. இரும்புக் குண்டு கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், மீனவர்கள் கடத்தலென திட்டமிடப்பட்டே பல சம்பவங்கள் தமிழகத்திலும் தமிழக கடற்பரப்புகளிலும் நடத்தப்பட்டன. இலங்கைக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளை வழங்கி வந்த இந்தியா அதனை பகிரங்கமாகச் செய்வதற்காகவே அதற்குரிய களநிலையை தமிழகத்தில் ஏற்படுத்தி மக்களின் `விடுதலைப் புலி ஆதரவு' மனநிலையைச் சிதைக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும், அது சரிவராது போகவே இலங்கை இந்தியாவின் கைகளை விட்டுப் போவதை ஏற்கமுடியாதெனக்கூறி, ஆயுத உதவிகள் வழங்கப் போகின்றோமென்பதை தமிழகத்தில் வைத்தே மத்திய அரசு அறிவித்துவிட்டது.

தமிழகத்திலுள்ள பல கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இரகசியமான முறையில் இலங்கை அரசுக்குத் தேவையானளவு ஆயுத உதவிகளை இந்தியா வழங்கிவந்துள்ள நிலையில் சீனா, பாகிஸ்தானிடம் ஆயுதம் கேட்டுச் செல்ல இலங்கையை விடமாட்டோமென தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவித்திருப்பதன் மூலம் இலங்கைக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் முதல் பேரழிவு ஆயுதங்களை வழங்க இந்தியா தயாராகி விட்டமை புலனாகின்றது.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தபாய ராஜபக்ஷ டில்லிக்கு விஜயம் செய்ய முன்னரே பலதடவைகள் இரகசியமாக ஆயுத உதவிகளை வழங்கிய மத்திய அரசு கோத்தபாய டில்லி வருவதற்கு சில தினங்களுக்கு முன்னரும் விமானமொன்றின் மூலம் ஆயுத உதவிகளை அனுப்பி வைத்திருந்தது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக அன்ரனோவ் விமானமொன்றே இலங்கைக்குத் தேவையான ஆயுத தளபாடங்களுடன் இரகசியமாக கொழும்புக்குச் சென்றிருந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவை பகிரங்கமாக களத்தில் இறக்க வேண்டுமென செயற்பட்ட இலங்கை அரசின் இறுதிக் கட்ட காய் நகர்த்தலாகவே கோத்தபாயவின் இந்த மிரட்டல் கருதப்படுகிறது.

வழக்கமாக இந்தியாவிடம் உதவி கேட்டு அடிபணியும் இலங்கையரசு இம்முறை சீனா, பாகிஸ்தானை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைத்துள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கியிருப்பதும் தற்போதும் வழங்கி வருவதும் இந்தியாவுக்கு தெரியாத விடயமல்ல. ஏதோ முதல் தடவையாக உதவி கேட்டு சீனா, பாகிஸ்தானிடம் செல்லப் போவது போன்று கோதாபய கதைவிட, சீனா, பாகிஸ்தானிடம் இலங்கை உதவிகேட்டுச் செல்ல அனுமதிக்க முடியாதென்பதால் தாமே உதவி செய்வோமென கூறி தமிழர்களின் காதில் நாராயணன் பூ சுற்றுகிறார்.

ஈழத்தமிழர்கள் தமது விடுதலைப் போராட்டத்தில் வெற்றியை எட்டிப்பிடிக்கும் நேரத்திலெல்லாம் ஏதோவொரு வகையில் குறுக்கிட்டு அதனைத் தடுத்து நிறுத்துவது இந்திய அரசின் எழுதப்படாத சட்டம். அதற்கேற்றவாறானவர்களே எப்போதும் பிரதமருக்கு அருகில் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது ஈழத்தமிழ் இனத்துக்கும், அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் துரோகம் செய்துகொண்டிருப்பவர்தான் நாராயணன்.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் குட்டையை குழப்பிவந்த ரொமேஸ் பண்டாரி, ஜே.என்.டிக்ஸிட் வரிசையில் தற்போது அந்தப் பணியை எம்.கே.நாராயணனும் சிறப்பாக செய்து வருகின்றார்.
இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முதல் தடவை சென்றபோது பிரதமரை சந்திக்க முடியாமல் போனதற்கும் இந்த நாராயணனே காரண கர்த்தா.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுத்தளம் பெருகிவருவதால் அதனை உடைப்பதற்காக தமிழக மீனவர்களைப் பகடைக்காய்களாக்கிய பெருமையில் பெரும் பங்கு இவரையே சேரும். இலங்கைக்கு உதவ வேண்டுமென்பதில் விடாப்பிடியாக நின்று செயற்பட்ட நாராயணன் தற்போது அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். இனி ஒளிவு மறைவின்றி இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகளை தாராளமாக செய்யும்.

தமிழ்நாட்டில் தமிழர்களையே இனக் குரோதத்துடன் பார்க்கும் மலையாளி கூட்டமே தற்போது இந்தியப் பிரதமரின் கால்களைச் சுற்றிப் படர்ந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலர் என அத்தனைபேரும் தமிழின விரோதப் போக்கைக் கொண்டவர்கள். தமது நாட்டு தமிழ் மக்களையே விரோதிகளாகப் பார்க்கும் இவர்கள் அயல்நாட்டு தமிழர்கள் மீதா அக்கறை காட்டப்போகிறார்கள்?

புராணக்கதைகளில் வரும் நாரதரின் கலகம் சுபத்திலேயே முடியும். ஆனால், தற்போது இந்திய நாராயணன் செய்யும் கலகம் இலங்கையில் பெரும் அழிவுகளையே ஏற்படுத்தப்போகிறது.

நன்றி: தினக்குரல்