Thursday, June 7, 2007

தொடரும் மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் ஆட்கடத்தல்கள் இன்று படுமோசமாக அதிகரித்துக் கொண்டே போகின்றன. அடுத்த நிமிடம் யார் கடத்தப்படுவாரோ என்ற அச்சத்தில் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வாழ்கின்றனர். படுகொலைச் சம்பவங்களோடு ஆட்கடத்தல்கள் சர்வசாதாரணமாகியுள்ளன.

மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் குடிகொண்டுள்ளது. மக்கள் நிம்மதியிழந்தவர்களாக விரக்தி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்து வெளியே போகும் ஒருவர் மீண்டும் வீடு திரும்பும் வரை நிச்சயமில்லாத நிலைமையே தொடர்கிறது. ஆட்கடத்தல்கள் குறித்து எத்தகைய குரல் எழுப்பப்பட்ட போதிலும் அரசு அது குறித்து அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை.

ஆரம்பத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காரணம் கற்பிக்கப்பட்டது. இன்று அந்த நிலைமாறி வெள்ளை வான் கடத்தல் என்ற பெயரில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அரசு மீது சுட்டு விரல் நீட்டும் அளவுக்கு விவகாரம் முற்றிப் போயுள்ளது. உண்மையும் அதுதான்.

சமீபத்தில், சர்வதேச செஞ்சிலுவை நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருவரை கடத்திக் கொலை செய்தது கருணா குழுவினர்தான் என்று இலங்கை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. கருணா குழு என்பது ராணுவத்தோடு சேர்ந்தியங்கும் ஒரு ஒட்டுப்படை.

இன்று தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் இன்றி ஆட்கள் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் வசதிபடைத்தவர்கள் இலட்சம், கோடி என்று பணத்தை அள்ளி வீசி விட்டு தப்புகின்றனர். வசதியில்லாத அப்பாவிகளுக்கு அதோ கதிதான். கடத்தப்பட்டவர் இரண்டொரு தினங்களில் எங்காவது ஓரிடத்தில் பிணமாகக்கிடப்பார். நாட்டின் பாதுகாப்புக்கு இன்று எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. பாதுகாப்பு விடயத்தில் மக்கள் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்து விட்டனர்.

இலங்கையில் தொடரும் இவ்வாறான படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் மனித உரிமை மீறல்களும் சர்வதேச மட்டத்தில் நாட்டை தலைகுனிய வைத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலாமிடத்துக்கு வரும் காலம் தொலைவிலில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. மக்களை நிம்மதியாக அச்சமின்றி வாழ வைக்கும் பிரதான பொறுப்பு அரசாங்கத்தையே சார்ந்திருக்கின்றது. ஆனால், நாட்டில் தொடரும் மோசமான சம்பவங்கள் குறித்து அரசு மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு பொறுப்பற்ற விதத்தில் தட்டிக்கழித்துச் செயற்படுவது பெரும் அதிர்ச்சியையே தருகிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச சமூகம் கண்டனக் குரல் எழுப்பியுள்ளது. இது குறித்துக் கூட அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மனிதனை மனிதன் மனிதாபிமான அடிப்படையில் நேசிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் அச்சமின்றியுமே வாழ விரும்புகின்றோம். ஒரு மனிதனின் வாழும் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமை கிடையாது. இந்த மனிதாபிமான உரிமையை பாதுகாத்து அச்சம், பீதியற்ற ரீதியில் நிம்மதியாக ஒவ்வொரு பிரஜையும் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அரசு உணரவேண்டும்.

ஏட்டிக்குப் போட்டியாக சவால்களையும் மறுப்புகளையும், சொல்வதால் அறிக்கை விடுவதால் பலனெதுவும் கிட்டப்போவதில்லை. மனித உரிமைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

0 comments: