இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் அவசர டில்லி விஜயமும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் திடீர் தமிழ் நாட்டுப் பயணமும் அரசியல் இராணுவ ரீதியில் இலங்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன.
ஆயுதங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் `ரோ' வின் உயரதிகாரியுமான எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தியா வந்திருந்த இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தியா உடனடியாக இலங்கைக்கு ஆயுத தளபாட உதவிகளை வழங்கவேண்டுமெனக் கோரியதுடன் மறுத்தால் சீனா பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து தமக்குத் தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்வோமெனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் மிரட்டியுள்ளார்.
கோத்தபாயவின் மிரட்டலையடுத்தே இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு தயாரென அவசரமாக அறிவித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து சம்மதிக்க வைப்பதற்காக கடந்த வியாழக்கிழமை அவசர விஜயமொன்றை மேற்கொண்டு தமிழகத்திற்கு வந்தார். இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை கருணாநிதியை டில்லியில் சந்தித்த நாராயணன் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் கருணாநிதி உடனடியாகவே அதனை மறுத்து விட்டார்.
28 ஆம் திகதி தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி வருவதாக இருந்த நிலையிலேயே திடீரென அதற்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை டில்லிக்கு வந்திறங்கிய இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் இந்திய உயர் மட்டங்களுடன் அதிரடிச் சந்திப்புகளை மேற்கொண்டார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே.நாராயணன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் சேகர்தத், இராணுவத் தளபதி ஜே.ஜே.சிங், கடற்படைத் தளபதி சுரேஷ்மேத்தா, விமானப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் பாலி ஹோமி ஆகியோருடன் சந்திப்புகளை நடத்திய கோத்தபாய தமது கோரிக்கைளை முன்வைத்தார்.
இச் சந்திப்புகளின்போது வான்புலிகளால் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் தாழ்வாகப் பறக்கும் விமானங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய இடத்துக்கு இடம் கொண்டுசெல்லக்கூடிய நவீன ராடர்களையும் கோரிய கோதாபய, கடற்புலிகளை ஒடுக்க இந்தியப் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்பையும் இலங்கை இந்திய கடற்படையின் கூட்டு ரோந்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களின் பட்டியலை இச் சந்திப்புகளின்போது கையளித்த கோத்தபாய உடனடியாக குறிப்பிட்ட ஆயுத உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்க வேண்டுமெனவும் மறுத்தால் சீனா, பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து இலங்கை தமக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யுமெனவும் இலங்கைக்கு உதவி செய்வதற்காக மேற்குறித்த நாடுகள் காத்துக்கொண்டிருப்பதாகவும் மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
கோத்தபாயவின் மிரட்டலையடுத்தே டில்லி வந்த கருணாநிதியை சந்தித்த பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு இந்தியா தயாரென கூறி கருணாநிதியை நாடி பிடித்துப் பார்த்தார். ஆனால், நாராயணனின் கூற்றுத் தொடர்பில் கருத்துக்கூறிய கருணாநிதி இலங்கை - இந்திய கடற்படைக் கூட்டு ரோந்து தொடர்பான தி.மு.க.வின் கருத்தில் மாற்றம் எதுவுமில்லையென அறிவித்தார்.
இதையடுத்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய்வதற்கென்ற போர்வையில் வியாழக்கிழமை தமிழகத்திற்கு வந்த நாராயணன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை இந்திய கடற்படையின் கூட்டு ரோந்து தொடர்பில் மத்திய அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தியதுடன் புலிகளால் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்தும் ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க இதுவே சிறந்த வழியென்றும் கூறியபோதும் கருணாநிதி இதற்கு உடன்படவில்லை. இதேவேளை, இலங்கையரசுக்கு ஆயுத உதவிகளை வழங்குவதெனத் தீர்மானித்த பின்னரே நாராயணன் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டு கருணாநிதியை `தாஜா' பண்ண முயற்சித்தார்.
இலங்கைக்கு தற்பாதுகாப்பு சாதனங்களை மட்டுமே தாம் வழங்குவதாகவும், அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் எதையும் வழங்கவில்லை எனவும் கூறி இலங்கை இந்தியாவின் கையை விட்டுப்போனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கருணாநிதிக்கு விளக்கினார்.
கருணாநிதியை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த நாராயணன் இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு சாத்தியமில்லையெனத் தெரிவித்ததுடன், ஆயுதங்களை வாங்குவதற்காக சீனா- பாகிஸ்தான் நாடுகளிடம் இலங்கை செல்வதை இந்தியா ஒருபோதும் விரும்பாதெனவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் இலங்கைக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளை நியாயப்படுத்த நாராயணன் முயற்சித்தார். அத்துடன் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாதென இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் தாம் கடுமையாக கூறியிருப்பதாக தெரிவித்த நாராயணன் 5 தமிழக மீனவர்களை புலிகளே சுட்டுக் கொன்றதாகவும் குற்றம் சாட்டினார்.
புலிகளிடம் விமானங்கள் இருப்பதை இந்தியா விரும்பவில்லையெனச் சுட்டிக் காட்டிய நாராயணன் இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ராமதாஸ், வைகோ போன்றோர் தொடர்பாக கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
இலங்கை - இந்திய கடற்படையின் கூட்டு ரோந்துக்கு தமிழக அரசை இணங்க வைப்பதற்காகவே தமிழக மீனவர்களின் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன், விடுதலைப் புலிகள் தொடர்பாக தமிழகத்தில் விஷமப் பிரசாரங்களும் முடுக்கிவிடப்பட்டன. இரும்புக் குண்டு கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், மீனவர்கள் கடத்தலென திட்டமிடப்பட்டே பல சம்பவங்கள் தமிழகத்திலும் தமிழக கடற்பரப்புகளிலும் நடத்தப்பட்டன. இலங்கைக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளை வழங்கி வந்த இந்தியா அதனை பகிரங்கமாகச் செய்வதற்காகவே அதற்குரிய களநிலையை தமிழகத்தில் ஏற்படுத்தி மக்களின் `விடுதலைப் புலி ஆதரவு' மனநிலையைச் சிதைக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும், அது சரிவராது போகவே இலங்கை இந்தியாவின் கைகளை விட்டுப் போவதை ஏற்கமுடியாதெனக்கூறி, ஆயுத உதவிகள் வழங்கப் போகின்றோமென்பதை தமிழகத்தில் வைத்தே மத்திய அரசு அறிவித்துவிட்டது.
தமிழகத்திலுள்ள பல கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இரகசியமான முறையில் இலங்கை அரசுக்குத் தேவையானளவு ஆயுத உதவிகளை இந்தியா வழங்கிவந்துள்ள நிலையில் சீனா, பாகிஸ்தானிடம் ஆயுதம் கேட்டுச் செல்ல இலங்கையை விடமாட்டோமென தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவித்திருப்பதன் மூலம் இலங்கைக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் முதல் பேரழிவு ஆயுதங்களை வழங்க இந்தியா தயாராகி விட்டமை புலனாகின்றது.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தபாய ராஜபக்ஷ டில்லிக்கு விஜயம் செய்ய முன்னரே பலதடவைகள் இரகசியமாக ஆயுத உதவிகளை வழங்கிய மத்திய அரசு கோத்தபாய டில்லி வருவதற்கு சில தினங்களுக்கு முன்னரும் விமானமொன்றின் மூலம் ஆயுத உதவிகளை அனுப்பி வைத்திருந்தது.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக அன்ரனோவ் விமானமொன்றே இலங்கைக்குத் தேவையான ஆயுத தளபாடங்களுடன் இரகசியமாக கொழும்புக்குச் சென்றிருந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவை பகிரங்கமாக களத்தில் இறக்க வேண்டுமென செயற்பட்ட இலங்கை அரசின் இறுதிக் கட்ட காய் நகர்த்தலாகவே கோத்தபாயவின் இந்த மிரட்டல் கருதப்படுகிறது.
வழக்கமாக இந்தியாவிடம் உதவி கேட்டு அடிபணியும் இலங்கையரசு இம்முறை சீனா, பாகிஸ்தானை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைத்துள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கியிருப்பதும் தற்போதும் வழங்கி வருவதும் இந்தியாவுக்கு தெரியாத விடயமல்ல. ஏதோ முதல் தடவையாக உதவி கேட்டு சீனா, பாகிஸ்தானிடம் செல்லப் போவது போன்று கோதாபய கதைவிட, சீனா, பாகிஸ்தானிடம் இலங்கை உதவிகேட்டுச் செல்ல அனுமதிக்க முடியாதென்பதால் தாமே உதவி செய்வோமென கூறி தமிழர்களின் காதில் நாராயணன் பூ சுற்றுகிறார்.
ஈழத்தமிழர்கள் தமது விடுதலைப் போராட்டத்தில் வெற்றியை எட்டிப்பிடிக்கும் நேரத்திலெல்லாம் ஏதோவொரு வகையில் குறுக்கிட்டு அதனைத் தடுத்து நிறுத்துவது இந்திய அரசின் எழுதப்படாத சட்டம். அதற்கேற்றவாறானவர்களே எப்போதும் பிரதமருக்கு அருகில் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது ஈழத்தமிழ் இனத்துக்கும், அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் துரோகம் செய்துகொண்டிருப்பவர்தான் நாராயணன்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் குட்டையை குழப்பிவந்த ரொமேஸ் பண்டாரி, ஜே.என்.டிக்ஸிட் வரிசையில் தற்போது அந்தப் பணியை எம்.கே.நாராயணனும் சிறப்பாக செய்து வருகின்றார்.
இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முதல் தடவை சென்றபோது பிரதமரை சந்திக்க முடியாமல் போனதற்கும் இந்த நாராயணனே காரண கர்த்தா.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுத்தளம் பெருகிவருவதால் அதனை உடைப்பதற்காக தமிழக மீனவர்களைப் பகடைக்காய்களாக்கிய பெருமையில் பெரும் பங்கு இவரையே சேரும். இலங்கைக்கு உதவ வேண்டுமென்பதில் விடாப்பிடியாக நின்று செயற்பட்ட நாராயணன் தற்போது அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். இனி ஒளிவு மறைவின்றி இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகளை தாராளமாக செய்யும்.
தமிழ்நாட்டில் தமிழர்களையே இனக் குரோதத்துடன் பார்க்கும் மலையாளி கூட்டமே தற்போது இந்தியப் பிரதமரின் கால்களைச் சுற்றிப் படர்ந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலர் என அத்தனைபேரும் தமிழின விரோதப் போக்கைக் கொண்டவர்கள். தமது நாட்டு தமிழ் மக்களையே விரோதிகளாகப் பார்க்கும் இவர்கள் அயல்நாட்டு தமிழர்கள் மீதா அக்கறை காட்டப்போகிறார்கள்?
புராணக்கதைகளில் வரும் நாரதரின் கலகம் சுபத்திலேயே முடியும். ஆனால், தற்போது இந்திய நாராயணன் செய்யும் கலகம் இலங்கையில் பெரும் அழிவுகளையே ஏற்படுத்தப்போகிறது.
நன்றி: தினக்குரல்
Sunday, June 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment