Friday, December 21, 2007

அமெரிக்கா மறுப்பு!! இந்தியா அழைப்பு!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்கு இடமளிப்பது மற்றும் அமைப்புகளும் ஊடகங்களும் நாட்டின் எந்தவொரு இடத்துக்கும் பிரவேசிக்கும் வசதிகளை வழங்குவது உட்பட மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றும்வரை இலங்கைக்கு யுத்த உபகரணங்கள் வழங்குவதை இடைநிறுத்த அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு இலங்கை அரசு ஒருபோதும் இணங்கிவராது என்று அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

""புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புப் படையினர் யுத்தம் செய்கையில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணிவதற்கு ஒருபோதும் முடியாது'' என அரசின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

வளைகுடா யுத்தத்தின்போது குவைத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அமெரிக்க ஊடகங்கள் எந்தவொரு இடங்களுக்கும் செல்வதற்கு அமெரிக்க இராணுவம் இடமளிக்கவில்லை. அந்த நிலையில் அமெரிக்கா இந்நாட்டில் பயங்கரவாதிகள் இருக்கும் பிரதேசங்களுக்குப் போவதற்கு இடமளிக்குமாறு கோருவது கேலிக்குரியது'' என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா இந்நாட்டுக்கு யுத்த உபகரணங்களை விற்பனை செய்வதை நிறுத்துவதால் இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாதெனவும் அவர் கூறினார்.

""அண்மையில் அமெரிக்கா இந்நாட்டுக் கடற்படைக்குத் தாக்குதல் ஆயுதமற்ற 10 படகுகளை வழங்கியது. அது குதிரையைக் கொடுத்து கடிவாளத்தை வழங்காத நடவடிக்கையாகும்".

"அமெரிக்காவின் யுத்த உபகரணங்களுக்குப் பதிலாக ஐந்து நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன'' என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விமானப்படையை இந்திய விமானப்படையுடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்திகை பார்க்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அமைதி நிலவக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்து வருவதாகவே தெரிகிறது.

அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் அயல்நாடுகளில் யுத்தத்தை ஊக்குவிக்கிறது. காலச்சுழற்சியில் அதன் பலனை இந்தியாவிலேயே அறுவடை செய்யும்.

வாழ்க இந்தியா!

Sunday, December 16, 2007

இந்த வரைபடம் இலங்கை மக்களின் மனநிலையை தெளிவாக காட்டுகிறது


இலங்கை ஜனாதிபதியின் செயல்பாடுகளை பற்றிய ஒரு சர்வே.

இது இலங்கை மக்களின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது.

சிங்கள மக்கள் எந்த அளவு யுத்தத்தை விரும்புகிறார்கள் என்பது புரிகிறது.


யுத்தத்திற்கான 2008ம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில் சமாதானம் எப்படி வருமென்றுதான் புரியவில்லை.

வரைபடத்தில் UPCOUNTRY TAMIL எனக் குறிப்பிடப்பட்டிருப்பது இந்திய வம்சாவழித்தமிழரையே!

மக்களின் விருப்பத்திற்க்கு எதிராக இந்திய வம்சாவழி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தத்திற்க்கான வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, December 2, 2007

இந்தியாவின் இரட்டை வேடம்!!

ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் இணைந்து தில்லியில் நடத்திய மாநாட்டில்:

ராணுவ ரீதியாக இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணமுடியாது எனவும் இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் ரீதியான ஒரு தீர்வின் மூலமே இப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகளை பாதுகாக்கவும், சர்வதேச சட்டங்களை மதித்து பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படியும் கேட்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 திகதி இந்த மாநாட்டை இந்திய பிரதமரும் போர்த்துக்கல் நாட்டின் பிரதமரும் இணந்து நடத்தியுள்ளனர்.

அப்படியானால் ஏன் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களையும் பண உதவிகளையும் வழங்குகிறது?

எதற்க்காக/யாரை ஏமாற்ற இப்படி ஒரு போலி அறிக்கை?

ஏன் இந்த இரட்டை வேடம்!?

ஆயுத உதவிகளை அள்ளிக் கொடுக்கும் அயல்நாடுகள் மனிதாபிமானம் பற்றி பேசுகின்றன.

வடக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மௌனம் சாதித்த இந்தியாவும், ஐ.நா.வும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தெற்கில் ஒரு தாக்குதல் நடைபெற்ற பின்பே தங்கள் மௌனத்தை கலைத்துள்ளன.

வடக்கிலும் கிழக்கிலும் அழிவுகள் ஏற்படும் போதெல்லாம் மௌனம் சாதிப்பவர்கள் தெற்கில் ஏதாவது நடந்ததும் துடித்து விடுகின்றனர்.

வடக்கே மோசமான தாக்குதல் இடம்பெறும் போது தெற்கில் அதன் பிரதிபலிப்பு இருக்குமென்பது இன்று நேற்றுத் தெரிந்ததல்ல, இனப்பிரச்சினை தொடங்கிய காலம் முதலே என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இது இவ்வாறிருக்க இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்‌ஷ டில்லி வந்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ஜனாதிபதி பீரதிபா பட்டீல் ஆகியோரை சந்தித்துள்ளார். யுனெஸ்கோவின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் டில்லி வந்ததாக கூறப்பட்டாலும் அதனைத் தாண்டிய சில விடயங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் டில்லி விஜயம், அவரின் பாரியாரின் டில்லி விஜயம், இலங்கை அமைச்சர்களின் டில்லி படையெடுப்பென டில்லியுடனான உறவை நெருக்கமாக்க இலங்கை கடுமையாக முயன்று வருகின்றது. இதற்கான ஏதுவான நிலையை டில்லியும் இடையிடையே வெளிப்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்படவுள்ள 60 ஆவது சுதந்திர தினத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் சமாதானம் ஏற்படக்கூடாதென்ற விதத்திலேயே இந்தியா கவனமாக காய் நகர்த்துகிறது.

இந்திய- இலங்கை உறவுகள் இவ்வாறு நெருக்கமடைந்துவரும் நிலையில் ஈழப் போராட்டமும் தீவிர கட்டத்தை நெருங்குவதால் இந்தியா இலங்கை விவகாரத்தில் முக்கிய பங்கொன்றை வகிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நிச்சயமாக இது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கப்போவதில்லையென்பது மட்டும் உறுதியானது.

தன்னுடைய 13 மாநிலங்களில் நக்ஸலைட் பிரச்சினையை எதிர்நோக்கும் இந்தியா அண்டைநாடான இலங்கையின் எரியும் இனப்பிரச்சினைக்கு எண்ணை ஊற்றி வளர்க்கிறது.

வாழ்க இந்தியா!!